பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வஞ்சமகற்றி வாழ்வை விரும்பில் துஞ்சும் பொய்யையொழி.
காமவெகுளி மயக்கமகற்றி, ஏமவிதயத்திரு
பாரதம் பத்தும் பாறைப்பதிந்து சீரது தந்தான் சினன்.

மாரனைவென்று முத்திவழிக்கு முதல்வனாகவும் ஜெயமுத்தி என்னும் ஜின்முத்திரை அருளிய ஜினன் அம்மலையில் சிலநாள் தங்கி கலைவடிவும் சிலைபதிவும் அளித்தக்கால் (சினன் மலை என்றும், ஜினன் மலை என்றும்) சைனமலை என்றும் அதற்குப் பெயருண்டாயிற்று.

பரம்பரபோதம் - வீரசோழியம்

பேரரக்கரோரைவர்க்கரவமிழ்தம் பொழிந்தனையே
ஆரமிழ்த மணிநாகர்க்குலமுய்ய அருளினையே
வார்சிறைப் புள்ளரையர்க்கும் வாய்மெநெறி பகர்ந்தனையே
பார்மிசை இரைந்தும் பாவின்றி பயிற்றினையே.

சிலப்பதிகாரம்

வெங்கநெடு வேள்வில் விழாக்காணும்,
பங்குனி முழக்கத்துப் பனியரசு யாண்டுளன்.

சீவகசிந்தாமணி

காசறு துறவின்மிக்க கடவுளர் சிந்தைபோல,
மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயனமுன்னி,
யாசறு நடக்குநாளுளைங்கணை கிழவன் வைகிப்,
பாசறை பரிவு தீர்க்கும் பங்குனி பருவஞ்செய்தான்.

மணிமேகலை

ஆலமர்ச் செல்வன் மதன்விழாக் கோல்கொள,
பாலமர் கொள்ளும் பங்குனி பருவங்,
காண்மினோவெனக் கண்டு நிற்குனரும்.

பின்கலை நிகண்டு

சிறந்திடுங் குன்ற வேந்தன் 'குணபுத்திரன் சீலநூலை,
மறஞ்செயாவாறே கற்று மதிமயக்கத்தினாலே,
குறைந்திடுந் தமது மேற்கோள் கொளீஇய மற்றது கரந்தே,
அறிந்ததும் அறியாதாரைப் போறலே அறி மடந்தான்.

விம்பாசார நகரமெங்கும் வரிவடிவ பாஷையும் தசபாரகோஷமும் பரவியவுடன் ஜினன் அந்நகரம்விட்டகன்று பூர்வம் பாலிபாஷையில் வாரணாசி என்னுங் காசிநகரடைந்து முதல் சங்கத்தை ஸ்தாபித்தார்.

பின்கலை நிகண்டு

தருமராசன் முந்நிந்திரன் சினன் பஞ்சதாரைவிட்டே
அருள்சுரந்தவுணர்க்கூட்டுந் ததாகதன் ஆதிதேவன்
விரவுசாக்கையனே சைனன் விநாயகன் சினந்தவிர்ந்தோன்
அரசுநீழலிலிருந்தோன் அறி அறன் பகவன் செல்வன்.

வினாயகரென்னும் புத்தபிரான் பாரதத்தை மலையில் எழுதியுள்ளார் என்பதும் மகாபுராண பாடம்.

பாரதமென்பதுவும் தசபாரமென்பதும் பாரமிதமென்பதும் செய்யுட்களாய் இராது வாசகநடையில் எழுதியுள்ள தசசீலத்தின் பெயராம்.

விம்பாசாரன் தேசத்துள்ளக் குன்றின்மீது சிலநாள் தங்கி தசசீலங்களைப் பதிவு செய்து தசரத தன்மசக்கரம் உருட்டியக்கால் குன்றை வேந்தனென்றும் வேறுபெயரால் அழைக்கப்பெற்றார். ஆதி நூலென்றும், ஆதிவேதமென்றும், முதநூலென்றும் வழங்கிய திரிபீட வாக்கியங்களை வரிவடிவாம் அட்சரங் களில்லாமல் ஒலிவடிவாம் வார்த்தையால் கூறவும் செவியால் கேட்கவும் இருந்தகாலத்தில் அவற்றை ஏழு பேதமாக வழங்கி வந்தார்கள். அதாவது, ஆதிநூல், எழுதாக்கேள்வி, ஆரணம், ஒத்து, சாசை, சுருதி, இருக்கு என்பதுவாம். வரிவடிவாம் அட்சரங்களையும் பகவன் ஈன்றருளியப் பின் அவர் ஆதி நூலை எழுவகைப் பெயரால் வழங்கி வந்தார்கள். அதாவது ஆகமம், ஆரிடம், பிடகம், தந்திரம், பனுவல், சமயம், சூத்திரம் என்பதுவாம். ஆதிவேதம், ஆதி நூலென வழங்கும் திரிபீடம், திரிபிடகமென்னும் திரிபேத வாக்கியங்கள் யாதெனில் -