பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 237

முதலாவது துக்க சத்யம்

ஓ! சகோதிரர்களே! துக்கமென்பது தூய்மெயான சத்தியம். அஃது யாதென்பீரேல்:

பிறப்பது துக்கம், பிணி துக்கம், மூப்பு துக்கம், மரணம் துக்கம், பொருளை சம்பாதித்தலுந் துக்கம், அது அழிதலுந்துக்கம், வேண்டிய பொருள் கிட்டாதது துக்கம், சுருக்கமாகச் சொல்லின் ஐம்புலப் பற்றுக்களே துக்கமென்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! பிறப்பென்பது யாதெனில்:

உற்பேதம் பிறப்பு, கற்போற்பத்தி பிறப்பு, பஞ்சஸ்கந்த உருவமாதல் பிறப்பு, சுருக்கத்தில் ஐந்து புலன்கள் சேர்ந்து உருவமைந்து தோற்றலே பிறப்பென்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! பிணி என்பது யாதெனில்:

ஆசையாம் அதிபோகத்தால் உண்டாதல் பிணி, அல்லலடைதற் பிணி, ஆறா சினம் பிணி, அதிபுசிப்புப் பிணி, சுருக்கமாக தேகம் சகிக்கக்கூடாத துன்பமடைதலைப் பிணி என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே மூப்பென்பது யாதெனில்:

முதிர்ந்த வயதுற்று தள்ளாடல் மூப்பு, நரை திறை தோன்றுதல் மூப்பு, நாடிகள் தளர்தல் மூப்பு, சுருக்கத்தில் ஐம்புல நுகர்ச்சிகள் குறைந்துக்கொண்டு வருதலே மூப்பென்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! இறப்பென்பது யாதெனில்:

பிறிவு இறப்பு, மறைதல் இறப்பு, தேகம் நீற்று நீராதல் இறப்பு, இரு ளடைதல் இறப்பு, சுருக்கத்தில் பஞ்சஸ்கந்தங்களின் பிரிவுகளாற்றாது ஐம்புல நுகர்ச்சிகளால் பஞ்சாவஸ்தைகள் தோன்றி மடிதலை இறப்பென்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! பஞ்சஸ்கந்தங்கள் யாதெனில்:

முதலாவது ரூபஸ்கந்தம். இதையே தேகமென்னப்படும். இரண்டாவது வேதனா ஸ்கந்தம். இதையே உணர்ச்சி என்னப்படும். மூன்றாவது சன்ஹா ஸ்கந்தம். இதையே அறுவகை இந்திரியங்களின் உணர்ச்சிகள் என்னப்படும். நான்காவது சங்காரா ஸ்கந்தம். இதையே மனோவாக்குக் காயங்களால் உண்டாகும் உணர்ச்சிகள் என்னப்படும். ஐந்தாவது விக்ஞானா ஸ்கந்தம். இதையே அறிவென்னப் படும். இவ்வைந்தும் அமைந்துள்ள உருவத்தையே வடமொழியில் ஆன்மனென்றும், புருஷனென்றும், தென் மொழியில் மானிடனென்றும், மகனென்றுங் கூறப்படும்.

ஓ! சகோதிரர்களே! ரூபஸ்கந்தங்கள் யாதெனில்:

அஃது நான்கு வகைப்படும். முதலாவது படவிதாது. இரண்டாவது அபோதாது. மூன்றாவது தேஜோதாது. நான்காவது வாயுதாது என்னப்படும்.

முதலாவது, படவிதாதுவின் விவரம். உறுதியானதுங் கனத்ததுமான உரோமம், நகம், பல், தோல், சதை, நரம்பு, எலும்பு, ஈரல், இருதயம், குண்டிக்காய், மண்ணீரல், நுரையீரல், இரைக்குடல், குடல், மணிக்குடல் மற்றும் தடித்த உருவங்களுள்ளதை படவிதாது என்னப்படும். பண்டி அல்லது வண்டி என்றபோது சக்கரம், இருசு, ஏற்கால், முதலியவைகள் சேர்ந்துள்ள வஸ்துவாகும். அங்ஙனமின்றி இருசைமட்டும் வண்டி என்று கூறலாகா. வீடென்றபோது கல், மண், கதவு, சன்னல், தூண் முதலியவைகள் சேர்ந்துள்ள வஸ்துவாகும். அங்ஙனமின்றி தூணைமட்டும் வீடென்று கூறலாகா. சதை, எலும்பு, நரம்பு முதலிய படவிதாதுக்களே ரூபஸ்கந்த முதலாதாரங்களாகும்.

சகோதிரர்களே! அப்போதாதென்பது யாதெனில் : உதிரம், கபம், சீழ், வியர்வை, நிணநீர், கண்ணீர், சிறுநீர், கீலூன் முதலியவைகளேயாம். தேஜோ தாதுவென்பது யாதெனில்: கோபாக்கினி, பசியாக்கினி, காமாக்கினியாகும் மூன்றுக்கும் ஆதாரமாகிக் கீல்களிலுள்ள ஊன்களை உருக்கி நீட்டவும், முடக்கவும் முன்னாதாரமாகு முன்னனலென்னப்படும். வாயுதாதென்பது யாதெனில்: சுவாசமென்னும் பெயர்கொண்டு உதிரத்தைப் பரவச்செய்தற்கு