பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஆதாரமாகும், ஆவி என்னப்படும். இத்தியாதி மண், நீர், தீ, காற்று சேர்ந்தவைகளை உருவமென்றும், ரூபமென்றும், தேகமென்றுங் கூறப்படும்.

ஓ! சகோதிரர்களே! வீடென்றபோது கல், மண், கதவு, தூண், சன்னல் முதலியவைகள் சேர்ந்துள்ள வஸ்துவாகும். அதேபிரகாரம் நரம்பு, சதை, தோல், எலும்பு முதலியவைகள் சேர்ந்துள்ளதையே நாம் தேகமென்றுங் கூறுகிறோம். |

ஓ! சகோதிரர்களே! சுத்தபார்வையையுடைய ஒருவன் எப்பொருளையும் பார்க்காமலும் கண்ணிற்கும் பொருளுக்கும் சம்பந்தமில்லாதிருக்குமாயின் அதற்குத் தக்க உணர்ச்சியின் ரூபந்தோன்றா.

சுத்த பார்வையை உடைய ஒருவன் ஒரு பொருளைப்பார்த்து கண்ணிற்கும் பொருளுக்கும் சம்பந்தமில்லையாயின் அப்போதும் அதற்குத் தக்க உணர்ச்சியின் ரூபந்தோன்றா.

ஓ! சகோதிரர்களே! சுத்தபார்வையையுடைய ஒருவன் ஒரு பொருளைப் பார்த்து கண்ணிற்கும் பொருளுக்கும் சம்பந்தமிருப்பின் அப்போது அதற்குத்தக்க உணர்ச்சியின் ரூபந்தோன்றும். ஆகவே ஏதுக்குத் தக்க உணர்ச்சி உதிக்கின்றது. எதுவில்லாவிடில் உணர்ச்சி தோன்றா. உணர்ச்சி உதிப்பதற்கு ஏதுக்களே காரணம்.

1. கண்ணுக்கு உருவந்தோன்றி உதிக்கும் உணர்ச்சிக்கு ஸக்சுவிக்ஞானம் அல்லது ஸக்சு பிரசாதரூபமென்றும், 2. காதிற்கு சப்தம் கேட்டு அதினின்று உதிக்கும் உணர்ச்சிக்கு சுரோட்சவிக்ஞானம் அல்லது சுரோட்சபிரசாத ரூபமென்றும், 3. மூக்குமுகர்ந்து அதினின்று உதிக்கும் உணர்ச்சிக்கு ஆக்ராஹணவிக்ஞானம் அல்லது கராஹணபிரசாத ரூபமென்றும் 4. நாவு ருசி பார்த்து அதினின்று உதிக்கும் உணர்ச்சிக்கு சுவை விக்ஞானம் அல்லது தீவபிரசாத ரூபமென்றும், 5. தேகத்தோடு தேகம் உராய்ந்து அதினின்று உதிக்கும் உணர்ச்சிக்கு காயவிக்ஞானம் அல்லது காயபிரசாத ரூபமென்றும், மனத்தோடு எண்ணம் கலந்து அதினின்று எழும் உணர்ச்சிக்கு மனோ விக்ஞானம் அல்லது மனோபிரசாத ரூபமென்றுங் கூறப்படும்.

(விக்ஞானம்)1. ஒவ்வொரு க்ஷணத்திலும் தேகத்தினின்று உதிக்கும் உணர்ச்சிகள் யாவும் ரூபஸ்கந்தத்தைச் சேர்ந்தவை. 2. எதெது உணர்ச்சியை உண்டாக்குகின்றதோ அவை வேதனாஸ்கந்தத்தைச் சேர்ந்தவை. 3. எதெது புலன்களின் உணர்ச்சியை உண்டாக்குகின்றதோ அவை சன்ஹாஸ்கந்தத்தைச் சேர்ந்தவை 4. எதெது மனோவாக்கு காயத்தினின்று உணர்ச்சியை உண்டாக்குகின்றதோ அவை சங்காராகந்தத்தைச் சேர்ந்தவை. எதெது சித்தத்தின் உணர்ச்சியைச் சேர்ந்ததோ அவை யாவும் விக்ஞனஸ்கந்தத்தைச் சேர்ந்தவை.

ஓ! சகோதிரர்களே! தோற்றத்தையும் அதன் மடிவையும் உணர்ச்சியின் வளர்ச்சியையும் அதன் விருத்தியையும் ரூபஸ்கந்தம், வேதனாஸ்கந்தம், சன்ஹாஸ்கந்தம், சங்காராஸ்கந்தம் இவைகளின் தனித்தனி வேறுபாடுகளை ஒருவன் விவரித்துக் கூறுவது அசாத்தியம்.

ஓ! சகோதிரர்களே! சகலமும் அநித்யமாயிருக்கிறது. தேகம் அநித்யம், உணர்வு அநித்யம், காட்சி அநித்யம், அறுவகை இந்திரியங்களால் உண்டாகும் உணர்ச்சி அநித்யம், தோன்றி கெடுவதும் விசாரித்து மயங்குவதுமாகிய அறிவும் அநித்யம். ஆனால் எது அநித்யமாயிருக்கின்றதோ அதே துக்கம். நிலையற்றதும் வருத்தமுள்ளதும் மாறக்கூடியதுமான இவைகளை ஒருவன் இது என்னுடையது இதே நானாயிருக்கின்றேன் இதே நான் என்று கூற பாங்கிறாது.

ஓ! சகோதிரர்களே! எதெது ரூபஸ்கந்தத்தைச் சேர்ந்ததாயிருந்தாலும், வேதனாஸ்கந்தத்தைச் சேர்ந்ததாயிருந்தாலும், சன்ஹாவைச்சேர்ந்ததா யிருந்தாலும், சங்காராவைச் சேர்ந்ததாயிருந்தாலும் அல்லது விக்ஞானத்தைச் சேர்ந்ததா யிருந்தாலும், ஒருவனுடையதாயிருந்தாலும், மற்றவனுடையதாய் இருந்தாலும், சுத்தமாயிருந்தாலும், அசுத்தமாயிருந்தாலும், உயர்ந்திருந்தாலும், தாழ்ந்திருந்தாலும், தூரமிருந்தாலும், அருகிலிருந்தாலும் சத்தியத்தின்படி நுண்ணறிவால் உள்ளதை உள்ளபடி தெரிந்தவன் அவை தன்னுடையதல்ல என்றும் அவனுடையதல்லவென்றும் நான் என்பது கிடையாதென்றுங் கூறுவன்.