பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 239

ஓ! சகோதிரர்களே! எவனொருவன் தன் தேகத்தால் ஆனந்தப்படு கின்றானோ உணர்வில் ஆனந்தப்படுகின்றானோ காட்சியில் ஆனந்தப்படு கின்றானோ அறுவகை இந்திரியங்களால் உண்டாகும் உணர்ச்சி நிலையினால் ஆனந்தப்படு கின்றானோ அறிவினில் ஆனந்தப்படுகின்றானோ அவன் துக்கத்தில் ஆனந்தப்படு கின்றான். துக்கத்தில் எப்போது ஆனந்தப்படுகின்றானோ துக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. ஆகையால் ததாகதன் கூறுவேனாக.

ஓ! சகோதிரர்களே! இவ்வகை துக்கத்திலுள்ள ஒருவன் எப்படி நகைக்கமுடியும். உலகப் பொருட்களின்பேரில் இச்சைகொண்டு எப்படி ஆனந்திக்க முடியும். உண்மெயாகவே இருளிலிருக்கின்றான். உங்களில் வயதுள்ள ஆணோ பெண்ணோ எண்பது, வயதுள்ளவனோ உள்ளவளோ, தொண்ணூறு வயதுள்ளவனோ உள்ளவளோ, நூறுவயதுள்ளவனோ உள்ளவளோ இவர்களை நீங்கள் பார்த்த தில்லையா? விருத்தாப்பியத்தால் மெலிந்தவர்களையும், கூனர்களையும், பார்த்த தில்லையா. அதேவிதமாறாது உங்களுக்கும் சம்பவிக்குமென்று உணரவில்லையா. அதே மூப்பு உங்களுக்கும் வருமென்று சிந்திக்கவில்லையா. வயதுள்ள ஆணோ பெண்ணோ பெருத்த வியாதிகளால் துன்பப்படுவதைப் பார்த்ததில்லையா. பிணியால் சூழப்பட்டுள்ளவர்களை நிறுத்தி வைத்தாலும் நிற்க சக்தியற்று விழுவதை நீங்கள் பார்த்ததில்லையா. அதேவிதமாய் உங்களுக்கும் சம்பவிக்குமென்று உணரவில்லையா. அதே பிணி உங்களுக்கும் வருமென்று சிந்திக்கவில்லையா. ஆணோ பெண்ணோ இறந்து இரண்டு அல்லது மூன்று நாள் இருந்து தேகம் உப்பலிட்டு நீலநிறமாக மாறி கேவலஸ்திதி அடைவதை நீங்கள் பார்த்ததில்லையா. அதே இறப்பு உங்களுக்கும் வருமென்று சிந்திக்கவில்லையா?

ஓ! சகோதிரர்களே! இந்த சம்சாரம் ஆதியந்தமில்லாததாய் இருக்கின்றது. இதன் அந்தரார்த்தத்தை உலகம் அறியாமலே இருக்கின்றது. உலகஜீவர்கள் பிறப்பதும் இறப்பதும் மறு ஜனனம் எடுப்பதுமாக மாளா பிறப்பிலும் இறப்பிலும் சுழன்றுக்கொண்டு வருகின்றனர்.

ஓ! சகோதிரர்களே! அனேக ஜென்மங்கள் தோறும் இறப்பாலும், பிறப்பாலும் விரும்பியதை அடையாது விரும்பாததை அடைதல். இவைகளின் துன்பத்தால் ஒவ்வொரு ஜென்மத்திலும் புலம்பி கண்ணீர்விட்ட ஜலத்தை அளவிடில் நான்கு மஹாசமுத்திரமும் இதன் முன் நிற்கா.

ஓ! சகோதிரர்களே! அனேக ஜென்மங்கள்தோறும் ஒவ்வொரு பிறப்பிலும் தாய் இறந்ததைப்பற்றி புலம்பவில்லையா, குமாரன் இறந்ததைப்பற்றி புலம்பவில்லையா. ஒவ்வொரு பிறப்பிலுஞ் சகோதிரர் இறந்ததைப்பற்றி புலம்பவில்லையா. சகோதரிகள் இறந்ததைப்பற்றி புலம்பவில்லையா. ஒவ்வொரு பிறப்பிலும் பொருள் காணாததைப்பற்றி துக்கிக்கவில்லையா. இவ்வகையாக தாய் தகப்பன், குமாரன், குமாரத்தி சகோதிரர் சகோதிரிகள் ஒவ்வொரு பிறப்பிலும் இறந்ததைக் கண்டுங்காணாத பொருள்களைப்பற்றி கண்டும் இவைகளால் அநேக ஜென்மங்களாக ஒவ்வொரு பிறப்பிலும் புலம்பிய கண்ணீரின் வெள்ளப்பெருக்கத்தின் முன் நான்கு மஹாசமுத்திரங்களும் நிற்கா.

சீவக சிந்தாமணி

பிரிந்தவற் கிரங்கிப்பேதுற்றழுத நங்கண்ணினீர்கள்
சொரிந்தவை தொகுத்து நோக்கிற்றொடு கடல் வெள்ள மாற்றா
முரிந்தநம் பிறவிமேனாண் முற்றிழை இன்னு நோக்கால்
பரிந்தழுவதற்குப்பாவா அடி யிட்டவாறு கண்டாய்.

ஓ! சகோதிரர்களே! அனேக ஜென்மங்களில் நீங்கள் ஒவ்வொரு பிறப்பிலும் கொலைபுரிந்து அவைகளால் பெருகிய இரத்தவெள்ளத்தின் முன் நான்கு மஹாசமுத்திரங்களும் நிற்கா.

ஓ! சகோதிரர்களே! அனேக ஜென்மங்கள் தோறும் ஒவ்வொரு இறப்பிலும் பிறப்பிலும் திருட்டினாலும் விபச்சாரத்தாலும் பெருகிய இரத்தவெள்ள பெருக்கின் முன் நான்கு மஹாசமுத்திரங்களும் நிற்கா.