பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 241

சந்தோஷிப்பிக்கச்செய்வதும், இன்ப சுகத்தைத் தருவதுமாயிருந்து அவ்வவ்விடங்களிலேயே அந்தந்த அவாக்கள் உதித்து எழும்பி நிலைத்து வேரூன்றுகிறது.

(அறுவகை சைதன்யங்கள்) பார்வை, கேள்வி, முகரல், உருசித்தல், பரிசித்தல், எண்ணல் இவைகளின் பேரிலுள்ள சிந்தனைகளும் நோக்கமும் மனிதர்களைச் சந்தோஷிக்கச் செய்து இன்ப சுகங்களைத் தருவதுமாயிருக்கின்றன. அவ்வவ்விடங்களிலேயே அந்தந்த அவாக்களுதித்து எழும்பி நிலைத்து வேரூன்றுகின்றது.

(அறுவகை அவாக்கள்) பார்வையாலுதிக்கும் அவா பற்று. கேட்டலால் உண்டாகும் அவா பற்று. உருசித்தலால் உண்டாகும் அவா பற்று. பரிசித்தலால் உண்டாகும் அவா பற்று. எண்ணங்களால் உண்டாகும் அவா பற்று. இத்தியாதி பற்றுக்கள் யாவும் மனிதர்களை சந்தோஷிப்பிக்கச் செய்வதும் இன்பசுகத்தைத் தருவதுமாயிருந்து அவ்வவ்விடங்களிலேயே அந்தந்த அவாக்கள் உதித்து எழும்பி நிலைத்து பாசபற்றில் வேரூன்றுகிறது.

(அறுவகை சிந்தனைகள்) பார்வையின் மீதும், கேட்டலின் மீதும், முகர்தலின்மீதும், சுவைத்தலின் மீதும், பரிசித்தலின் மீதும், எண்ணங்களின் மீதும் எண்ணுவதும் மறப்பதும் மறுபடியுந் தோன்றுவதுமாகிய உணர்வுகள் யாவும் மனிதர்களை சந்தோஷிப்பிக்கச்செய்வதும் இன்பங்களைத் தருவதுமாயிருந்து அவ்வவ்விடங்களிலேயே அந்தந்த எண்ணமும், மடிவும், மீளும் எண்ணமும் உதித்து எழும்பி நிலைத்து வேரூன்றுகிறது.

ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக ஒரு மனிதன் கண்ணால் ரூபத்தைப் பார்ப்பதும், காதால் சப்தத்தைக் கேட்பதும், மூக்கால் வாசனை அறிவதும், நாவால் உருசியைப் பார்ப்பதும், தேகத்தால் சுகத்தை அறிவதும், மனத்தால் எண்ணங்களை வளர்ப்பதுமாய் இருக்கின்றான். இவைகள் ஒன்றில் சுகத்தைக் காணுவானாயின் அதனில் ஆழ்ந்த நாட்டமுள்ளவனாய் இருப்பான். அதை விட்டு இவைகள் ஒன்றில் அசுகத்தைக் காணுவானாயின் வெறுப்படைவான். ஒருவன் சுகவேதனா சுகவுணர்ச்சியில் அப்பியாசப் பட்டாலும், துக்கவேதனா துக்க உணர்ச்சியில் அப்பியாசப்பட்டாலும், உபேக்க்ஷாவேதனா சுகத்திற்குந் துக்கத்திற்கும் நடுநிலையான உணர்ச்சியில் அப்பியாசப்பட்டாலும் அவைகளை நல்லவை என்று நம்பி அதே உணர்ச்சியில் தேற்சியடைந்து அவைகளில் ஐக்கியப்படுகின்றான். இவ்வகைச் செயலில் தேற்சியடைந்து ஐக்கியப்படுகிறவனிடம் (தன்ஹா ) ஆசை உதிக்கின்றது. தன்ஹா அவாவிலிருந்து (உபாதானா) பற்று உண்டாகின்றது. உபாதானா பற்றிலிருந்து (பவா) பிறப்புக்கு மூலமான கருமக்கூட்டம் உண்டாகின்றது. பவாவென்னுங் கருமக் கூட்டத்தினின்று (ஜாத்தி) பிறப்புண்டாகின்றது. பிறப்பினின்று பிணியும், மூப்பும், மரணமும், வலியும், அழுகையும், துன்பமும், கவலையும், ஏக்கமுமாகிய வினைப் பயன்கள் உண்டாகின்றன. துன்பமென்கின்ற கூட்டத்திற்கெல்லாம் இவைகள் தான் உற்பத்தி என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! மேற்கூறியுள்ளவைகளையே துக்கோற்பத்தியின் தூய்மெயான சத்தியமென்னப்படும். மனுக்கள் இம்மிருதுவான அவாவினால் தூண்டப்பட்டும், இம்மிருதுவான அவாவினால் இழுக்கப்பட்டும், இம் மிருதுவான அவாவினால் நடமாடியும் வருகின்றனர். இவ்வித வீணவாவால் அரசர்களுடன் அரசர்கள் போர்புரிவதும் நிமித்தகர்களுடன் நிமித்தர்கள் வாதிடுதலும், குடியானவர்களுடன் குடியானவர்கள் சச்சரவு செய்தலும், தாய் பிள்ளையிடம் சண்டை செய்தலும், பிள்ளை தாயிடஞ் சண்டை செய்தலும், தகப்பன் பிள்ளையுடன் போர் புரிதலும், பிள்ளை தகப்பனுடன் போர் புரிதலும், அண்ணன் தம்பியுடன் வழக்காடுதலும் தம்பி அண்ணனுடன் வழக்காடுதலும், அண்ணன் தங்கையை மனனோகப் பேசுதலும், தங்கை அண்ணனை மன்னோகப் பேசுதலும், சகோதிரிகளுடன் சகோதிரிகளும், சினேகிதர்களுடன் சினேகிதர்களும் போர்புரிய நேரிட்டு கற்களாலும், தடிகளாலும், கத்திகளாலும் சண்டைசெய்து மாளுதலும் காயமடைந்து வாதைப்படுகிறவர்களுமாய் இருக்கின்றார்கள்.