பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஓ! சகோதிரர்களே! இவைகள் தான் துக்கத்தின் மிருதுவான அவா. இவைகள் தான் காணக்கூடிய துக்கங்கள். இவைகள் தான் மிருதுவான அவா வினால் உண்டானவைகள். மிருதுவான அவாவினால் கட்டுப்பட்டவைகள். மிருதுவான அவாவினால் நிலைக்கப்பட்டவைகள். மிருதுவான அவாவினால் வேரூன்றியவைகள். இவ்வகை மிருதுவான அவாவாலன்றோ அவ்வகைத்தான பெருங் கலகங்கள் பயிரங்கமாய் துக்கத்தை உண்டாக்குகின்றது.

பின்னும் ஓ! சகோதிரர்களே! இம்மிருதுவான அவாவின் தூண்டுதலாலும், இம்மிருதுவான அவாவின் நடமாட்டத்தினாலும் இவ் வகையானப் பிரயோசனமற்ற அவாக்களுண்டாய் மக்களுக்குள் உண்டாக்கிய உடன்படிக்கைகளை ஒருவருக் கொருவர் மறைத்தலும், அன்னியர் பொருளை அபகரித்தலும், ஒருவருக்கொருவர் கோட்சொல்லித் திரிதலும், மாங்கல்ய ஸ்திரீகளைக் கற்பழித்தலும் ஆகிய துற்செயல்களுக்காய் அரசர்களால் கசைகளால் அடிக்கச்செய்வதும், தடிகளால் அடிக்கச்செய்வதும், பிரம்புகளால் அடிக்கச்செய்வதும், கை கால்களை வெட்டச் செய்வதும், ஒரு காலையோ ஒரு கையையோ வாங்கச்செய்வதும், நாய்களால் கடிக்கச்செய்வதும், கற்காணத்திலாட்டச்செய்வதும், தலையை துண்டித்தலுமாகியக் கொடிய தண்டனைக்கு உள்ளாகின்றார்கள்.

ஓ! சகோதிரர்களே! இவைகள் யாவும் மிருதுவான அவாவினால் உண்டான துக்கம். அவாவின் நடமாட்டத்தால் உண்டான துக்கம். மிருதுவான அவா இழுப்பதினால் உண்டான துக்கம். மிருதுவான அவாவில் ஐக்கியப்பட்டதால் உண்டான துக்கம். சீவகோடிகள் இம்மிருது அவாவினால் தூண்டப்பட்டும், இம்மிருதுவான அவாவின் ஐக்கியத்தினால் நடமாடியும் வருகின்றது. இவ்விதப் பிரயோசனமற்ற அவாவினால் தங்கள் தேகத்தால் தீயச்செய்கைகளைச் செய்தலும், வாக்கால் சுடச் சொல்லுதலும், மனத்தால் தீய எண்ணங்களை எண்ணுதலுமாய் இருக்கின்றனர். மனோ வாக்குக் காயங்களால் செய்துவந்தத் தீயச்செயல்களின் முடிவு மரணமேயாம். மரணமடைந்த பிறகோ கன்மக்கூட்டமென்னுந் தீவினைத் திரட்சியே ஓர் உருகொண்டு மறுபிறவித் தோன்றி முன்தொடர்ச்சியைத்தொட்டு வளர்ந்து பயனுகர்ந்து கேவலநிலை அடைந்து பிறப்பதும் இறப்பதுமாகியத் துக்கச்செயலில் காற்றில் பரந்துவிடுவேன் என்றாலும், சமுத்திரத்தில் ஒளிந்துக்கொள்ளுவேன் என்றாலும், மலைகளின் குகைகளில் ஒளிந்துக் கொள்ளுவேன் என்றாலும் வினைப்பயன் விடுவதில்லை. காரணம், வினையே திரண்டு உரு தோன்றலால் அவனவன் செய்வினைக்கீடாய் மாளாப்பிறவியில் சுழன்று பிறப்பதும், துக்கத்தை அநுபவிப்பதுமாகியச் செயல்கள் யாவும் மிருதுவான அவாவின் தூண்டுதலினாலும் மிருதுவான அவாவின் ஐக்கியத்தினாலுமேயாம்.

ஓ! சகோதிரர்களே! மஹா சமுத்திரமுங் காய்ந்து தண்ணீரில்லாமல் வரண்டுபோகுங்காலம் வரினும் வரும். ஆனால் இத்துக்கத்தின் முடிவை சொல்லத் தரமன்று. இறப்பதும் பிறப்பதும், பிறப்பதும் இறப்பதுமாகிய கன்மச் சக்கிரத்தின் முடிவை யாவரால் சொல்லமுடியும்.

ஓ! சகோதிரர்களே! இப்பூமியும் அக்கினிக்கு இரையாகி ஒழிந்து தோன்றுங்காலம் வரினும் வரும். ஆனால் இத்துக்கத்தின் ஒழிவை யாரால் கூறத்தகும். உலக சீவர்கள் அவாவின் ஏதுவால் துக்கநிகழ்ச்சியில் மூழ்கி இறப்பதும் பிறப்பதும், பிறப்பதும் இறப்பதுமான கன்மச் சக்கரத்தில் சிக்குண்டு சுழல்கின்றார்கள். இச்சிக்கை அறுத்து கன்மச்சக்கரத்தினின்று விடுபடுங்காலம் யாவரால் சொல்ல முடியும். ஏனென்பீரேல், துக்கத்திற்குக் கொண்டுபோகும் வழி விசாலமாய் இருக்கின்றது.

மூன்றாவது துக்க நிவாரண சத்யம்

ஓ! சகோதிரர்களே! துக்கநிவாரண தூய்மெயான சத்தியம் யாதென்பீரேல், அவாவைப் பற்றற ஒழித்து அதைத் தன்னைவிட்டு நீக்கித் தள்ளுவதும், தன்னை அதிலிருந்து பிரித்துக்கொண்டு அதற்கிடங்கொடாமல் முற்றும் நாசஞ்செய்தலினால் உண்டாகும் முற்கூறியுள்ள அவாவின் அழிவுதான்