பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அடைவதற்கே பெருங் குடும்பக்குமரர்கள இனி வெளியேறி இப்பரிசுத்த மார்க்கத்தே சென்று சுகநிலைகண்டு புத்தர்களாவார்கள்.

அஷ்டாங்கமார்க்கத்தின் முதற்படி - சம்மாதித்தி
நற்காட்சி உணர்வு

ஓ! சகோதிரர்களே! நற்காட்சியின் உணர்வு யாதென்பீரேல், ஒரு மாணாக்கன் துற்கருமம் இன்னதென்றும், துற்கருமத்திற்கு மூலம் இது வென்றும், நற்கருமம் இன்னதென்றும், நற்கருமத்திற்கு மூலம் இன்னதென்றுங் கண்டுணர்வானாயின் இதையே நற்காட்சி என்று கூறப்படும்.

ஓ! சகோதிரர்களே! அகுசலம் அல்லது துற்கருமம் என்பதை விளக்குவாம். 1. கொலை, சீவப்பிராணிகளைத் துன்பஞ் செய்தல் துற்கருமம். 2. களவு, அன்னியர்பொருளை அபரித்தல் துற்கருமம் 3. விபச்சாரம், அன்னியர் மனைவியை இச்சித்தல் துற்கருமம். (இதுவே காயகன்மா) தேகத்தாலாகுங் குற்றங்கள் 4. பொய், தாங்கள் காணாததையும் அறியாததையும் கண்டதைப் போலும் அறிந்ததைப்போலுங் கூறுதல் துற்கருமம். 5. கோட்சொல்லுதல், ஒருவருக்கொருவர் கோட்சொல்லி விரோதத்தைப் பெருக்கி அன்பைக் கலைத்தல் துற்கருமம் 6. கடுஞ்சொல், மற்றொருவர் மனம் புண்படக் கூறுவது துற்கருமம் 7. வீண்வார்த்தை , பயனற்ற வார்த்தைகளைப் பேசுதலும், பழிக்கூறித் திரிதலும், வெறும் பந்தியங் கூறுதலும், வித்தைவிரும்பாதுளரலும் துற்கருமம். (இதுவே வஸிகன்மா) வாக்கினால் உண்டாகுங் குற்றங்கள் 8. பொருளாசை, அன்னியர் பொருட்களின்பேரில் அவாக்கொண்டலைதல் துற்கருமம். 9. துட்டகுணம், அன்பில்லாமல் மற்றவர்களைச் சீறி சினமிகுத்தல் துற்கருமம் 10. கெட்ட எண்ணம், எதிரிகள் நற்சுகத்தையேனும் செல்வத்தையேனும் பொறாது முறுமுறுத்தல் துற்கருமம். (இதுவே மனோ கன்மா) மனத்தாலாகுங் குற்றங்கள்.

ஓ! சகோதிரர்களே! இத்தியாதி துற் கருமத்திற்கும் மூலம் யாதென்பீரேல், லோபா - பேராசையே துற்கருமங்களுக்கு மூலம். தோஸா - கோபமே துற்கருமங்களுக்கு மூலம். மோஹா - காமியமே துற்கருமத்திற்கு மூலம். லோபமும், தோஸமும் எப்போதும் மனதைத் தொடர்ந்துவரும்.

ஓ! சகோதிரர்களே! குசலா அல்லது நற்கருமம் யாதென்பீரேல், 1. கொலைசெய்யாதிருத்தல், அன்னியப்பிராணிகளுக்குத் துன்பஞ் செய்யா திருத்தல் நற்கருமம் 2. களவு செய்யாதிருத்தல். அன்னியர் பொருளை கனவிலேனும் அபகரிக்காதிருத்தல் நற்கருமம் 3. விபச்சாரஞ் செய்யாதிருத்தல், அன்னியர் தாரத்தை மனதிலேனும் இச்சியாதிருத்தல் நற்கருமம். (இதுவே காயநற்கன்மா ).

4. பொய்சொல்லாதிருத்தல், தான் காணாததையும் அறியாததையுஞ் சொல்லுதற்கு அஞ்சுதல் நற்கருமம் 5. கோட்சொல்லாதிருத்தல், ஒருவர் வார்த்தையை மற்றவருக்கு ஓதி கலகஞ்செய்தற்கு நாணுதல் நற்கருமம் 6. கடுஞ்சொல் கூறாதிருத்தல், அன்னியரை மனநோகப்பேசாமல் அடக்கத்தைக் கருதுதல் நற்கருமம் 7. வீண்வார்த்தைப் பேசாதிருத்தல், பயனற்ற வார்த்தைகளைப் பேசாதொழித்தல் நற்கருமம். (இதுவே வஸீநற்கன்மா) வாக்கின் நற்கருமம்.

8. பொருளாசை இல்லாதிருத்தல், அன்னியர் பொருளின் ஆசையை அகற்றுதல் நற்கருமம் 9. துஷ்டகுணம் இல்லாதிருத்தல், கொடிய எண்ணங்கள் மனதில் எழாமல் தடுத்தல் நற்கருமம் 10. கெட்ட எண்ணங்களைத் தடுத்தல், மற்றவரை வஞ்சிக்குங் குணத்தை அகற்றுதல் நற்கருமம். (இதுவே மனோ நற்கன்மா ).

ஓ! சகோதிரர்களே! இத்தகைய நற் கருமங்களுக்கு மூலங்கள் யாதென்பீரேல், அலோபா - பேராசையை அகற்றுவதே நற்கருமத்திற்கு மூலம். அத்துவேஷா - கோபத்தை அகற்றுவதே நற்கருமத்திற்கு மூலம். அமோஹா - காமியத்தை அடக்குதலே நற்கருமத்திற்கு மூலம்.