பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 245

ஓ! சகோதிரர்களே! சிஷியன் ஒருவன் துக்கம் இன்னதென்றும் துக்க உற்பத்தி இன்னதென்றும், துக்க நிவாரணம் இன்னதென்றும், துக்க நிவாரண மார்க்கம் இன்னதென்றும் அறிந்துக்கொள்வதே நற்காட்சி என்னப்படும்.

அங்ஙனமின்றி வீண்காலப் போக்கன் ஒருவன் ததாகதரை நோக்கி ஐயனே, உலகம் நித்தியமா? அநித்தியமா? உலகம் ஒருவரால் உண்டாக்கப் பட்டதா? தானே தோன்றியதா? ஒருவன் உண்டாக்கினாரெனில், உன்டாக்கினவர் உண்டான தெவ்விடம். தானே தோன்றிற்றென்னில் முன்னிருந்தே தோன்றிற்றா இல்லாமல் தோன்றிற்றா என்றுங்கேட்க முயலுவான்.

இத்தகைய வீண் வினாக்களினால் அருந்தியுந் தாகந் தீரப்போகிறதில்லை, புசித்தும் பசியாரப்போகிறதில்லை என்னும் பழமொழிக்கிணங்கப் பாழ்விடை தோன்றி பழியும் பாவமுந் திரண்டே உருபெறும்.

அதாவது, விஷங்கலந்த அம்பினால் தைக்கப்பட்ட ஒருவன் அவ்வம்பைப் பிடிங்கி எறிந்துவிட்டு அவ்விஷத்தை முறிக்கக்கூடிய அவுடதங்களைப் பூசாமலும் அருந்தாமலும் இவ்வம்பானது யாவரால் எய்யப்பட்டது எய்தவன் அரச குடும்பமா அன்னிய குடும்பமா அவன் சத்துருவா நமது மித்துருவா அவ்வம்பிற்கு விஷமேற்றித் தந்தவர்கள் தன்னவர்களா அன்னியர்களா என்று விசாரித்தறிதற்குள் விஷமேறி மடிவது திண்ணம்.

உமியைக்குத்தி கைசலித்தவாறுபோல் உலகத்தையும், உலகத் தோற்றத்தையும் விசாரிக்கும் அன்பர்கள் தன்னை நோக்கித் தான் நித்தியனா அநித்தியனா என்றுந் தன் செயல்கள் யாவும் நித்தியச் செயல்களா அநித்தியச் செயல்களா என்றும், தான்தோன்றிய தேகம் தோன்றும் வஸ்துவினின்று தோன்றியதா தோன்றா வஸ்துவினின்று தோன்றியதா என்றும் தோன்றும் வஸ்துவினின்று தோன்றுவது காட்சியாதலின் பூர்வப்பற்றிருந்தே தோன்றினானா இல்லாமல் தோன்றினானா என்று உசாவுவனேல் தோன்றும் வஸ்துக்களின்று தோற்றவைக்கும் பற்றுக்களாகும் இராகத்துவேஷ மோகங்களை அறுத்து மறுபிறவி தோற்றாமலிருக்கும் நிப்பானம் பரமாங் சுகமென்னும் நிருவாண பரமசுகமடைவான்.

உலகம் நித்தியமாய் இருந்தால் என்ன அநித்தியமாய் இருந்தால் என்ன. உலகம் ஒருவனால் உண்டு செய்தால் என்ன தானே தோன்றினால் என்ன. உலகம் முடிவு பெற்றால் என்ன முடியாமல் இருந்தால் என்ன.

ஒவ்வொருவனும் பிறப்பில் தோன்றி பிணியடைவதும், மூப்படைவதும், மரணமடைவதுமாகிய துக்கவிருத்தியால் அழுகையுங் கவலையும் ஏக்கமும் பெருகி மாளாக்கவலையால் மடிவதைக்கண்ணுற்றும் அம்மடிவின் செயலை உணரா சோதிரர்களே இப்பிறவியிலேயே அத்துக்கத்தினின்று விலகி தப்பித்துக்கொள்ளும்படி உங்களை ஜாக்கிரதைப்படுத்துகின்றேன்.

பரிசுத்தப் புருஷர்களிடம் அணுகாதவனும், பரிசுத்தப் புருஷர்களின் போதனையைக் கேளாதவனும், பரிசுத்தப் புருஷர்கள் பழகும் ஒழுக்கத்திற் பழகாதவனுமான ஒருவனுக்கு நற்கருமமும் அதற்கு மூலமும் யாதென்று தெரியாது. அதன் நிலை தெரியாமல் தடுக்க முயல்வான்.

காரணம்.- நன்மெய் இன்னதென்று தெரியாமெயினாலேயும் நற்கருமத்திற் பழகாததினாலேயுமாம்.

இவ்வகை நிலைமெயிலிருப்பவன் (1) உச்சேத அல்லது விபவதிருஷ்டி. இறந்தபிறகு நான் எனும் பொருள் அழிந்துவிடுமென்றும், (2) சஸ்ஸேத அல்லது பவதிருஷ்டி இறந்தபிறகு நான் எனும் பொருள் நிலைத்திருக்குமென்றும் ஆகிய இவ்விரண்டு நம்பிக்கைகளால் சக்காயதிருஷ்டி தேகம் நிலையுள்ளதென்றும் மாய்கையில் சிக்குப்பட்டவனாகி புறக்கிரியைகளிலும் காமவிகாரத்திலும் கோபத்திலும் முழு நம்பிக்கை வைத்து தன் இருதயத்தை சந்தேகமென்னும் இருட்டறைக்குச் செல்லவிடுகின்றான்.

இவ்வகை இருட்டறை என்னும் வலையிலகப்பட்டுள்ள ஒருவன் தன்னைத்தான் எப்படி விடுதலை செய்துக்கொள்ள முடியும்.