பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 249

சேர்ந்ததாயிருந்தாலும், உணர்ச்சியை சேர்ந்ததாயிருந்தாலும், புலன்களைச் சேர்ந்ததாயிருந்தாலும், அறிவைச் சேர்ந்ததாயிருந்தாலும், ஒருவனுடையதாய் இருந்தாலும், மற்றவனுடையதாய் இருந்தாலும், சுத்தமுள்ளதாய் இருந்தாலும், அசுத்தமுள்ள தாயிருந்தாலும், அருகிலிருந்தாலும், தூரமிருந்தாலும் உண்மெயாக சத்தியஞானமென்னும் மெய்யறிவினின்று இது என்னைச்சார்ந்ததல்ல இது நான் அல்ல நானென்பது கிடையாது. அநாத்தா இது அநான்மமென்று தெரிந்துகொள்ளல் வேண்டும்.

ஓ! சகோதிரர்களே! மற்றொரு சகோதிரன் உங்களை நோக்கி முன்பு நீங்கள் இருந்திருக்கின்றீர்களா இல்லையா, இனி இருக்கப்போகின்றீர்களா இல்லையா, இப்போது இருக்கின்றீர்களா இல்லையா என்பான். அந்த சகோதிரனுக்கு பின்வருமாறு விடை அளிப்பீர்களாக.

ஒருவிதத்தில் முன்பு நீயிருந்தாய், மற்றொரு விதத்தில் நீ இல்லை, ஒருவிதத்தில் நீ இருக்கப்போகின்றாய், மற்றொரு விதத்தில் நீ இருக்கப் போகிறதில்லை, இப்போது நீ இருக்கின்றாய், மற்றொரு விதத்தில் நீ இல்லை.

எந்த ஒரு சகோதிரன் காரணத்தாலாயது பிறப்பென்று உணர்கின்றானோ அவனே சத்தியத்தைத் தெரிந்தவன் ஆகின்றான். எவ்வகையில் எனில், பசுமடியினின்று பாலும், பாலினின்று தயிறு கட்டியும், தயிறு கட்டியினின்று வெண்ணெயும் உண்டாகின்றது. ஆனால் பாலாயிருக்குங்கால் அதனை வெண்ணெய் என்று கூறுவாரில்லை. தயிறானது கட்டியாய் உறாய்ந் திருக்குங்கால் அதனை பாலென்றேனும் வெண்ணெய் என்றேனுங் கூறுவாரில்லை. வேறெந்தப் பெயராலும் அழைப்பாருமில்லை. அதுபோல் இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் இவைகளில் ஒரு காலத்தைக் குறிக்குங்கால் மற்றும் இரண்டு காலமுந் தோற்றுவதில்லை. இரண்டு காலத்தையுஞ் சேர்த்துக் குறிப்பாராயின் முக்காலமென்னும் பெயரில்லாமல் போம். ஆதலின் வார்த்தைக்கு வார்த்தை வீண்பொருட்கூறி தானும் அறியாமல் தங்களை அடுத்தோரையுங் கெடுத்து வீண்காலம் போக்காமல் உலக சீவராசிகளுக்கேனும் நன்மெய் புரியுங்கள். அன்றேல் உங்களுக்குள்ள நன்மெய்யையேனும் வளர்த்துங்கள்.

ஓ! சகோதிரர்களே! நாம் காணும் தேகம் அழிந்தபிறகு நான் என்பதும் அழியும் என்று நம்புவதால் அழிவிலா பரிசுத்தமார்க்கம் அதற்கு வேண்டாமற்போம். நாம் காணும் தேகத்தில் நான் என்பது தனியாகவே இருக்கின்றது. தேகம் அழிந்தபிறகு நான் என்பது அழியாதென்று நம்புவதாலும் அழிவிலாபரிசுத்தமார்க்கம் அதற்கு வேண்டாமற்போம். விபவதிருஷ்டியோ இந்த தேகம் அழிந்த பிறகு நான் எனும் தனி ஆன்மாவும் அழிந்துவிடும் என்று எண்ணுவான்.

பவதிருஷ்டியோ இந்த தேகத்திற் புறப்பட்ட தனி ஆன்மா ஒன்றுண்டு. அது தேகம் அழிந்தபின்னும் சாஸ்வதமானதென்று எண்ணுவான். இவ்விரண்டு வகைக் கொள்கைக்கும் பரிசுத்தமார்க்கமுடிவின் அழிவிலா வாழ்க்கை வேண்டாமற் போம்.

ஏனெனில் தனி ஆன்மாவைப்பற்றிய பவதன் ஹாவாகிய வீண் அவாவைக்கொண்டு இறந்தபிறகும் தேகத்தைவிட்டத் தனி ஆன்மா சாஸ்வதமென்ற சஸ்ஸே திருஷ்டி இருந்தே இருக்கின்றதென்று எண்ணுவான். இத்தகையக் கொள்கைகள் யாவும் பரிசுத்தமார்க்கத்தை மறைக்கும் வருங்கால ஏதுக்களாகும் அக்காலம் உங்கள் காலங்களை வீணில் போக்காமல் பரிசுத்தமார்க்க மத்திய பாதையில் நடக்கும் நடைகளை விவரிக்கின்றேன். அவைகளை உள்ளுணர்ந்து உசாவி உருதியில் நிலைப்பீர்களாக.

மணிமேகலை

பேதைமெய் சார்வாச் செய்கை யாகுஞ் / செய்கை சார்வா உணர்ச்சியாகு,
முணர்ச்சி சார்வர் வருவுருவாகு / மருவுருச் சார்வா வாயிலாகும்,
வாயில் சார்வா ஆறாகும்மே / யூறு சார்ந்து நுகர்ச்சியாகும்,
நுகர்ச்சி சார்ந்து வேட்கையாகும் / வேட்கை சார்ந்து பற்றாகும்மே,
பற்றிற்றோன்றுங் கருமத்தொகுதி / கருமத்தொகுதி காரணமாக,