பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 / அயோத்திதாசர் சிந்தனைகள்

"தன்னகத்தை அறிந்தவன் எவனோ அவன் சுகப்படுவான் உண்மெய்யை உணர்ந்தவன் எவனோ அவன் நன்மெய் அடைவான்.” (சில வரிகள் தெளிவல்லை)

"உண்மெய்யில் நம்பிக்கை வையுங்கள்" உண்மெய்யை விரும்புங்கள் “உண்மெய்யில் அன்பை வளர்த்துங்கள்."

யதார்த்தத்தில் "உண்மெய்தான் எவற்றிற்குஞ் சிறந்தது. அதை யாதொமொருவர் மாற்றவாவது விருத்தி செய்யவாவது முடியாது"

“உண்மெய்தான் நித்தியத்திற்கு வழியாயிருக்கின்றது உண்மெய் தான் நித்தியமாயிருக்கின்றது, உண்மெய்தான் நிருவாண நிலையுமென்றறிந்து உலகமாய்கையில் நின்று இவன் மித்துரு, அவன் சத்துருவென்றும் இவன் உன்னியன் அவன் அன்னியனென்றும், இவன் சுதேசத்தான் அவன் புறதேசத்தான் என்றும், இவன் தாழ்ந்தவன், அவன் உயர்ந்தவன் என்றும், இவன் செல்வமுடைவன் அவன் வறுமை உடையவனென்றும் இது தாழ்ந்த சீவராசிகள் அது உயர்ந்த சீவராசிகளென்றும், ஒன்றுக்கொன்றை பேதிக்காமல் சகலசீவராசிகளுக்கும் உண்மெய் ஒன்றெண்றுணர்ந்து சீவகாருண்யம் உடையவர்களாய் பொருமை என்னும் பொக்கிஷத்தைச்சேர்த்து சுகவழியைக்கண்டடையுங்கள்."

என்று போதித்து வருகையில் சித்தாத்தருடைய குடும்பத்தார் அவ்விடம் வந்து அரசபுத்திரர் புழுதியுள்ள பூமியில் வெறுமனே உட்கார்ந்திருப்பதைக் கண்டு துக்கித்து தங்கத்தின் பேரில் நவரத்தினங்களில் இழைத்த ஓர் ஆசனத்தைக் கொண்டு வந்து வைத்து அதன் பேரில் உட்காரும்படி வேண்டிக்கொண்டார்கள்.

அதை அவர் தவிர்த்து தாமரைக் கொட்டையினால் ஓர் ஆசனஞ் செய்வித்து தாமரை புட்பத்தை பறப்பி அதன் பேரில் உட்கார்ந்துக்கொண்டு எதிரிலுள்ள வரன்முறையோர்களை நோக்கி இத்தாமரையானது நீரில் வளர்ந்து செழித்திருந்தபோதிலும் நீரில் ஒட்டாமலிருப்பது போலத் (ததாகதன்) பெருத்த அரச குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும் உங்கட் குடும்பமென்னும் தேகப் பற்றற்றவனாய் சகல சீவராசிகளின் உண்மெய்ப் பொருந்தி இருக்கின்றேன் என்று சீவகாருண்ய அன்பைப் போதித்து வருகையில் மநுட சீவர்களின் உள்ளங்கள் கனிவுற்றதுமல்லாமல் அவரைச் சூழ்ந்திருந்த மிருக சீவன்களின் உள்ளங்களுங்கசிந்து மிருகராசனாகிய ஓர் சிம்மம் ஓடிவந்து அவருடைய ஆசனத்தைத் தாங்கி நின்றது. ஓர் யானையானது குளங்களுக்கோடி தாமரை புட்பத்தைக்கொய்துவந்து அவர் பாதத்தில் சொரியும்படியான பூசல் நிதஞ் செய்துக்கொண்டு வந்தது. காட்டிலுள்ள சர்ப்பங்கள் ஓடிவந்து அவர் தாளிலுந் தோளிலும் அன்புப் பொருந்தத்தழுவி விளையாடிக்கொண்டிருந்ததுகள். இவ்வகை காலத்தில் அவருடைய மாணாக்கர்களில் சிலர் பற்பலச்சித்துக்களை விளையாடும்படியான எண்ணங்கொண்டு நிறைவேற்றி வருவதை சித்தார்த்தர் அறிந்து அவர்களை வரவழைத்து உலகத்தில் காணும்படியான வஸ்துக்கள் யாவற்றும் சித்துவடிவமாயிருக்க நீங்கள் என்ன சித்து விளையாடுகிறீர்களென்று கண்டித்தார் அதை உணராத மாணாக்கர்கள் ஓ! ஓ! ஏது இவருக்கு யாதொரு சித்து வகைகளும் தெரியாது போல் காணப்படுகிறதென்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

சித்தார்த்தர் அவர்களுடைய அறியாமைக்கிறங்கி சற்று மவுனமுற்றிருந்து தான் உட்கார்ந்திருந்த தாமரைபுட்பத்துடன் ஆகாயத்தில் எழும்பி கிழக்கு திக்குநோக்கி மறைந்துவிட்டார்.

இவ்வகையாக மறைந்து குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருத மென்னும் பஞ்ச நிலங்களுக்குச்சென்று அங்கங்குள்ள சகல சீவராசிகளுக்கும் தருமோபதேசஞான நீதிகளைப்போதித்து நிருவாணமென்னும் மோட்ச இச்சையுள்ளவர்களுக்கு ஊருக்குங்காட்டுக்கும் மத்தியில் மடங்களைக் கட்டுவித்து யாதொரு புசிப்பின் கவலைகள் வராமல் குடிகளால் வேண்டிய உதவிகள் இவர்களுக்கு செய்து வருவதற்கு மதாணி பூணூலென்னும் ஓர் அடையாளந்தரித்து திருவோடுகளைக்கையில் கொடுத்து ஞானசாதனங்களில் பழகும்படிச்செய்தும் மற்றுமுள்ளக்குடிகளை சீவகாருண்யம் உடையவர்களாய் நீதி வழுவாமலிருக்கும்படிக்கும் போதித்து வந்தார்.