பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 255

சீவர்களுக்கும் ஈய்ந்து அவைகளின் பசியாற்றி ஆதரிக்கும் நோன்பினை உடையவன் கொல்லாநோன்பின் குணமிகுத்தோனாதலின் எல்லா தருமங்களினும் மேலான தருமத்தை அடைந்திருக்கின்றான். பொய்ப்பேசுதலை ஒழித்தவன் எத்தகைய சுகத்தின்று உண்மெயறியும் நிலையை அடைகின்றானோ அவனருகில் கொலையைத் தவிர்த்து சீவகாருண்ய மிகுத்தவனாக நிற்பான். முத்தியென்றும், மோட்சமென்றும், நிருவாணமென்றுஞ் சொல்லுஞ் சுகநிலையின் பீடம் எதினால் அமைக்கப் பட்டிருப்பதென்னில், கொலையைத்தவிர்த்த சீவகாருண்ணியத்தினாலேயாம் ஒரு மனிதனை நல்லவனென்று மற்ற மனிதர்கள் சொல்லுவதுடன் சருவ சீவராசிகளும் நல்லவனென்று அருகிற்சென்று அன்பு பாராட்டுமாயின் அவனது சீவகாருண்ய அன்பையே சுகவாரி எனப்படும். மாறிமாறி பிறக்கும் மாளாப்பிறவியின் துக்கத்தை நீக்கிப் பிறப்பறுக்கும் உள்ளத்துறவை நோக்குபவன் கொலையை அகற்றி சீவகாருண்யத்தை நோக்குவனேல் துறவின் வழி வெள்ள விளங்கும். சருவசீவர்களையுந் தன் புசிப்புக்கென்று கொல்லாமலுங் கோபத்தாற் கொல்லாமலுங் காருண்ய மிகுத்துத் தான் கொலைபுரிவதை அகற்றுவதுமன்றி கொலைபுரிபவனையுந் தடுத்தாட்கொள்ளுவானாயின் தன்னைக் கொலையுண்ணும் இயமமென்னுங் காலனணுகானென்பதாம். மாமிஷ புசிப்பால் தன் யாக்கையைப் பெரிதாக்க முயலுவோன் சருவ சுகத்தையுஞ் சுருக்கித் துன்பத்தைப் பெருக்கிக் கொள்கின்றான். தேகத்தைக் கொழுக்க வளர்ப்போன் பிணிப்பீடையால் வாதைப்படுவதை உணர்ந்தும் விவேகிகள் வெறுக்கத்தக்கப் புலால் இச்சையால் கொலை புரிந்து அதன் விருத்தியைக் கெடுப்பதினும் தன் தேகத்தை சுருக்கிக்கொள்ளுபவன் சுகமடைவான். அதாவது, புற்பூண்டுகளிலிருந்து புழுக் கீடாதிகளும், புழுக்கீடாதிகளின்று மட்சம் பட்சிகளும், மட்சம் பட்சிகளினின்று ஊர்வன மிருகாதிகளும், மிருகாதிகளினின்று வாலற்ற நரர்களாம் மக்களும், மக்களினின்று தேவர்களும், ஒன்றிலிருந்தொன்று உயர்ந்துகொண்டே போவது உலகத்தோற்றமாதலின் சீவராசிகளின் உயர்வைக் கெடுக்குங் கொலைத் தன்னுயிர் நீங்கினுஞ் செய்யாதிருக்கக்கடவன்.

2வது களவு ஓ! சகோதிரர்களே! ஒரு மனிதன் களவு செய்யுந் தொழிலினின்று நீங்கி அதைச் செய்வதில்லையென்று விரதங்கொண்டவன் தனக்குக் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளுவான். கொடாததை எடுக்க மாட்டான். அவன் வாங்கவேண்டியப் பொருள் எவ்வளவோ அவ்வளவுங் கார்த்திருந்து வாங்கிக் கொள்ளுவான். உரியவன் உத்திரவின்றி தொடமாட்டான். வஞ்சினத்தாலுங் களவினாலும் மற்றோர் பொருளை அபகரிக்கலாகாதென்னும் எண்ணத்தை உறுதிபடுத்தினவன் இதய பரிசுத்தம் அடைவான். நித்திய சுகத்தை விரும்புகிறவன் மறந்தும் அன்னியன் பொருளை அபகரித்து அவன் மனதைப் பெருமூச்சுடன் அலையவிடமாட்டான். அதாவது, விவேகமிகுத்தோர் தனதுள்ளத்தில் எழும் களங்கங்களாம் வஞ்சினம், தீங்கு, களவு முதலியன எழாமல் அகற்ற வேண்டியது அழகாதலின் உலக மாக்கள் கனவினுங் களவை எண்ணாதிருத்தல் நன்று. ஓர் மனிதன் களவினால் சேகரித்தப் பொருள் தனது மூத்தோர் பொருளையுஞ் சேர்த்துக்கொண்டு சென்றுவிடும். அதுபோல் களவின் பொருளைக் கருதினவன் அருளைக் கருதான். அருளைக் கருதினவன் பொருளைக் கருதான். அருளையும் பொருளையுங் கருதினவன் இருளினின்று தவிப்பான். பொருளை விரும்புகிறவன் புண்ணியவச தேகத்தை வருத்தி சம்பாதித்தல் வேண்டும். அங்ஙனமின்றி வருத்தியு முயற்சியுமுற்று சம்பாதித்தவன் பொருளை யவனை யறியாது களவு செய்துக் கொள்பவன் அப்பொருட்களைத் தன்னையறியாது இழந்து சகலராலும் அவமதிக்கப் படுவான். அருளைக்கருதினவன் பொருளையும் பொருளுக்குடையவனையும் நோக்காமல் சீவர்களின் சுகத்தை நோக்குபவனாதலின் களவென்னுங் கருத்தே அவன் உள்ளத்திலுதிக்காதென்பதாம். ஆசையின் மிகுதியால் அன்னியன் பொருளை அபகரித்து ஆனந்தமுறுதல் படிப்படியே துக்கத்திலிறங்கி சதா