பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சுகங்களைக் கெடுத்துப் பாழாகிவிடுவான். பெண்ணெனத் தோன்றும் ஓர் உருவமே தனது நற்கருமச்செயல்களினால் தனக்குத் தாய்போல் விளங்கி ஞானாமுதூட்டும் நல்வழிக்குந் துணையாவாள். ஓர் இஸ்திரீயை தன் கணவன் கார்ப்பனென்றுந் தன் பந்துக்கள் கார்ப்பரென்றுங் கூறுவதில் பயனில்லை. இஸ்திரீயானவள் தன்னுடைய கற்பைத் தானே கார்த்துக்கொள்ளுவது சிரேஷ்டமாக விளங்குவதால் வாழ்க்கைத் துணைக்கும் அவளே துணையாவாள். இத்தகைய வாழ்க்கை சுகமுண்டாக்கும். பெண்களும் பிள்ளைகளும் நற்கருமத் தொடற்சியின் வழியாய் வளர்பவர்களின் பலனாதலின் இல்லத்தில் வாழுங் கற்புடையாள் வாக்கு இகத்தை அழிக்கவும், இகத்தை வளர்க்கவுங்கூடியதாயிருக் கின்றது.

இல்வாழ்க்கைத் துணை நல் மனைவியும் துணையாம் நல்மனைவியின் கணவனும் தங்கள் நற்கருமப் பலன்களால் சுகவாழ்க்கையுற்றுத் தங்களை அடுத்தவர்களையுஞ் சுகமுறச்செய்து சத்திய தரும சங்கத்தையும் நிலைபெறச் செய்வதால் இவர்கள் வாழ்க்கையே சுகவாழ்க்கையாம், இதையே நல்வாழ்க்கை என்று கூறப்படும்.

சம்மா வாயமா - நன்முயற்சி

ஓ! சகோதிரர்களே! நன்முயற்சியை விளக்குகின்றேன். மனிதன் செய்ய வேண்டிய முயற்சிகளில் முக்கியமானப்பெருமுயற்சிகள் நான்கு வகையான் முயலப்படும். அதாவது 1. ஒவ்வொரு மனிதனும் தன்னிடத்திலிருந்து நீக்கவேண்டிய முயற்சி. 2. தன்னை அணுகாமல் தடுக்க வேண்டிய முயற்சி 3. தன்னிடத்தினின்று மேலும் மேலும் உதிப்பிக்கச்செய்யவேண்டிய முயற்சி 4. தன்னிடத்துள்ளதைப் பாதுகாக்கவேண்டிய முயற்சி இத்தகைய நான்கு முயற்சிகளையுந் தெளிந்தவன் சுகமற்றத் தீங்குகளை தன் சித்தத்தில் எழவிடாமல் அதேமுயற்சியில் போராடி முழு தைரியத்துடன் தன் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுவான். தன் கண்ணால் அதிரூபத்தையேனும் ரூபவஸ்துக்களையேனுங் கண்டபோதிலும் இனிய சப்தங்களைச் செவியில் கேட்டபோதிலும் பரிமளகந்தத்தை நாசியில் முகர்ந்த போதிலும் உருசியுள்ள பதார்த்தங்களை நாவில் சுவைத்தபோதிலும் சுகநிலையில் தேகத்தைப் பரிசித்த போதிலும் பலவகையான எண்ணங்கள் மனதில் எண்ணிய போதிலும் அதில் நிலைக்கத்தக்க இடங்கொடுக்கமாட்டான். மிதமீறிய உணர்ச்சியால் உதிக்குந் தீங்குகளையும் அவாக்களையும் திருப்த்தியில்லாதவைகளையும் தன் மனதில் தங்கவிடாமல் நீக்கிக் கொண்டே வருவான்.

எவ்வகை உணர்ச்சிக்கும் அவாவிற்கும் இடங்கொடுக்காமல் தனக்குள் அடக்கி ஆண்டு உணர்ச்சிகளின்பேரில் ஜாக்கிரதையாயிருப்பவன் தீங்குகளற்ற சுகநிலை காண்பான். இத்தகைய சுகநிலை காணவேண்டியவன் தனதைம்புல நுகர்ச்சிகளால் எழுந் தீங்குகள் யாவற்றையும் பேரவாவையும் தனதுள்ளத்திலும் உணர்ச்சியிலுந் தங்கவிடாமல் நீக்கும் முயற்சியிலிருப்பான். இதையே நீக்க வேண்டிய சித்தமுயர்ச்சி என்னப்படும்.

தனதுணர்ச்சியிலும் உள்ளத்திலும் எழுந் தீங்குகளையும் அவாக்களையும் உதிக்கவிடாமலுந் தோற்றவிடாமலுந் தடுக்கும் விழிப்பிலுஞ் ஜாக்கிரதையிலு மிருந்து அவைகளுடன் போராடி தன் மனதைத் திடப்படுத்திக்கொள்ளுவான். பேராசைக் கோபம் பொய்க் காட்சியால் உதிக்கும் எண்ணங்களைத் தடுத்து அவைகள் வேரூன்றி நிற்க இடங்கொடுக்க மாட்டான். அதை எக்காலும் எழ விடாமல் நசுக்கி நிர்மூலமாகும் படிப் பிரயாசைப்படுவான். தீங்குகளுக்கு மூலமாகுஞ் சொற்ப எண்ணம் உள்ளத்தில் தங்கிவிடுமாயின் உடனுக்குடன் கோபம், பேராசை, பொய்க்காட்சிகள் தோன்றி சுகமற்ற எண்ணங்கள் உதித்துவிடும். ஆதலின் சுகமற்ற எண்ணங்கள் சொற்பமேனும் உள்ளத்தில் தங்கவிடாமல் தடுத்துக்கொண்டுவருவான்.

தனது ஆழ்ந்த சிந்தனையால் உள்ளத்திலும், உணர்ச்சியிலும், இன்னின்ன துன்பத்திற்கு ஆதாரத் தீங்குகள் உதிக்கின்றன என்றும் இன்னின்னவகை விழிப்பிலும் ஜாக்கிரதையிலும் அதை வேரூன்றவிடாமல் செய்யவேண்டும்