பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 259

என்றும் கண்டுணர்ந்து அதே விருப்பத்திலிருப்பான். அதாவது தன்னைப் பாழாக்கக்கூடிய எண்ணங்கள் எவ்விடத்து உதிக்கின்றன என்றும் அவ்வகை உதிக்கும் எண்ணங்களின் வித்துக்கள் எவை என்றும் ஆராய்ந்து அவைகளைப் பாழாக்கவுந் தடுக்கவும் முயல்வான். அல்லது ஒரே வைராக்கியத்தினின்று தன் உள்ளத்தில் எழும் கோபம், பேராசை, பொய்க் காட்சியாம் எண்ணங்களைத் தடுத்து நிற்பதால் தீய எண்ணங்கள் யாவும் நசிந்து மனமானது அலையற்ற கடல்போல் நிற்கும். இதையே தீச்செயல் தோற்றங்களைத் தடுக்க வேண்டிய சித்தமுயற்சி என்னப்படும்.

இத்தகைய விழிப்புஞ் ஜாக்கிரதையும் உடையவன் சிந்தனை, விவேகம், ஊக்கம், ஆனந்தம், ஆறுதல், மனநிறை, சமாதானம், சாந்தம் உண்டாக்கும் அறிவை விருத்தி செய்யக்கூடிய ஆதாரங்களையும், ஊன்றியவைகளைப் பிரிக்கக்கூடிய ஆதாரங்களையும், நிர்மூலப்படுத்தக்கூடிய ஆதாரங்களையும், துறவுக்கு ஆளாக்கும் ஆதாரங்களையும் உதிக்கச்செய்கின்றான். அதினால் சருவசீவர்களையும் ஆதரிக்கக்கூடிய உதிப்பும், சருவசீவர்களுந் தன்னைப்போல் சுகமடையவேண்டும் என்னும் உதிப்புஞ் சருவ சீவர்களுஞ் சுகவாழ்க்கை யிலிருக்கத் தான் காணவேண்டு மென்னும் உதிப்புஞ் சீவர்களுக்கு எக்காலுந் தருமங்களை ஊட்டவேண்டுமென்னும் உதிப்புந் தன்ம வார்த்தைகளே செவியில் கேட்கவேண்டுமென்னும் உதிப்பும் உள்ளத்தில் வளரவேண்டிய முயற்சியையே உதிக்கச்செய்யவேண்டிய முயற்சிகள் என்னப்படும்.

இத்தகைய சுகவழியாம் எண்ணங்களைப் பாதுகாத்து அவைகளை நாசமாகவிடாமல் நல்லூக்கத்தால் முன்னுக்குக் கொண்டுவந்து இடைவிடா விழிப்பினின்று தைரியத்துடன் மனதை நிலைக்கச் செய்கின்றான். இவ்வகை நல்லுணர்வை பாதுகாப்பவன் அதிதீவர பக்குவ ஜாக்கிரதையிலிருக்கின்றான். சோம்பலற்று சுருசுருப்பினின்று மத்தியபாதையில் நடப்பான். அதாவது தராசின் முள்ளானது சரிநிறைப்பெற்று மத்தியில் நிற்பதுபோல் வேண்டுதலும் வேண்டாதலுமாகிய மத்தியநிலையில் நிற்பான். அவனது மாமிஷம், நரம்பு, என்பு, தோல் முதலியவைகள் சுருங்கி மாறுபடினும் தனது நன்முயற்சிகள் மாறுபடாது விடாமுயற்சியிலும் ஆண்மெயிலும் இடைவிடா சாதனத்திலும் உள்ள நிலையைப் பாதுகாக்க வேண்டிய முயற்சிகள் என்னப்படும். இவைகளே நன்முயற்சிகளாம்.

சம்மா ஸத்தி - நற்சிந்தனை

ஓ! சகோதிரர்களே! இவ்விடம் நற்சிந்தனையை விளக்குகின்றேன். நற்சிந்தனையில் நான்குவகை உண்டு. அதாவது:- 1. காயா சம்யக்ஸ்மிருதி 2. வேதனா சம்யக் ஸ்மிருதி 3. சித்தா சம்யக் ஸ்மிருதி. 4. தம்ம சம்யக் ஸ்மிருதி (இதன் விவரம்) 1. தேகத்தை மலபாண்டமென்றும், அசுத்தமென்றும் சிந்தித்தல் 2. உணர்ச்சிகளிலிருந்து உண்டாகுங் கேடுகளை சிந்தித்தல் 3. எண்ணங்களில் நிலையில்லா செய்கைகளை சிந்தித்தல் 4. அந்தரங்கத்தோர் விகாரங்களை சுத்த அறிவுடனும் புலன்கள் விழிப்பினின்றும், உலக அவாவினின்றும், துக்கத்தினின்றும், தருமசிந்தனையை சிந்தித்தல் இவ் விநான்கையே சத்தி பதானங்களென்றும் அல்லது முக்கிய தியானத்தின் நான்கு பாதைகள் என்றுங் கூறப்படும்.

இவற்றுள் 1-வது (காயா) ஸம்யக் ஸ்மிருதி தேகத்தைப்பற்றியச் செயலும், சிந்தனையும் யாதெனில், தேகத்தில் அமைந்துள்ள நவத்துவாரங்களிலும் மயிர்க்கால் பீரல்களிலும் படிந்துள்ள தூசுகளை சுத்தநீரில் கழுவி சுத்தவஸ்திரம் அணைந்து அரவமற்ற ஏகாந்த ஸ்தானத்திலேனும், வனங்களிலுள்ள விருட்சத்தின் அடியிலேனும் சுகசீலத்தில் உட்கார்ந்து உலகதோற்றமாம் சருவசீவர்களின் சுகத்தை சிந்திக்க வேண்டும்.

அவ்வகை அன்பின் பெருக்க சிந்தனையால் ஊசியில் கோர்த்துள்ள சரடு ஊசி செல்லுமிடங்களில் துடர்ந்து செல்லுவதுபோல் மனதில் தொந்தித்த மூச்சானது மனதைத் தொடர்ந்து சிந்தனை லயிக்குமிடத்தில் மூச்சானது உள்ளுக்கடங்கியும் சிந்தனை பரவி நிற்குங்கால் மூச்சானது வெளிக்கோடியும்