பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வரும். இவ்வகையாக மூச்சு உள்ளுக்கடங்குவதும், வெளிக்குப் பரவுவதும் தோற்றங்கள் விரிகிறதும் மறுபடியும் மடிகிறதுமாகியச் செயல்கள் யாவும் மனத்தின் செயலென்றே சிந்தித்தல் வேண்டும். இவ்வகை சத்தியசிந்தனை பெருக்கத்தால் மூச்சானது இவ்வளவு நேரந் தனக்குள் அடங்கியிருந்ததென்றும் இவ்வளவு நேரம் வெளிக்குச் சென்றதென்றும் உணருவான். இவ்வகை உணர்ச்சியால் மனமும் மூச்சும் மூக்கு முனையில் சேர்வதைக் காண்பான். அவ்வகைச் சேர்க்கையைக் காணுங்கால் தன் தாயின் கருப்பையில் கட்டுண்டு ஒன்பதா மாதத்தில் துள்ளி விளையாடும்போது மூச்சோடிக்கொண்டிருந்த ரந்தனத்தைச் சுழிமுனையில் காண்பான். அக்காட்சியால் மூச்சு ஒடுங்கு நிலையும் விரியு நிலையுந் திட்டமாயறிந்து முன் ஜெநநத்தின் கன்மகாட்சிகளைக் காண்பான். முன் கன்ம காட்சியைக் கண்டவுடன் இனி தோற்றுங் கன்மங்களுக்கு இடங்கொடாமல் விழிப்பிலும் நற்சிந்தையிலும் நிலைப்பான்.

இவ்வகையால் நிலைத்தவன் தன் தேகத்தையும் எதிரி தேகத்தையும் நோக்குவான். அவ்வகை நோக்குவோன் தேகமானது பதவிதாது அபோதாது, தேஜோதாது, வாயோதாது என்னும் நான்குவகை பூதச்சேர்க்கையின் ஏதுவால் தோன்றியதென்றும் அத்தோற்றத்தில் மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம் இவைகளதின் பிரிவென்றும்; சப்த, பரிச, ரூப, ரச, கந்த, எண்ண ங்களாம் அதன் செயல்களென்றும் உணர்ந்து அவ்வகைக் கூர்ந்த உணர்ச்சியால் விக்ஞானமென்னும் அறிவினின்று அதே விக்ஞான அறிவிநிலையில் நாமஸ் கந்தத்தையும், ரூபஸ்கந்தத்தையும் அறிகின்றான்.

இதில் வாய், கண், செவி, மூக்கென்னுந் தோற்ற ஸ்கந்தங்களே ரூபமென்றும், வேதனா, ஸஞ்ஞா, ஸம்ஸ்காரம், விஞ்ஞானம், நுகர்ச்சி, குறிப்பு, பாவனை, அறிவு என்றுஞ் செயலின் ஸ்கந்தங்களே நாமமென்றுங் கூறப்படும்.

இத்தகைய நாம, ரூபம் இரண்டையும் உணர்ந்தவன் தன் தேகத் தையும், எதிரி தேகத்தையும் பஞ்சஸ்கந்த சேர்க்கைகளென்றே தெரிந்து கூறுவான்.

தன்தேகம் எதிரிதேகம் உண்டாகிய கன்மங்களையும் தன்தேகமடிவுக்கும், எதிரிதேக மடிவுக்கும் ஏதுவாகிய கன்மங்களையுஞ் சிந்தித்து தேகமென்னும் ரூபமும் பாழ், உயிரென்னும் நாமமும் பாழென்னும் இரண்டற்ற நிலையில் நிற்பான்.

நான் உட்கார்ந்தேன், நான் படுத்தேன், நான் நின்றேன், நான் சாய்ந்தேனென்னும் ஒரு பொருள் தனியே இருக்கவில்லை. நான் என்பது எப்படி உட்காரும், நிற்கும், படுக்கும் என விசாரித்து இது வீண் வார்த்தை என்று அறிந்து தன்தேகத்தைப் பற்றியும் அன்னியர் தேகத்தைப் பற்றியுஞ் சிந்திப்பான்.

இந்த தேகம் உரோமத்தால் சூழ்ந்து நகம், பல், சதை, என்பு, மூளை, குண்டிக்காய், ஈரல், பித்தம், கபம், உதிரம், சீழ், உயிர் நீர், வியர்வை , சளி, மூத்திரம், கண்ணீர், தாது முதலிய உருப்புகள் சேர்ந்திருக்கின்றனவென்றும் இது காலத்திற்குக்காலந் துற்கந்தத்தைக் கொடுத்துக்கொண்டே வருமென்றும்; இவைகளில் ஒன்று கெடுமாயின் சகலமுங் கெடுமென்றுஞ் சிந்திப்பான்.

இவ்வகையாற் கெட்டழியுந் தேகம் மயானத்தில் இன்னு மாறுபட்டு நிறமுங் கெட்டு ஊதலிட்டிருப்பதைக்கண்டு தன் தேகமும் பிறர் தேகமும் இதுபோல் கெடுமல்லவா என்று சிந்திப்பான்.

இன்னோர் இடத்தில் கெட்டுள்ள தேகத்தை நரிகளுங் கழுகுகளும் பிடுங்கித்தின்பதைக்கண்டு நம்முடைய தேகத்தையும் பிறனுடைய தேகத்தையும் நரிகள் பிடுங்கித்தின்னுமல்லவா என்று சிந்திப்பான்.

அவ்விடத்திற் கிடக்குந் துண்டெலும்புகளைப்போலுங் குப்பல் எலும்புகளைப்போலுந் தன்னுடைய என்புகளும் பிறனுடைய என்புகளுஞ் சேர்க்கப்படுமல்லவா என்று சிந்திப்பான்.

கால் என்புகள் ஒருபுரமும், கை என்புகள் ஒருபுரமும், தலை என்புகள் ஒருபுரமும் பலர் கால்களிலும் உதைப்பட்டு உருளுவதைக் கண்டு நம்முடைய என்புகளும் பிறனுடைய என்புகளும் மிதியும் உதையும்பட்டு உருளுமோ என்று சிந்திப்பான்.