பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மாறி கோவைக் காய்கள் போல் சிலநாள் அவ்விலையின் காம்பில் தொங்கிக்கொண்டிருந்து வெடித்து சருகு பட்சிகளாய் வெளியிற் பறந்தோடுவது இயல்பாம். அதுபோல் மனிதனும் பேராசை, கோபம், காமம், பொய்க்காட்சி, வீணெண்ணம் இவைகளினின்று விடுபட்டு சாந்தம், ஈகை, அன்பு மூன்றும் பெருகியவிடத்து இதயசுத்தம் உண்டாகி கலை வளர்ந்து பூரணமடைந்து தோற்றங்களில் உண்டாகும் பற்றுக்களற்று பிறவியினின்று மீண்டு நித்திறை என்பதற்று சதா விழிப்புள்ளவனாய் இரவு பகலற்ற பரிபூரண மௌனநிலை அடைகின்றான்.

அவ்வகை மௌனபாக்கியந் திரண்டவுடன் முன்பு அநித்தியத்தினின்றவன் நித்தியனாகின்றான். ஆத்துமாவினின்றவன் அனாத்துமனாகின்றான். ஜநநங்கள் தோறும் பொய்யனாக நின்றவன் உண்மெய்யனாகின்றான். அப்பொய்யற்ற மெய்யே நிருவாணமென்னப்படும்.

இதுவே அதீதப்பட்ட ஞானம். இதுவே துக்கம் நீங்கிய இடம். இதுவே பிறப்பிறப்பற்ற நிலை. இதுவே சத்திய பீடம். இதுவே உள்ளத்துறவு. இதுவே பரமசாந்தி. இதுவே சுகவாரி. இதுவே பரமானந்தம். இதுவே பரிபூரணம். இதுவே சருவ உலகங்களையுந் தோற்ற வைக்கும் பளிங்கு. இதுவே சருவ உள்ளங்களையும் அறியத்தக்க பளிங்கு. இதுவே சாந்தம் நிறைந்த பிரமம். இதுவே அன்பு நிறைந்த சிவம், இதுவே யீகை நிறைந்த ஈசன். இதுவே சுகமுத்தி. இதுவே பரமோக்ஷம். இதுவே நிருவாணமுமாம்.

இத்தகைய மெய்கண்ட நிருவாணநிலை அடைந்தவனே புத்தனாவன். இவ்வகைப் புத்தனானோன் சருவசீவர்களின் யீடேற்றங் கருதி ஒவ்வொரு சீவப்பிராணிகளின் மீதும் அன்பு பாராட்டி அஹிம்சா தருமத்தை நாட்டி புற்பூண்டுகளிலிருந்து உயர்ந்து புழுக்கீடாதிகளாக தோற்றுவதற்கு இடை யூறுகள் நேரிடாமலும் புழுக்கீடாதிகளிலிருந்து உயர்ந்து மட்சம் பட்சிகளாகத் தோற்றுவதற்கு இடையூறுகள் நேரிடாமலும், மட்சம் பட்சிகளிலிருந்து உயர்ந்து மிருகாதிகளாகத் தோற்றுவதற்கு இடையூறுகள் நேரிடாமலும், மிருகாதிகளினின்று உயர்ந்து மக்களென்னும் மநுக்களாகத் தோற்றுவதற்கு இடையூறுகள் நேரிடாமலும், மநுக்களிலிருந்து உயர்ந்து தேவர்களாகத் தோற்றுவதற்கு இடையூறுகள் நேரிடாமலுந் தடுத்து சத்திய தன்மம் என்னும் மெய்யறமாம் சுகவழியைக் காட்டி துக்க நிவர்த்தியாம் பிறப்பறச் செய்வான்.

விவேக சிந்தாமணி

மெய்யதைச் சொல்வாராகில் விளங்கிடு மேலு நன்மெய்
வையகமதனைக் கொள்வார் மனிதரிற்றேவராவார்
பொய்யதைச் சொல்வராகிற் போசன மற்பமாகும்
நொய்யவரிவர்களென்று நோக்கிடாரறிவுள்ளோரே.

சீவகசிந்தாமணி

ஊன் சுவைத்து உடம்புவீக்கி நரகத்திலுரைதனன்றோ
ஊன்றினாது உடம்புவாட்டி தேவராயுரை தனன்றொ
ஊன்றியிவ் இரண்டினுள்ளும் உறுதி உரைதி என்ன
ஊன்றினாதொழிந்து புத்தேளாவதே உறுதி என்றான்.

திரிக்குறள்

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந்தொழும். கொல்லான்
புலாலை மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிருந் தொழும்.

ஓ! சகோதிரர்களே! நிருவாணம் பெற்றவனாகும் நித்தியனுக்கு இத்தகைய சுத்தகுணம் உண்டாகி சருவ சீவப்பிராணிகளுக்கும் உண்டாகும் துக்கங்களை நிவர்த்திக்க வேண்டிய எண்ணம் பிறப்பதுடன் துன்பங்களின்று விடுபட்டு மேற்பிறவியடைய வேண்டிய நீதிநெறிகளையும் புகட்டுவது காரணம் யாதெனில், தான் அடைந்த சாந்தத்தை மற்றவர்களும் அடைய வேண்டும் என்றும், தான் பெற்ற சுகத்தை மற்றவர்களுஞ் சுகிக்கவேண்டியதென்றும், தானடைந்த மனவமைதியை மற்றவர்களும் அடையவேண்டும் என்றும், தனக்குள் கண்ட சுயம்பிரகாசத்தை மற்றவர்களுந் தங்களுக்குள் காண