பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஏழாவது தோற்றமாக உயர்ந்து உயர்ந்தோர் மாட்டே உலகென்னும் ஒப்புவமெயுற்றிருப்பன். மநுகுலத்தோனே தனது நன்முயற்சியால் தேவனென்னும் ஏழாவது தோற்றமடைவன்.

சங்கங்களின் ஸ்தாபனம்

இத்தகைய அஷ்டாங்கமார்க்கத்தால் மன அமைதிப் பெற்று துக்க மற்ற அறஹத்துக்களும் தங்கள் சிஷியர்களுக்கு இதே மார்க்கத்தைப் போதிப்பரென்பது சத்தியம். அச்சிஷியர்களும் போதிநிலையாம் ததாகத மடைந்து அவர்கள் சிஷியர்களுக்கும் போதிக்கும் பரிசுத்த சாந்தியுமொன்று, மார்க்கமுமொன்று அடையும் முத்தியும் ஒன்றேயாகும்.

ஓ! சகோதிரர்களே! சாந்தமும், அமைதியும், அன்பும், கருணையுமான ததாகதருடைய மார்க்கத்தின் பலனை யாதென்று கூறுவோமாயின் ததாகதருடைய நிகரில்லா தருமத்தைக் கண்ட சிஷியனை காடுகளழைக்கும், தனித்த இடங்களை அழைக்கும். ஆதலின் சத்தியதன்ம விசாரிணை உங்களைக் கூப்பிட்டழைக்குங்கால் தாமதியாது புறப்படுங்கள். பரிசுத்த தியானத்தில் நில்லுங்கள். நின்றவிடத்தில் ததாகதர் அருளிய ஞானமாம் மௌன மனவமைதிப்பெற்று ததாகதர் நிலையை அடையுங்கள். அப்போது சஞ்சலத்தில் ஆழமாட்டீர்கள். சத்திய தன்மத்தையே ஆசானாகக் கொள்ளுங்கள். சகல தோற்றங்களும் அழியத்தக்கவைகளாதலின் ஜாக்கிரதையுடன் சுகவழியாம் அஷ்டாங்க மார்க்கத்தில் நடந்து வீடடையுங்கள் வீடடையுங்கோளென்றார்.

இவ்வகையாக புத்தபிரான் நான்கு வாய்மெகளின் விவரங்களையும் அஷ்டாங்கமார்க்கத் தெளிவையும் அதன் பலனையும் இதே தேகத்தில் அறியவேண்டிய சுபேச்சையையும் ஊட்டி சுகமடையச் செய்த பெருநன்றிக்கேற்ற பிரிதிபலனளிக்கப் போதாவாரணாசி வாசிகள் யாவரும் ஒன்றுகூடி அவரது ஈகையின் செயலாம் தன்மத்தை முன்னிட்டு வாரணாசி காசி விசுவநாதா, காசிவிசுவேசா, காசியப்பனே எங்களி தயங்களில் சதா குடி கொண்டிருந்த இருளை அகற்றிய பகவனே பகவனே என்று வணங்கிக் கொண்டார்கள்.

சீவக சிந்தாமணி

குருகுலஞ் சீவக குமரன் கோத்திர, / மருகலில் காசிப னடிகள் வாழியென்,
றெரிமணி முடி நிலைமுறுத்தி யேத்தினான், / புரிமணி வீணைகள் புலம்பவென்பவே.

காசிக் கலம்பகம்

கலை மதியின் கீற்றணிந்த காசிய கிலேசர்,
சிலை மதனைக் கண்ணழலாற் செற்றனர்காணம்மானை.

காசி விசுவநாதர் வாரணாசியில் சாதுசங்கங்களை நாட்டி சிஷியர்கள் யாவரையும் வரவழைத்து நீங்கள் ஒவ்வொருவருந் தனித்திருப்பீர்களாயின் நீங்கள் அநுசரிப்பதாகத் தீர்மானித்துக்கொண்ட சத்தியதருமத்தை உங்கள் பலயீனத்தால் பழயப்படி வழுவடையச் செய்துக்கொள்ளுவீர்கள். ஆதலின் நீங்கள் ஒவ்வொருவருந் தனித்திராது ஒவ்வோர் கூட்டங்களாகவுமிருந்து ஒவ்வொருவருக்கும் உள்ள தரும சங்கைகளை ஒருவருக்கொருவர் விளக்குஞ் சங்கங்களாகுங்கோள் என்று ஆக்கியாபித்தார்.

தரும சங்கைகளை விளக்கி ஒருவருக்கொருவர் தெளிந்துக்கொள்ள வேண்டிய சங்கத்தோர் சகோதிரர்களைப்போல் அன்பில் ஒன்றாகவும் சுத்தத்தில் ஒன்றாகவும், முயற்சியில் ஒன்றாகவுங் கூடிவாழுங்கள்.

உலகிலுள்ள சீவராசிகள் யாவுந் தரும ராட்சியத்தின் குடைக்கீழ் வாழும்படி அகிம்சா தருமத்தை ஊட்டுங்கள். சத்தியதர்மத்தை நான்கு திசைகளிலுஞ் சென்று பிரசங்கியுங்கள்.

இதுதான் பரிசுத்த சகோதிரக்கூட்டம். இதுதான் புத்தசங்கம். இது தான் சகல சீவர்களின் அடைக்கல ஸ்தானமென புத்த சங்கங்களை ஸ்தாபித்தார்.

இத்தகைய வாரணாசி சங்கஸ்தாபனத்துள் கவுண்டியனென்பவன் காசி விஸ்வேசன் போதனைகளைக் கவனமுறக்கேட்டு கருத்தில் பதிவு செய்வதைக் கண்ட கடவுள் நித்தியமாகவே கௌண்டண்யன் சத்தியதன்மத்தை உணர்ந்தா னென்றார்.