பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயம் / 19

தேனடரு மானந்த செங்கமலத் தாளருள
மானிடர் போல் மண்மிசையில் வந்தததிசயமே

என்று நிகழ் காலத்திரங்கலிலும்

மானிடமாய் வந்ததிரு மேனியின்றன் மையுணராதார் நேரா வருளே
வறிவென்றறியாதார்.

என்று தத்துவக்கலி மடலிலும் மற்றுமுள்ள ஞான நூற்களிலும் அவரை குருமுகூர்த்த மாகக் கொண்டாடி வந்தவை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகின்றது.

சையாம், ஜப்பான், சீனம், பர்மா, தீபேத், நேபால், சிலோன், ஆசாம் முதலிய தேசத்தோர்கள், நமோதஸ்ஸ பகவத்தோ அதோ சம்போசம் புத்தஸ்ஸ என்னுங்கீதையை அவரவர்களுடைய பாஷையினாலும் இக்கீதையினாலும் தியானித்து வருகின்றார்கள்.

இதன் கருத்தோ என்றால் குன்றாத மனபாக்கியமும் மேலான மகத்துவமும் வந்தனையுடையவும் ஞானிகள் யாவருக்கும் மகாஞானியான புத்த சுவாமியை நமஸ்கரிக்கிறோம் என்பதேயாம்.

மேற்கூறிய தியானத்தில் கூறியுள்ள சம்போ சம்புத்தஸ்ஸ என்னும் வாக்கியத்தை அநுசரித்து திருவள்ளு சாம்பவனார் என்பவர் தான் இயற்றியுள்ள ஞானவெட்டி என்னும் நூலில் சாம்பவ மூர்த்தியாகிய புத்தருக்குப்பட்டங் கட்டியவர்களும் அவருடைய குடும்பத்தோர்களுமாகிய வள்ளுவர்கள் நாங்களென்றும் சாக்கைய குலவம்மிச வரிசையை விளக்கியும் வள்ளுவர்களை பறையரென்று இழிவு கூறி வருவது நியாயமல்ல என்றும் வெகுவாகக் கண்டித்து எழுதியிருக்கின்றார் - பட்டமென்பது மணமகனுக்கும் மணமகளுக்கும் உரிய குடும்பத்தார் இன்னாரின்னாரென்று, தெரிந்து கொள்ளுவதற்கு தங்கதகட்டினால் நெற்றியில் கட்டும் ஓர்வகை விருதென்னப்படும். திராவிடபாஷையின் ஒலிவடிவகாலம், அட்சரகாலம், இலக்கணகாலம், சமுதாயகாலம், அநாதரகாலம் இதிகாசகாலம், ஆதீனகாலம், என்னும் சப்தகாலங்களில் சமுதாய காலமுடிவில், கடைச்சங்கம் இரண்டாயிர வருஷம் இருந்ததாகத்தெரிய வருகிறது அக்காலத்தில் திருவள்ளுவ நாயனார் குறள் ஏற்படுத்தியிருக்கின்றார்.

அவருடைய குறள் ஏற்பட்டு ஏறக்குறைய மூவாயிர வருஷமாகிறது.

சமுதாய காலத்திலேனும், அநாதர காலத்திலேனும், சாதிபேதத்துக்குரிய சரித்திரங்கள் யாதொன்றுங் கிடையாது.

பாரத இராமாயண முதலியவைகள் ஏற்பட்ட, இதிகாச காலத்தில் சாதிபேதங்கள் ஏற்பட்டிருப்பதாக சரித்திர ஆதரவுகள் இருக்கிறபடியால் திருவள்ளுவ சாம்பவனார் இயற்றிய ஞானவெட்டி வெளிவந்து ஏறக்குறைய 1700 வருஷமாகிறது.

1800 வருஷங்களுக்கு முன் இத்தேசத்தில் புத்தருடைய மகத்துவங்களையும் அவருடைய திருவிழாக்களையும் கொண்டாடி வந்ததாக சரித்திர ஆதரவுகளும் சிலாசாஸனங்களும் இருக்கிறபடியால் சாதிபேதங்களை ஏற்படுத்தி புத்தமதத்தை நிலைகுலையச் செய்து புத்தமதத்தோரை பறையரென்று ஏற்படுத்திய காலம் ஏறக்குறைய 1700 வருஷத்திற்கு உட்பட்டதேயாம்.

உலகெங்கும் சாதி வித்தியாசமென்னும் மடமையில்லாமல் சொற்பதேசமாகிய தென்னிந்தியாவில் அனந்தசாதிகள் ஏற்பட்டிருப்பதற்குக் காரணமென்ன என்றால் புத்த மதத்தைச் சார்ந்த சாக்கைய குலத்தோரை பறையரென்று கடைசாதியாக ஏற்படுத்தி புத்தமதத்தை தலைஎடுக்கவிடாமல் செய்வதற்கும்.

புருசீக தேசத்தார் தங்களை பிராமணர் பிராமணரென்று உயர்த்திக் கொண்டு தங்கள் சீவனத்திற்கு ஏற்படுத்திக்கொண்ட மதங்களை விருத்தி செய்வதற்குமேயாம்.

சாக்கைய வகுப்பென்பது என்ன என்றால் பூர்வகாலத்தில் வருங்காலம் போங்காலங்களை அறிந்து சொல்லக்கூடிய ஆரூடர்களுக்கு சாக்கையர் களென்றும் - வள்ளுவர்களென்றும், நிமித்தகர்களென்றும் வகுத்து வைத்திருந்தார்கள்.