பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஆனால் தாங்களளிக்கும் சத்திய தன்ம முதலைக் கள்ளர்கள் அபகரிக்கவாவது, வஞ்சினர்கள் பொஞ்சிக்கவாவது, வழிப்போக்கர் எடுக்கவாவது முடியாதென்று கேழ்விப்பட்டு அந்த சத்தியதன்ம முதலைப் பெற வேண்டி தங்களை சரணடைந்தோம். தாங்களும் அருள்சுரந்து சத்திய தன்ம அமுதாகும் முதலை ஊட்டி ஆதரிக்க வேண்டுமென்றார்கள்.

இவர்களது அதி தீவிரத்தையும் அன்பின் மிகுதியையுங் கண்ட அருகன் சிறுவர்களை நோக்கி நீங்கள் நால்வரும் ஒவ்வோர் மனைவியை அடைந்து மக்களை ஈன்று உலக விருத்தி செய்து சுகமடையவேண்டிய திருக்க என்னை நாடி யாது சுகம்பெற வந்தீர்களென்றார்.

ஒப்பிலா அப்பனே! உலகத்தில் தோன்றியுள்ள சருவசீவர்களும் பொருளைச் சேர்ப்பதும் அதன் போக்கால் வருந்துவதும் பெண்களைச் சேர்ப்பதும் அதன் மாறுதலால் வருந்துவதும் பிள்ளைகளைப் பெறுவதும் அதன் பிணியின் உபத்திரவங்களால் வருந்துவதுமாகியச் செயல்களைக் கேட்டும் இருக்கின்றோம், கண்டும் இருக்கின்றோம். ஆதலின் அவர்களைப்போல் சதா துக்கநிலை சாராமல் தங்களைப்போல் சதா சுகநிலைப்பெற வந்தோம் என்றார்கள்.

அதையுணர்ந்த அருகன் புந்நகைக்கொண்டு சிறுவர்களை நோக்கி உலகசீவர்கட்படும் சதா துக்கத்தை உங்கள் கண்களால் பார்ப்பதுமன்றி கேட்டுமிருக்கின்றீர்கள்.

ஆயினும் ததாகதர் சதானந்தத்திலிருப்பதை எவ்வகையால் அறிந்துக் கொண்டீர்களென்றார்.

சிறுவர்கள் ஜினனை வணங்கி சினேந்திரா! ஈதுவேண்டும் வேண்டா மென்னும் புசிப்பினாலும் இவ்வுடை வேண்டும் வேண்டாமென்னும் போர்வையினாலும் இவ்விடம் வேண்டும் வேண்டாமென்னும் நிலையினாலும் உமது முகத்தில் எக்காலுங் காணும் ஆனந்த தேஜசினாலும் நாளுக்குநாள் போதனா சக்த்தியால் மிகுத்துவரும் இனிதான வாக்கினாலும் இரவும் பகலும் நித்திறையற்று சதா விழிப்பிற் சுகித்திருக்குஞ்சுகத்தினாலும் நீவிரெக்காலும் சதானந்தத்தில் சுகித்திருக்கின்றீரென்று கண்டோமென்றார்கள்.

அதைக்கேட்ட பகவன் சிறுவர்களை நோக்கி அத்தகைய சதானந்தத்தை விரும்பும் ஒவ்வொருவனும் புத்ததரும சங்கத்தைச் சார்ந்து அற நூல் விசாரிணைப் புரிந்து அன்பைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

அதற்கு சிறுவர்கள் பகவனைநோக்கி ஐயனே! தாங்கள் அளித்துள்ள அற நூலால் ஒழுக்கங்களைப் பெருக்கிக்கொண்டபோதிலும் எங்களுக்குள்ள அன்பை எவ்வகையாற் பெருக்கிக்கொள்ளுவோமென்றார்கள்.

பகவன் நால்வர்களையும் நோக்கி சிறுவர்களே! நீங்கள் நால்வருங் குடும்பத்திலுள்ள குழந்தைகள் முதல் பெரியோர்களீறாக அன்புபாராட்டி வந்தீர்களா இல்லையா. யட்சனைத் தேடிவந்தது அன்பு பாராட்டியா இல்லையா என்றார்.

சிறியோர்கள் மேலோனை வணங்கி சினேகித அன்பின் மிகுதியால் அவனைத் தேடிவந்தோமென்றார்கள். சிறுவர்களே! சினேகிதமென்பது யாதெனில்:- ஒருவனை நேசித்தபோது அவனுக்குள்ள இடுக்கங்களைத் தனக்கு வந்த இடுக்கங்களைப்போல் கருதி தீர்த்தலும், அவனுக்குள்ள பசியின் உபத்திரவங்களை தன் உபத்திரவம்போல் கருதி ஆற்றலும், தன்மனையில் யாதொரு கோபச்செயலிலிருந்தபோதினும் அவனைக் கண்டவுடன் சினமகற்றி இதம் பாராட்டுதலுமாகியச் செயல்களையே அன்பென்றும் சிநயிதமென்றுங் கூறப்படும்.

இத்தகைய குணநிலையை மகட பாஷையில் சிவமென்றும், சகட பாஷையில் இதமென்றும், திராவிட பாஷையில் அன்பென்றும் வழங்கப்பெறும். அன்பின் மிகுதியால் சருவசீவர்களின் குற்றங்களையும் பொறுத்து ஆதரிக்குங் குண நிலைக்கு மகடபாஷையில் பிரமமென்றும், சகடபாஷையில் சாந்தமென்றும், திராவிட பாஷையில் தண்மெயென்றுங் கூறப்படும். அன்பின் மிகுதியால் சருவசீவப்பிராணிகளுக்கும் புசிப்பூட்டி நல்வழி காட்டுங் குண