பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 283

சுழுப்த்தி என்னும் சோம்பலறுத்தல் அரிது, துற்செயல் அணுகாமல் ஜாக்கிரதையில் நிற்றலரிது. மறவாநிலைப்பெற்று நிற்றலரிது. பால விருத்தமற்று எக்காலுங் குமரனாகக் காண்டலரிது. சதானந்தத்தில் இருப்பதரிது. சதா போதத்தில் இருப்பதரிது. சதா நீதியிலிருப்பதரிது. சதாவன்பிலிருப்பதுமரிது.

இத்தகையச் செயல்களையுங் குணங்களையும் யாவரிடத்துங் கண்டறியோம். ஆயினும் உலகத்தில் சிரேஷ்டமென்னும் பரமலாபத்தைக் கண்டடைந்தவர் தாங்களென்றே காண்கின்றோம். உலகத்தில் சிரேஷ்ட ஆனந்தமாகும் பரமானந்தத்தைக் கண்டடைந்தவர் தாங்களென்றே அறிகிறோம்.

ஓர் குடும்பத் தலைவருள் சிரேஷ்ட நீதியதிபதியைவிட உலகத்திற்குத் தலைவராய் நீதிபோதராய் விளங்குபவர் தாங்களென்றே காண்கின்றோம். ஆதலின் சதா ஈகை அமைந்த ஆதி ஈசரும் நீரே, சதானந்தமுற்ற ஆதிபரனும் நீரே, சதா அன்புமிகுத்த ஆதிசிவனும் நீரே, சதானந்தமுற்ற ஆதிபரனும் நீரே, சதா அன்பு மிகுத்த ஆதிசிவனும் நீரே, சதா சாந்தமிகுத்த சுயப்பிரமமும் நீரே, சதா நன்மெய் பெற்ற ஆதியங் கடவுளும் நீரே ஆதலின் எங்கள் அநித்திய நிதிகளை மாற்றி நித்தியமாம் பதுமநிதியாகும் உம்மெயும், தன்மநிதியாகும் அறத்தையும், சங்கநிதியாகும் கூட்டத்தையும் நாடினோம்.

எங்களையுந் தங்கள் சங்கத்திற் சேர்த்து தங்கள் அளவுபடா சத்தியதன்மத்தைப் போதித்து தேகமுள்ளபோதே சதானந்தத்தை சாதித்து நிருவாண சுகத்தை அடையும் வழிக்கு ஆளாக்கவேண்டுமென்றார்கள்.

அவ்வாக்கியங்களைக் கேட்ட பகவன் புந்நகைக்கொண்டு சிறுவர்களே! உங்களை ஆளாக்குவதற்குத் ததாகதன் ஆக்குவோனல்லன். நீங்களே அறிந்து தீங்கான எண்ணங்களை அகற்றிக்கொண்டேவரவும், நல்ல எண்ணங்களை விருத்திசெய்துக்கொண்டே வரவும், சீவர்களின் மீதுள்ள அன்பைப் பெருக்கிக்கொண்டே வரவும், சீவ ஹிம்சைகளை அகற்றிக்கொண்டே வரவும், தன்ம சிந்தையைப் பெருக்கிக்கொண்டே வரவும், உலோபசிந்தையை அகற்றிக் கொண்டே வரவும், மயக்கத்தை உண்டு செய்யும் வஸ்துக்களை எக்காலுங் சேரவிடாமல் அகற்றிக்கொண்டே வரவுமாகிய விழிப்பிலிருந்து மனக்களங்கங் களை அகற்றி சுத்த இதயமுண்டாகினோமா என்று உங்களை நீங்களே அறிந்து உண்மெய்யை உணர்ந்துக்கொள்ளுவீர்களாயின் உங்களிடைவிடா விசாரிணையும், திடமுயற்சியுமே உங்களை ஈடேற்றி தேகந் தோன்றினும் அழியினும் சத்தியதன்மமாம் உண்மெய் என்றுமழியாது சதானந்தத்திலும் நித்திய சுகத்திலும் இருப்பீர்களென்றார்.

நால்வரும் சிரமுடி அகற்றி காஷாயம் பெற்று பிச்சாபாத்திரங் கையிலேந்தி சங்கத்திற் சேர்ந்தவுடன் காசி விசுவேசன் வாரணாசியை விட்டு நீங்கி மற்றுந் தேசங்களில் தன்ம சங்கங்களை நாட்டவேண்டுமென்று செல்லுங்கால் யட்சனுடன் நால்வரும் பின்சென்று சங்க அறனை சிலதூரந்தொடர்ந்து ஓரிடத்தினின்று தேவரீர் நாங்கள் முன்ஜெநநத்தில் என்ன ஜெநநமாக இருந் திருப்போமென்று எவ்வகையில் அறிந்துக்கொள்ளக்கூடும் என்றார்கள்.

சங்கறர் ஐவர்களையும் நோக்கி சிறுவர்களே! நாமனைவரும் நேற்று வாசஞ்செய்திருந்த வியாரமாகிய கட்டிடந் தெரிகிறதா என்றார். தேவரீர் நாம் சில தோப்புகளையும் வனங்களையுங் கடந்து வந்துவிட்டபடியால் அக்கட்டிடத் தோன்றவில்லை என்றார்கள். சிறுவர்களே! நாமிப்போது வாசஞ்செய்ததும் தற்காலம் விட்டுவந்ததுமாகியக் கட்டிடம் சொற்ப நேரத்திலுந் தூரத்திலும் மறைந்து தெரியாமற்போமாயின், நான்கு பூதங்களால் அமைந்த தேகமானது ஒன்று குறைந்தும், ஒன்று நிறைந்தும் நசிந்து அந்தந்த பூதங்களுடன் கலந்தும் பற்றியப் பற்றுக்கள் மட்டுந் தனித்துரைந்தும் நூதன பூதத்தால் பரந்தும் மறுஜெநந தோற்றமுண்டாயபோது பாலதானச் செயலால் முன் ஜெநந விட்டகுறை ஈதென்று மற்றோர் விவேகிகள் அறிவரன்றி பற்றியச் செயலை விட்டவன் அறியும் உணர்ச்சிகளற்றுப்போம்.

அதினால் வாலவயது பதினாறு கடந்து குமரபருவம் அடைந்துள்ள இச் செநநத்தில் மரணத்தில் மறைந்தும், மாதுரு கருப்பத்தில் மறைந்தும்,