பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பாலதானத்தில் மறைந்தும் நிற்கும் முன்ஜெநநத்தைத் திரும்பிப்பார்ப்பதானால் அனந்தச்சுழலும் அரியப் படலங்களும் மறைந்திருக்கின்றது. அப்படலங்களாம் இராகத்துவேஷ மோகத்திறைகளை நீக்கி இதைய சுத்தமாம் சுழுப்த்தியற்ற சுப்ரப்பளிங்கினின்று பார்ப்பீர்களானால் முன்ஜெநந தோற்றமும் அதின் கன்மப்பற்றுக்களாஞ் செயலும் கன்மப் பற்றுக்களே உருவெடுத்தாளும் முன்செய்வினையின் பகுதியும் தெள்ளற விளங்கும். அங்ஙனமின்றி ஓர் மயிரையெடுத்து இரவில் பார்ப்பவனுக்குத் தெரியாதது போல் காம, வெகுளி, மயக்கமாம் அஞ்ஞான இருளிலிருந்து முன்ஜெநநத்தை நோக்குதல் தன் வினைப்பயனால் விட்டகுறை தொடர்ச்சி தனக்குளிருந்தும் அஃது விளங்குவதரிதேயாம்.

ஆதலின் நீங்கள் ஒவ்வொருவரும் முன்ஜெநநம் யாது பின்ஜெநநம் ஏதென்று உசாவி வீண்காலங்கழிக்காது காமத்தாலுண்டாகுங் கேடுகளை நோக்குதலும், அவைகளை நாளுக்குநாள் நீக்குதலும், கோபத்தாலுண்டாகுங் கேடுகளை நோக்குதலும், அவைகளை நாளுக்குநாள் நீக்குதலும் மயக்கத்தாலுண்டாகுங் கேடுகளை விழித்து நோக்குதலும் அவற்றை நாளுக்குநாள் நீக்குதலுமாகிய நற்கடைபிடியினின்று இதயத்தை சுத்தி செய்தலென்னும் மனக்களங்கங்களை அகற்றி விடுவீர்களாயின் செல்காலத் தோற்றம் நிகழ்காலத்தோற்றம் வருங்காலத் தோற்றம் யாவும் உங்களுக் குளுணர்ந்து உதயசூரியன்போல் பிரகாசிப்பீர்களென்றோதி அறிவு பெருகு கவென வாழ்த்தி ஐவர்களையும் வாரணாசி வியாரத்திற்கு அனுப்பிவிட்டு ஓர் ஆரணத்தின் மத்தியில் நுழைந்துவிட்டார்.

வீரசோழியம்

அருள் வீற்றிருந்த திருநிழற்போதி / முழுதுணர்முநிவனிற்பரவுதுந் தொழுதக
ஒருமனமெய்தி இருவினைப் பிணிவிட / முப்பகைகடந்து நால்வகை பொருளுணர்ந்
தோங்குநீருலகிடையாவரு / நீங்காவின்பம் ஒடு நீடுவாழ்கெனவே.

12.மானைக்கார்த்து மழுவேந்திய காதை

ஆரணமத்தியில் நுழைந்த அவலோகிதர் செல்லும் வழியில் ஓர் புலியானது மானைப் பற்றிக்கொள்ள அது பதருவதைக் கண்ட கருணாகரன் அருகிற் சென்று மானைவிடுத்து தன்னுடலைப் புலிக்கு தத்தந் செய்தார்.

புலியுடலுடன் பொய்யா மொழியோன் உடல் பொருந்தியவுடன் அப்புலிக்கும் கருணைதோன்றி இருவரையும் விட்டுப்போய் விட்டது. கருணாகரக்கடவுள் மானுடலில் வடியும் உதிரத்தைத் துடைத்தும் காயங்களைப் பொருத்தியும் விட்டு நடக்குங்கால் அம்மான் கன்று மாதவனைப் பின் தொடர்ந்தே சென்றது. அவரும் அதன் அன்பையும் பயத்தையும் அறிந்து யாதொன்றும் பேசாமற் சென்றார்.

வீரசோழியம்

கற்புடை மாரனைக் காய் சினந்தவிர்த்தனை,
பொற்புடைநாகர் தந்துயரம்போக்கினை,
மீனுருவாகி மெய்ம்மையிற் படிந்தனை,
மானுருகார்த்து வான் குணமியற்றினை.
உலகுமிக மனந்தளர்வுற், உயர் நெறியோர் நெறியழுங்கப்,
புலநசைப்ப பெருஞ்சினத்து, புலிக்குடம்பு கொடுத்தனையே.
தீதியில் புலியது பசிகெடு வகைநின.
திருவுருவருளிய திறமுறு பெருமெயை.

அருங்கலைச்செப்பு

மன்னுயிர் காக்கத் தன்னுயிரளித்தல், விண்ணுயர் வேந்தன்றிறம்.

நிகழ்காலத்திரங்கல்

மெலிந்திரைந்த மான்கன்றை வேதியனார் கார்த்து,
புலிக்குடம் பளித்தாண்ட போத அதிசயமே.

மான் கன்று மாதவன் செல்லுங்கால் செல்லுதலும், அவர் நிற்குங்கால் மேயுதலுமாகியச் செயலுற்று அவர் பிச்சாபாத்திரமேந்தி அன்னத்திற்கு செல்லுங்கால் கூடவே நடத்தலும், அவர் யோகசயம் உறுங்கால் கூடவே சயனித்தலும். அவரெழுந்திருக்குங்கால் கூடவே எழுதலுமாகப் பின்சென்றது.