பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 287

இத்தகையத் தண்மெய் அடைதற்கு தென்புலமே தோற்றமாகும். அதாவது நாவினால் அறுசுவைகளை அறிதலும், மூக்கினால் நற்கந்தந் துற்கந்தங்களை அறிதலும், செவியினால் சப்தங்களைக் கேட்டலும், கண்களால் உருவங்களைப் பார்த்தலும், தேகத்தால் பரிசித்தலென்னும் உணர்ச்சி நுகர்தலுமாகியப் புலன்களும் எண்ணங்களுந் தென்பட உசாவுவனேல் தென்புலத்தானாவன்.

அத்தென்புல நுகர்ச்சியால் கண் பார்த்தவிடத்தை மனமிச்சித்தலும், நாவுருசித்த பதார்த்தத்தை மனம் இச்சித்தலும், நாசி முகர்ந்த வஸ்துவை மனம் இச்சித்தலும், செவி கேட்ட சப்தத்தை மனம் இச்சித்தலும், தேகஞ் சுகித்த இடத்தை மனம் இச்சித்தலுமாகியச் செயல்கள் மனங்கோறிய வஸ்துக்கள் கிடைத்தவிடத்து சந்தோஷமும் கிடைக்காதவிடத்து துக்கமும் பற்கடிப்பும் உண்டாய் காம வெகுளி மயக்கங் கொதிப்பேறி தன்னை அடுத்தோர் களையுங் கெடுத்து தானும் கெட்டு மாளா துக்கத்தில் சுழன்று திரிவான்.

மனம் இச்சித்தலாகும் பற்றுக்களற்று சருவ சீவர்களின் மீதும் அன்புற்று சத்தியதானத்தில் நிலைபெற்று நிற்குஞ் சாதனத்தால் சாந்தம், அன்பு, ஈகை திரண்டு தண்மெயுண்டாய் அந்தணனாகுவன்.

அந்தணநிலை அடைந்து சந்தத சுகம் உண்டாகி தேவர் பிரமரென்னும் ஏழாவது தோற்றம் பெற்று எங்கும் உலாவுவர்.

இன்னிலைபெற முயற்சிக்கும் தென்புலத்தாருக்கும் தேவர்களாகும் ஏழாவது தோற்ற அறஹத்துக்களுக்கும் அன்னமிட்டு வருவது ஆனந்ததானமாகும்.

இத்தானத்தை நாடியும் அவர்களே வரமாட்டார்கள். நீங்களே உங்கள் அன்னபதார்த்தங்களை பதினைந்து நாழிகைக்குள் முடித்து வெளிவந்து (அறஹத்தோ அறஹத்தோ அறஹத்தோ) என்று மூன்று சப்தமிட்டு பார்ப்பீர்களானால் ஒரு சங்கத்தை விட்டு மறு சங்கங்களுக்குச் செல்லுந் தென்புலத்தாரும், அறஹத்துக்களாம் தேவர்களும் வருவார்கள். அவர்களுக்கு அன்னமிட்டு நீங்களும் புசித்து ஆனந்தமடையுங்கள்.

திரிவெண்பா

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் என்னும் இவர்
இன்புறத்தாணுண்டல் இனிதாமே - அன்பில், தக்கவரையன்றி
தனித்துண்ண றாவிமீன், கொக்கருந்தென்றே குறி.

திரிக்குறள்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்பறலை.

இத்தகைய தென்புலத்தார்க்கு அன்னமீய்ந்து அவர்கள் சத்தியதன்மத்தைக் கேட்பீர்களாயின் நீங்களும் ஐம்புலனடக்கம் அதி சீக்கிரம் பெற்று அறஹத்துக் களாவீர்கள் என்று முடித்தார்.

கன்னானும் அங்குள்ள சில விவேகிகளுங் கணநாதனை நோக்கி அறநிறைக்கடலே, அன்பின் உடலே! தமதரிய கமலபாதத்திலும், சத்திய தன்மத்திலும், அனந்த சங்கத்திலும் அடைக்கலம் புகுந்தோம். எங்களையுந் தங்களரிய சங்கத்தவர்களாக சேர்த்து சரணாகதித்தரல் வேண்டும் என்று கைகூப்பினார்கள்.

கணநாயகன் அவர்கள் சரணாகதிக்கிரங்கி கராடர் நாட்டிலுள்ளக் கனவான்களைக்கொண்டு புருஷர்களுக்கோர் வியாரமும், இஸ்திரீகளுக்கோர் வியாரமுங் கட்டுவித்து அவ்விடஞ் சிலநாள் தங்கி புருஷர்களுக்கு நான்கு வாய்மெயாஞ் சத்திய தன்மங்களையும், இஸ்திரீகளுக்கு நான்கு கற்பு நிலையாஞ் சத்திய தன்மங்களையும் ஊட்டி துக்க நிவர்த்தியாம் வழியைக்காட்டி சகல பாசபந்தங்களையும் ஒட்டி சருவவியாரங்களிலும் வெண்ணிறமாந் தன்மக் கொடியை நாட்டி புத்ததன்மத்தோர் சேர்ந்து வாழுஞ் சேரிகளைச் சுகம் பெறச் செய்தார்.

நிகழ்காலத்திரங்கல்

கராடர் நாடங்கு கன்னான் மழுவால் / விராடர் பொன் வியாரம் விளித்த ததிசயமே.