பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 289

ஜெந்துவானது நம்மிடங் கொடிய விஷமுள்ளபடியால் நம்மெக்கண்டோர் கொன்றுவிடுவார்கள் என்று பயந்து ஒளிப்பது இயல்பாகும்.

சீவர்களை இம்சிக்கக்கூடாத விஷமற்ற ஜெந்துக்கள் தன்னிடத்து யாதொரு நஞ்சுமில்லாமெயால் நம்மெ யாருங் கொல்லமாட்டார்களென்று எண்ணி அஞ்சாமல் நிற்பது அதனியல்பாகும் என்றார்.

அவற்றை வினவியக் குடிகள் அருகக்கடவுளை வணங்கி எமதை யனே! தோற்றியுள்ள ஜெந்துக்களில் சிலது விஷமுள்ளதாயுஞ் சிலது விஷமற்றதாயுந் தோற்றுங் காரணம் யாதென்று வினவினார்கள். –

அன்பர்களே! காரணத்திற்குத்தக்கக் காரியமென்னும் ஏதுக்குத் தக்கச் செயல்களும் உண்டாகும்.

அதாவது அக்கினியின் வெப்பமும் புழுக்கமும் உண்டாகும் இடங்களில் விஷமுள்ள ஜெந்துக்கள் தோற்றுவது இயல்பாம்.

வாயுவுங் குளிர்ச்சியும் நிறைந்த இடங்களில் விஷமற்ற ஜெந்துக்கள் தோற்றுவது இயல்பாம்.

இவ்விரண்டிற்கும் பூதபேதங்களே காரணமாகும். அதுபோல் உங்களுக் குள்ள காமாக்கினி கோபாக்கினியின் பெருக்கத்தால் விஷம் ஏறி மற்றவர்களை வஞ்சித்துந் துன்பப்படுத்தியும் வருகின்றீர்கள். அத்தகைய விஷத்தை நீங்கள் உள்ளடக்கி உள்ளவர்களாதலின் மற்ற சீவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒளிந்துவருகின்றீர்கள்.

உங்களுக்குள்ள மோக துவேஷ அக்கினி அவிந்து கொடுவிஷம் நீங்கி சாந்தம் அன்பென்னும் குளிர்ந்தநிலைபெருகி அமுதுண்ட கருணை முகங்காணும் அக்காலத்தில் சருவ சீவன்களும் உங்கள் மீது அன்பு பொருந்தி உங்கள் ஏவலை எதிர்நோக்கும் அதினால் நீங்களும் சுகமடைவீர்கள் என்றார்.

அக்கால் மலையின் உச்சி நிறம்பப் பெருங்கூட்டங்கட் சேர்ந்து அருளாழியான் அமுதவாக்கை நோக்கினின்ற யாவரும் அவரடி பணிந்து தங்கள் சீர்பாதமே அடைக்கலம், சத்திய தன்மமே அடைக்கலம் என்றார்கள்.

அவற்றை வினவிய அண்ணல் கூட்டத்தோரை நோக்கி அன்பர்களே! சீர்பாதமே தன்மபாதம். தன்மபாதமே சீர்பாதமாதலின் ததாகதரோதுந் தன்மபாதத்தை ஒவ்வொருவர் இதயத்திலும் பதித்து விஷத்தை நீக்கி அமுதை நிறப்புங்கோளென்று தன்மபாதத்தை விளக்கலானார்.

துவித வாக்கியவர்க்கம்

நம்முடைய எண்ணங்களே நாமாயிருக்கின்றோம், நம்முடைய எண்ணங்களே நமக்காதாரம், நம்முடைய எண்ணங்களால் நாம் அமைந்திருக்கின்றோம். ஒருவன் கெட்ட எண்ணங்களை எண்ணுவானாயின், கெட்ட செய்கைகளைச் செய்வானாயின் வண்டியை இழுக்கும் எருதின் காலை சக்கரமானது பின்பற்றித் தொடர்வதுபோல துக்கமானது தொடர்ந்தே நிற்கும்.

அவன் என்னை அவமதித்தான், அவன் என்னை அடித்தான், அவன் என்னைத் தோற்கடித்தான், அவன் என்னை வஞ்சித்தான் என்று எழும் எண்ணங்களுக்கு ஒருவன் இடங்கொடுப்பானேல் பகை அவனைவிட்டு அகலாது.

அவன் என்னை அவமதித்தான் அவன் என்னை அடித்தான், அவன் என்னைத் தோற்கடித்தான், அவன் என்னை வஞ்சித்தான் என்று எழும் எண்ணங்களுக்கு ஒருவன் இடங்கொடாதிருப்பனேல் பகை அவனை விட்டகலும், ஏனெனில் பகை பகையால் எக்காலத்தும் விலகுவதில்லை. பகை அன்பால் விலகும்.

எவனொருவன் ஐம்புல நுகர்ச்சி தென்படா பெருந் திண்டியிலும், சோம்பலிலும், விவேகக் குறைவிலும் இருந்து சிற்றின்பத்தில் கண்ணாந்து நிற்பவன் காற்றால் மோதுண்டு விழும் மரத்தைப்போல் மாரனால் கீழ்ப்பட்டு மடிவான்.

எவனொருவன் சுருசுருப்பிலும், ஜாக்கிரதையிலும், விடாமுயற்சியிலும் நின்று புலன்கள் தென்படு நுகர்ச்சியினின்று தென்புலத்தானாகின்றானோ