பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 295

ஓ! சகோதிரர்களே! மனோவாக்குக்காயத்தால் யாதொரு குற்றமுஞ் செய்யாதிருக்கக்கடவன். இம்மூன்று வழிகளைத் திருத்தி நன்மார்க்கத்தை விருத்தி செய்துவருவனேல் அறஹத்துக்கள் அடையும் நிலையை அடைவான்.

காயத்தால் தோற்றுவ மூன்று.-1. கொலை. 2. களவு. 3. காமம்.

வாக்கால் தோற்றுவ நான்கு. 4. பொய் 5. கோட் சொல்லுதல். 6. கடுஞ்சொல் 7. வீண் வார்த்தை

மனத்தால் தோற்றுவ மூன்று.- 8. துராசை. 9. படுபகை. 10. பொல்லாக் காட்சி.

எழுந்திருக்கவேண்டிய காலங்களில் எழாதவனும், ஒன்று செய்ய வேண்டிய காலங்களில் செய்யாதவனும், இளமெயும் வலிமெயுமிருந்தும் நிறம்ப சோம்பலும் மந்தபுத்தியுள்ளவனும் மனோதிடமற்றவனுஞ் சபல சித்தமுடையவனும், பேராசை ரூபியும், பெருந்திண்டிக்காரனும் தெளிவு பெரு மார்க்கத்திற்கு பாத்திரவானாக மாட்டான்.

காமமென்னுங் காட்டை வெட்டி சமமட்டமாக்கிவிடுங்கள். ஒரு மரமேனுங் வளரவிடாதீர்கள். காமமென்னுங் காட்டினால் விளையுந் தீங்கோ கொரூரமானது. காட்டையும் வேறோடே வெட்டி சமமாக்கிவிட்ட போதன்றோ பிக்குக்களே நீங்கள் பயமின்றி காட்டின்வழி செல்ல முடியும்.

எதுவரையில் ஒருவன் ஒரு ஸ்திரீயின் பேரில் அவாவை சிறிதளவேனும் செலுத்தி அந்த அவாவினின்று விட்டகலாதிருக்கின்றானோ அது வரையில் அவன் மனம் அடிமைத்தனத்தினின்று விலகாது. கன்றானது தன் தாயின் பாலை அடிக்கடி அருந்த ஆவல்கொள்ளுவது போலாகும்.

தன்ஹா வர்க்கம்

ஓ சகோதிரர்களே! அறிவிழந்தவனிடத்தினின்று உதிக்கும் அவாவானது கொடியைப்போல் படரும். அவன் காட்டிலுள்ள குரங்கானது ஒரு மரத்தைவிட்டு வேறொரு மரத்தைத் தாவி பிடிப்பதுபோல் ஒரு பிறவியினின்று மறுபிறவிக்குச் செல்வான்.

அவாவை வென்ற ஒருவனை உலகத்தார் வெல்லமுடியாது. துக்கமானது தாமரை இலையின்மேல் விழுந்த நீர் துளிகள் விழுந்துவிடுவதுபோல நீங்கிவிடும். ஒரு மரத்தை வெட்டிவிடினும் அதன் வேறிருப்பதால் திரும்ப வளருமன்றோ. வேறையே வெட்டிவிடின் மரம் உதிக்க ஏதுவுண்டா. அவா அற்றவிடத்து துக்கம் ஒழியும்.

அவாவை இன்பத்தின்வழியே ஒருவன் செலுத்துவானாயின் அவனை முப்பத்தியாறு கூர்கால்களால் கொண்டுபோகப்பட்டு தப்புவழியில் சிக்கின அவனை அலைகள் அடித்துச்செல்லும். (காமக்குரோதாதிகள் )

அக்கடற்கால்கள் பலவிடங்களில் ஓட காமக்குரோதாதிகள் என்னும் படர்கொடியானது முளைத்து நிற்கும். அப்படர்கொடி துளிர்த்து வருவதைக் காணில் அறிவால் அதன் வேறை வெட்டித்தள்ளுங்கள்.

ஜீவர்கள் கோறும் இன்பங்களின் பெருக்கமோ அளவிடக்கூடாததும், திருப்தியற்றதுமாயிருக்கின்றன. காமக்குரோதாதிகளால் சிக்குண்டு இன்பத்தை நாடுவதால் ஜீவர்கள் மாறி மாறி பிறப்பதும் இறப்பதுமாய் இருக்கின்றனர்.

ஜீவர்கள் அவாவால் செலுத்தப்பட்டு கண்ணியில் அகப்பட்ட முயல்போல் இங்குமங்கும் அலைகின்றனர். ஜீவர்கள் பலபல பற்றுக்களால் கட்டுண்டு பற்பல துன்பங்களை பலப்பல பிறப்புகளில் அநுபவித்துமாளாமல் பிறந்தும் இறந்தும் வருகின்றனர்.

ஜீவர்கள் அவாவால் செலுத்தப்பட்டு கண்ணியில் அகப்பட்ட முயல்போல் இங்குமங்கும் அலைகின்றனர். ஆகையால் சகோதிரர்களே! காமக்குரோதாதி களினின்று விலகி அவாவிற்கு இடந்தராது நில்லுங்கள்.

ஓ! சகோதிரர்களே! இரும்பாலாய விலங்குகளை ஒருபொருட்டாக மதியார். மனைவி, புத்திரர்கள், பொன் இவைகளினாலாய விலங்கே மிக்க பயங்கரமானது என்பர். அறிவுடையோர்களால் பயங்கரமானதென மதிக்கப்படும் விலங்கினின்று விடுபடுவது மிக்க கடினம். ஆயினும் அதினின்று விடுபட்டால் ஜுவர்கள் உலகைத்துறந்து கவலையற்று அவாவற்று இன்பத்துக்கிடந்தராது நிற்பர்.