பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சிலந்திப்பூச்சானது தன் நூலால் நெய்த வலையின் மத்தியிலிருந்து ஈயாவது, பட்டுப்பூச்சாவது தனது வலையில் விழுந்தால் திடீரென அவைகளின்பேரில் பாய்ந்து அவைகளின் சாரத்தை உரிந்துவிட்டபின் பழைய இடத்திற்கு சென்று தங்குவதுபோல் காமவலையில் அகப்பட்டவர்கள் பொறாமெயால் சீரழிந்தும், கோபத்தால் பைத்தியம் பிடித்தும் அவர்களாலேயே தேடிக்கொண்ட அவாவென்னும் வெள்ளம் அடித்துச்சென்று கடக்க முடியாது விழிப்பர். அவாவை அறுத்துவிடுவார்களாயின் கடையில் உலகைத்துறந்து கவலையற்று இன்பத்துக்கிடந்தராது நிற்பர்.

ஒருவன் சந்தேகத்தால் அலைபவனாகவும், காமமுள்ளவனாகவும், இன்பத்திற்கே அண்ணாந்திருப்பவனாகவும் இருப்பானாயின் அவனது அவாவானது விருத்தியாகி அவாவின் விலங்கால் கட்டுப்பட்டவனாவான்.

பூரண ஸ்திதியை அடைந்தவனும், பாபமற்றவனுமாய் இருப்பவன் எவனோ அவன் வாழ்க்கையின் முட்களை உடைத்தெரிந்தவனும் இனி தேகத்துடன் வாழ பாத்தியதை உடையவனும் ஆகமாட்டான்.

சகலத்தையும் வென்ற ஒருவன் சகலமும் அறிந்தவனாவன். சகலத்தையும் ஒழித்த ஒருவன் சகல அவாக்களினின்று விலகினவனாவன். சகலமும் உணர்ந்து ததாகதனான ஒருவன் தான் கண்ட காட்சியை யாவருக்குப் போதிப்போமென தேடித்திரிவன்.

சகலதானங்களிலும் நிதானமே சிரேஷ்டம். சகல இன்பங்களிலும் நீதியின் இன்பமே விசேஷித்தது. ஆனந்தங்களில் ஈகையிலும், அன்பிலும் ஆனந்திப்பதே துக்கம் ஒழிந்துபோம்.

களைகளால் பயிர்கள் நாசமடைகின்றன. காமத்தால் ஜீவர்கள் அழிகின்றனர். ஆகையால் காமத்தையேவெட்டி எறிந்து விடுவதே சுகத்தைத் தரும்.

களைகளால் பயிர்கள் கெடுகின்றன. பொறாமெயால் ஜீவர்கள் நாசமடைகின்றனர். ஆகையால் பொறாமெயற்று சாந்தத்துடன் வாழ்வதே பெரும்பலனைத் தரும்.

களைகளால் வயல்கள் நாசமடைகின்றன. பெருமையால் ஜீவர்கள் அழிகின்றனர். ஆகையால் பெருமையற்று சமதிருஷ்டியுடன் வாழ்வதே பரமசுகத்தைத் தரும்.

களைகளால் வயல்கள் கெடுகின்றன. துராசையால் ஜீவர்கள் நாசமடைகின்றனர். ஆகையால் துராசையற்றிருப்பதே சுகத்தை விளைக்கும்.

புட்பவர்க்கம்

ஓ! சகோதிரர்களே! வண்டானது மலரிலுள்ள மணத்தையேனும் அதன் அழகையேனுங் கெடுக்காமல் தேனை உண்டு செல்லுவதுபோல் ஜீவர்கள் உலகத்தில் வாழ்க்கைப் பெறவேண்டும்.

விவேகி ஒருவன் அயலாரின் தாருமாறான நடத்தைகளைக் கண்டாயினும் அவர்களின் குற்றாகுற்றங்களை நோக்கியாயினுங் கவலையுராமல் தான் செய்த குற்றங்களைப்பற்றியும், தன்னுடைய சோர்வைப்பற்றியும் கவலையுறுவான்.

ஒரு அழகிய புஷ்பமானது பலவருணங்கள் அமைந்தும் மணமற்றிருப்பதுபோல் ஒருவன் இன்பமானதும் பிரயோஜனமற்றதுமான போதனைகளைக்கூறி அதன்படி நடவாதிருப்பன்.

ஒரு அழகிய புஷ்பமானது பலவருணங்கள் அமைந்தும் பரிமளிப்பதுபோல் ஒருவன் இன்பமாகவும், பிரயோஜனமுள்ளதுமான போதனைகளைக் கூறி அதன்படி நடப்பவனாகியும் இருப்பான்.

பலபுஷ்பங்களைக்கொண்டு ஒரு மாலைக்கட்டுவதுபோல் பல நற்கருமங்கள் செய்துவந்தவன் புண்ணியபுருஷனாக அவதரிப்பான்.

புஷ்பங்களின் மணமானது காற்றின் முகத்தில் அதிதூரஞ்செல்லாது.

ஆனால் புண்ணிய புருஷர்களின் மணமானது காற்றின் முகத்தில் அதிதூரமாகச்செல்லும் புண்ணியன் மணம் எங்கும் வியாபித்து வீசும்.

சந்தணம், தாமரைப்புஷ்பம் இவைகளின் கந்தமோ மிக்க மதிக்கத் தக்கது. ஆனால் இவ்வாசனைகளுக்கெல்லாம் அதீதப்பட்டது புண்ணியத்தின் மணமே.