பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 303

மற்றொருகால் வண்டியை ஓடம் ஏற்றிக்கொண்டு செல்லுவதைக் கண்டிருக்கின்றீர்கள், ஆதலின் ததாகதன் வெறுமனே பூமியில் நடப்பதும், இரதமூர்ந்து பூமியில் செல்லுவதும் ஒன்றென்றே தெரிந்துக் கொள்ளுங்கோள் என்று சொல்லிக்கொண்டே நடந்து வருவதை முன் வேவுகர்களால் அறிந்துக்கொண்ட கபிலை நகரவாசிகளும், மகதநாட்டு வாசிகளும் வீதிகளெங்கும் சுத்தஞ்செய்து வாழைக் கமுகுகள் நட்டு அரசிலைத் தோரணங்கள் கட்டி கந்ததூபங்களிட்டு சுன்னச்சாந்துகள் பூசி சக்கிரவர்த்தித் திருமகன் வருகையைக் கண்ணிமைப்பின்றி எதிர்நோக்கி நின்றார்கள்.

அக்கால் கபிலைநகருள் சென்ற கங்கை ஆதாரன் பொன்னிற காவி அணைந்துள்ள தன்மசங்கத்தோர் தன்னைப்புடைச்சூழ்ந்து நிற்கவும் தானும் அக்காவியை அணைந்து கபோலங் கரத்திலேந்தி குமுத முகமலர்ச்சியுடன் குண்டலம் பிரகாசிக்க வருவதைக் கண்டவர்கள் யாவரும் குதூகலித்து சக்கிரவர்த்தித் திருமகன் சதானந்தன் வருகின்றார் வருகின்றார் என்றும், வீணையில் வல்ல வேணுகோபாலன் வருகின்றார் வருகின்றார் என்றும், அசோதரையை வெறுத்த அவலோகிதர் வருகின்றார் வருகின்றார் என்றும், குமரப்பருவம் குறையா குணசேகரன் வருகின்றார் வருகின்றார் என்றும், எங்கள் இதயத்திருளை அகற்றும் இறைவனாம் ஞானசூரியன் வருகின்றார் வருகின்றார் என்றும், கமலாசன ஞானக்கண்ணன் வருகின்றார் வருகின்றார் என்றும், சர்ப்பங்கள் தழுவி விளையாடும் சாக்கைய முநிவர் வருகின்றார் வருகின்றார் என்றும், பிறவுயிராம் மானைக்கார்க்க புலிக்கு உடம்பைக்கொடுத்த புண்ணியன் வருகின்றார் வருகின்றார் என்றும், கங்கைநதிக்கு ஆதார கருணாகரன் வருகின்றார் வருகின்றார் என்று ஆனந்தக் கூச்சலிட்டு கற்புடைய மாதர்கள் கற்பூர ஆலாத்தி ஏந்தி சாமரை ஆலவட்டங்கள் வீசி கண்ணன்வாழி என்போரும், கமலாசனன் வாழி என்போரும், அண்ணல்வாழி என்போரும், அறவாழியான் வாழி என்போரும், ஆதி வாழி என்போரும், ஆதிநாதன் வாழி என்போருமாக ஆர்ப்பரித்து ஆனந்தகோஷஞ் செய்ய அருகக்கடவுள் அரண்மனை வீதி சேர்ந்தார்.

இத்தகைய கோஷங்களை உணர்ந்த இறைவன் மண்முகவாகென்னும் சுத்த இதயச் சக்கிரவர்த்தி இரதமூர்ந்து எதிற் சென்று தனதுமைந்தன் மஞ்சளாடை அணைந்து ஓடேந்தியும், அவரது முகதேஜசும், வடிவும் குன்றாதிருப்பதைக் கண்டு திகைத்து இரதத்தை விட்டிரங்காது மைந்தன் தானோ என்று திகைப்பான். அங்கபாக முப்பத்திரண்டு லட்சணங்களும் மென்மேலும் பிரகாசிப்பதைக் கண்டு மைந்தனென்றே உறுதி கொண்டு இரதத்தைவிட்டிரங்கி அருகில் சென்று மைந்தனை அணைத்து முத்தமிடலா மென்று எண்ணுவான். உலக ரட்சகனாயினனே என்று திகைப்பான். தனது மைந்தன் சித்தாத்தனென்றே மதிப்பான். மறுத்துந்தேறி ஜெகத்குரு வாயினனே என்று திகைப்பான்.

இத்தகைய திகைப்பகன்று பழைய சித்தாத்தி, பெயரகன்ற புத்தராமே என்று மகிழ்ந்து அவர் கரத்தைப்பற்றி மகனே என்னைவிட்டுச் சென்ற ஏழு வருடமும் என்னை மறந்துநின்ற காரணமென்னோ . நீவிர் செங்கோலேந்த வேண்டிய கரத்தில் ஓடேந்திய காரணமென்னோ என்று கலங்கினான்.

14.தந்தைக்கு மைந்தன் குருவாய காதை.

அவரது கலக்கத்தை உணர்ந்த அண்ணல் உலகத்தில் தோற்றும் உருக்களை மறப்பதுடன் உம்மெயும் மறந்திருக்கலாம். புத்தராகவேண்டிய வழிக்கு இப்பாத்திரம் ஏந்தியும் இருக்கலாம் என்றார். அவற்றை வினவிய மண்முகவாகு மைந்தனைநோக்கி குழந்தாய்! இப்பாத்திரமேந்தாது புத்தநிலை அடையலாகாதோ என்றார்.

செங்கோலேந்துஞ் செருக்கை இப்பாத்திரமே அறுக்குமென்று விடை பகர்ந்தார்.

உமது மூதாதைகள் மரபில் தோன்றிவரும் சக்கிரவர்த்திகள் செருக்கும் அறுமோ என்றார்.