பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306 / அயோத்திதாசர் சிந்தனைகள்

காசிக்கலம்பகம் - அசோதரை இந்திரர் அரணியாதல்

இல்லாளே முப்பத்திரண்டறமுஞ் செய்திருப்ப
செல்லார் பொழிற்காசிச் செல்வனார் - மெல்ல
பரக்கின்ற புன்கை பருவகல் கொண்டைய
மிரக்கின்றவா ரறிகிலேன்.

அம்மே! நீவிர் இதுவரையுஞ் செய்துவருந்தருமத்தை உமது மணாளன் அரண்மனை வந்து சேரவேண்டும், சுகத்துடன் வாழவேண்டுமென்று ஓர் பலனைக்கருதி செய்துவருகின்றாயா அன்றேல் ஓர் பிரிதி பலனையும் கருதாமல் செய்துவருகின்றாயா என்றார்.

அவ்வாக்கியத்தைக் கேட்ட அசோதரைத் திடுக்கிட்டு நமதுள்ளத்தில் கருதிசெய்யுஞ் செயலை யாவருக்கும் வெளியிட்டதில்லையே. அத்தகைய அந்தரங்க நோக்கத்தையும் உள்ள எண்ணத்தையும் அறிந்துகொண்ட நமதையன் சகலத்தையும் அறிந்தவர், சகலத்தையும் அறிபவர், சகலத்தையும் அறிவோர் என்று எண்ணி மீண்டும் ஐயன் பாதத்தைப்பற்றி எனதுள்ளத்தை உணர்ந்த மெய்யனே! உமது வரவைக்கோறும் ஓர் பலனைக் கருதியே என் தருமத்தைச் செய்துவந்தேனென்றாள்.

அம்மே! நீவிர் செய்துவந்த தருமம் ஓர் பலனைக்கருதி செய்தவை நிஷ்ப்பலனேயாகும். அதாவது, நீவிர் தருமபாதையில் நடக்கவேண்டின் நான்கு பாதத்தில் நடக்கல்வேண்டும். முதலாவது (சீலபாதம்.) இரண்டாவது (அருட்பாதம்.) மூன்றாவது (மங்கலபாதம்.) நான்காவது (சுபபாதமேயாம்)

இவற்றுள் முதலாவது பொய்சொல்லாமெய், களவு செய்யாமெய், கொலை செய்யாமெய், பரபுருஷனையேனும் பரஸ்திரீயை ஏனும் இச்சியாமெய், மயக்க வஸ்துக்களை அருந்தாமெய் ஆகிய சுத்ததேகியாக நின்றீயும் தருமமே(சீலபாத)மாகும்.

இரண்டாவது, தன் பிள்ளை தன்பந்துவின் மீது வைத்துள்ள அன்பு போல் மற்ற மக்கள் மீதும் சருவ சீவராசிகளின்மீதும் அன்பு பாராட்டி ஈயும் தருமமே (அருட்பாத)மாகும்.

மூன்றாவது உம்மிடத்தில் வந்து தருமம் பெறும் மக்கள் எக்காலும் ஒருவர் ஈகையை நாடாது ஆனந்தமாக வாழவேண்டும் என்று முகம் மலர்ந்து ஆசிகூறிச் செய்யுந் தருமமே (மங்கலபாத)மாகும்.

நான்காவது, தன் சுகம் கெடினும் அன்னியர் சுகம் கெடாத வழிகளைப் போதித்தும், அவர்களை ஆதரித்தும் ஈயுந்தருமமே (சுப்பாத) மாகும்.

இத்தகைய நான்கு பாதத்தில் நடத்தலே சத்திய தன்ம மார்க்கம் ஆகும் என்றார்.

அவற்றை வினவிய அசோதரை நமதையனை நோக்கி கபிலைப்பதியே, கமலாசனனே, கருணை வள்ளலே, கங்கையாதரனே! என்னை மீண்டும் கியானவடிமை ஆக்கிக்கொண்ட அருளிறையே! உமது அளவுபடா சத்திய தன்மபோதத்தை அடியாளுக்குத் தெளிவுற உணர்த்தல் வேண்டுமென்று வணங்கினாள்.

அம்மே! முற்கூறிய தன்மபாதத்தில் நடக்குங்கால் நூதன வஸ்துவைக் காணுமிடத்து ஆசைக்கொள்ளுதலும், கொறூர ஜெந்துக்களைக் காணுமிடத்து பயங்கொள்ளுதலும், தனக்கடங்கிய ஜெந்துக்களைக் காணுமிடத்து அகங்கரித்தலுமாகியச் செயல்களைத் தவிர்த்து மணாளன் மகவென்னும் பாசபந்தங்களை அகற்றி அன்பையோர் உருவாக்கி அறிவை ஆடையாக வனைதல் வேண்டும்.

சத்தியதன்மத்தில் நிலைப்பதற்கு ஒழுக்கமும் அறிவின் பெருக்கமுமே மூலமாகும்.

அம்மூலாதரவினால் உனக்குள் எழும் காம, வெகுளி, மயக்கமாம் விஷயங்களைச் சேரவிடாமலும், தங்கவிடாமலும் அகற்றி உனக்குள் எழும் சாந்தம், ஈகை, அன்பென்னும் அமுதத்தைப் பெருக்கிக்கொண்டே வருவாயாயின் இதயசுத்தமாம் மனக்களங்கமற்று அலையற்ற கடலாம் சுகவாரி நிலையினிற்பாய்.