பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 311

பெருக்கத்துள் உமக்குத் தோன்றியுள்ள வியாதியின் பெருக்கமானது வெகுளியின் அதிகரிப்பினாலும், வேணபுசிப்பின் தவறு தலினாலும் பித்த வனல் மீறி மார்பின் குழியினுள்ளும், இறைப்பையின் முகப்பிலும், திரண்ட கட்டிபோல் வளர்ந்து புசிப்பின் அன்னத்திற்கே தடை களை ஏற்று எட்டுவகை துன்பத்திற்கு ஆளாக்கி அஷ்டகுன்மக் கட்டிகளாக வளரும். அவ்வகை வளர்ந்து அன்னதுவேஷத்தால் ஒடுங்கியும், பித்தகோபமாம் வெகுளி ஒடுங்காது மேலும் மேலும் கோபத்தைப் பெருக்கிக்கொள்ளுவதால் குன்மமென்னுங் கட்டியும் வளர்ந்து துன்பமும் பெருகிக்கொண்டே வரும்.

வெகுளியாங் கோபத்தை அடக்கும் மூலிகை சத்துக்களையும், உபரச சத்துக்களையும், உப்பின், சத்துக்களையும் புசித்து கோப மெழாவண்ணம் நசித்து சாந்தத்தைப் பெருக்குவதால் குன்மங்கள் கரைந்து துன்பமகன்று அன்னமுறைந்து உதிரஞ் சிறந்தோடியுடல்குளிர்ந்து சுகத்தை அளிக்குமென்றார்.

பகவன் பரிகரிப்பாம் பரம வாக்கை உணர்ந்த பரத்துவாசர் அவர் அடிபணிந்து ஐயனே! திரிபீடமாம் மூவமுத வாக்களித்து மக்களை தேவர்களாக்கிய தேவாதிதேவா! இத்தேகவாயுளின் தீரத்தை தேறச்செய்யவும், வீரத்தை விலக்கிக் கலைக்கவுமாகுங் கற்பத்தை அருள்புரிய வேண்டுமென்று அடி பணிந்தான்.

பகவன் பரத்துவாசரை நோக்கி அன்பனே! மக்களுக்குள்ள கிரமச்செயல்களே சௌக்கியம் என்னப்படும். அக்கிரமச் செயல்களே வியாதி என்னப்படும்.

இத்தகைய வியாதிகளின் ஏதுக்குத் தக்க நிகழ்ச்சியாய்த் தோன்றும், அத்தோற்றங்களுக்கு பூதபௌதிகங்களும், அவரவர் குணாகுணங்களும் செயல்களுமே காரணமாகும்.

மண், நீர், தீ, காற்று இவற்றின் மாறுதலின் செயல்களே முதல் மூலமாகும். குணத்திரய அவாக்களே இரண்டா மூலமாகும். மனப்போக்கின் மீறியச் செயல்களே மூன்றா மூலமாகும்.

இம்மூவகை ஏதுவால் நிகழ்ச்சியாகும் சத்துவ விருத்தி, தமோ விருத்தி, இரஸோ விருத்தியாகும் வாத, பித்த, சிலேத்தும வியாதிகளாகி நெய்தநில மக்களுக்கு வாதமே பீடமாகக்கொண்டும், குறிஞ்சிநில மக்களுக்கு பித்தமே பீடமாகக்கொண்டும், முல்லைநில மாக்களுக்கு சிலேத்துமமே பீடமாகக்கொண்டும், மருதநில மக்களுக்கு வாதத்திற் பித்தமே மூலமாகக்கொண்டும், பாலைநில மக்களுக்கு பித்தத்திற் சிலேத்துமமே மூலமாகக்கொண்டும் பற்பல வியாதிகள் தோன்றி மும்மெய் வினையின் பயன்களையும், இம்மெய் வினையின் பயன்களையும் அனுபவிக்கச்செய்கின்றது.

மக்கள் ஒவ்வொருவருக்கும் வினையுள்ளளவும் தேகமும், தேகமுள்ளளவும் வியாதியும் ஆதியாய் நின்று அலக்கழித்துவரும்.

ஆதியாய வியாதிகளுக்கு அவுடதமூலம் அறிவின் பெருக்கமேயாகும்.

அறிவின் விருத்தியால் ஒவ்வொரு மக்களுக்குள்ள உதிர விருத்தியே அயசம்மந்தமாகவும், மூளையின் விருத்தியே பொன் சம்மந்தமாகவும், மாமிஷ விருத்தியே வங்க சம்மந்தமாகவும், அஸ்தியின் விருத்தியே வெள்ளி சம்மந்தமாகவும், நரம்பின் விருத்தியே தராவின் சம்மந்தமாகவும், தாம்பிரவிருத்தியே சரும சம்மந்தமாகவும் உணர்ந்து அந்தந்த யாக்கை உருப்பின் குறைவு நிறைவுகளை அந்தந்த லோகங்களால் நிவர்த்திக்க வேண்டியது.

மூலிகைவர்க்கங்களிலுள்ள அய சம்மந்த தாபரங்களும், பொன் சம்மந்த தாபரங்களும், தாம்பிரசம்மந்ததாபரங்களும் இன்னின்னவைகள் என்று கண்டறிந்து அவ்வவ் உருப்பின் குறைவு நிறைவுகளுக்கு அந்தந்த மூலிகைகளைக் கொடுத்து நிவர்த்திக்கவேண்டியது,

உப்பின் வர்க்கங்களிலுமுள்ள அயச்சம்பந்த உப்புகளும், பொன் சம்மந்த உப்புகளும், வங்கசம்மந்த உப்புகளும், தராசம்மந்த உப்புகளும் தாம்பிரசம்மந்த உப்புகளும் ஈதீதென்றறிந்து அந்தந்த உருப்பின் குறைவு நிறைவுகளுக்கு அந்தந்த உப்பினங்களை ஈய்ந்து நிவர்த்திக்கவேண்டியது.