பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316 / அயோத்திதாசர் சிந்தனைகள்

எது விஷயத்தில் பயமும், எது விஷயத்தில் துக்கமும் பெருகி உள்ளதென்று விசாரித்து பயத்திற்கான ஏதுவையும், துக்கத்திற்கான ஏதுவையும் உய்த்து நிதானிப்பீராயின் ஒருவர் உதவியுமின்றி தன்னிற்றானே தோன்றியுள்ள பயத்தையும், துக்கத்தையும் போக்கிக்கொள்ளுவீர்.

இவைகள் யாவற்றிற்கும் புத்தரின் அடைக்கலமே பெருநிதியாகும். அவரது தன்மமே அழியா பொக்கிஷமாகும். அவரது சங்கமே சதானந்தக் கூட்டமாகுமென்று உலகவாழ்க்கையையும், வீண்டம்பத்தையும் விளக்கி துக்கமுற்றோனுக்கு ஆறுதல் கூறிச் சங்கத்தில் ஒருவனாகச் சேர்த்துவிட்டார்.

மாதவமறையோன் மச்ச நாடடைந்து அவ்விடமுள்ள மக்களுக்கு அரிய தன்மத்தை உபதேசித்து வருங்கால் மச்சனென்னும் ஓர் விவேகியார் வேதமுதல்வனை அடுத்து உலகத்தில் மெஞ்ஞான சுடர்விளக்காக விளங்கும் உத்தமனே, அன்பே ஓருருவாக வந்த அருகனே, சகலருஞ் சாற்றிக் கொண்டாடுதற்குரிய சாத்தனே, சாந்தமே ஓருருவாகத் தோன்றிய சதுர்முகனே, ஈகையே ஓருருவென அமைந்த ஈசனே! தன்னுயிர்க்கிரங்காது பிறவுயிர்க்கிரங்கும் பிரமமே இவ்வடியேனையுந் தங்கள் சங்கத்தில் ஒருவனாகச் சேர்த்து ஈடேற்றவேண்டும் என்றடிபணிந்தான்.

அக்கால் அருகன் மச்சனைநோக்கி அப்பா மச்சனே! நீவிர் இல்லறத்தை விட்டு முனிந்து துறவறமாம் சத்திய சங்கத்தைச் சாரவேண்டுமென்னுங் கோறிக்கை கொண்டபடியால் உமக்குள்ள அசத்தியங்களாகும் அநித்திய தோற்றங்கள் யாவையும் மறந்து சத்தியமாகும் நித்தியமெஃதென்று தெளிந்து நீடிய ஜாக்கிரதையில் இருத்தல் வேண்டும்.

அங்ஙனமின்றி இல்லற இன்பமும் வேண்டும், துறவற டம்பமும் வேண்டுமென்று முநிவீராயின் உன்மத்தர்போலும், பாலர்போலுந் திகைத்து உப்பு சாரமற்றுவிட்டதுபோல் உலகத்தோருக்கு ஓர் பிரயோசனமுமற்ற வராய்விடுவீர்.

நீவிர் எடுக்கும் முயற்சியும், உமது அதி தீவரபக்குவமும், சதா ஜாக்கிரதையிலும், சதாவிழிப்பிலும் இருந்து இரவு பகலற்ற இடத்தில் நிலைப்பீராயின் உலகில் தோன்றியுள்ள சருவ சீவர்களுக்கும் உதவியோரா யிருந்து உள்ள சீவர்களையும் உத்தமர்களாக்கி வைப்பீர்.

அவர்களடைந்த உத்தம நிலையால் மற்றுமுள்ள மத்திம ரதமர்களையுஞ் சீர்திருத்தி செவ்வனே விளங்க வைப்பார்களென்றார்.

மச்சனார் மாதவனை வணங்கி ஐயனே! சருவசீவர்களும் இரவு பகலற்ற நிலைக்குவரக்கூடுமோ என்றார்.

மச்சனே! நீவிரிது மட்டிலும் இல்லற இன்பத்தையே பேரின்பமாகக் கருதி மச்சனென்னுந் தனிப்பெயரினின்றீர். தற்காலமோ இல்லற இன்பத்தை மறந்து துறவற இன்பத்தில் முனிந்தீர். அத்தகைய முனிவைக்கொண்டு அதன் தீவரகாரியத்தால் மச்சனென்னும் பெயருடன் மச்சமுனி என்னுங் காரணப்பெயர் தோன்றும்.

அதுபோல் எக்காலுமுள்ள பூமியினின்று ஏதுக்குத்தக்க நிகழ்ச்சியால் முதற்றோற்றமாம் புற்பூண்டுகள் தோன்றி, புற்பூண்டுகளினின்று இரண்டாந் தோற்றமாம் புழுக்கீடாதிகள் தோன்றி, புழுக்கீடாதிகளினின்று மூன்றாந் தோற்றமாம் மட்சம் பட்சிகள் தோன்றி, மட்சம் பட்சிகளினின்று நான்காவது தோற்றமாம் ஊர்வனங்கள் தோன்றி, ஊர்வனங்களினின்று ஐந்தாவது தோற்றமாம் விலங்குகள் தோன்றி, விலங்குகளாம் வானரரினின்று ஆறாவது தோற்றமாம் வாலற்ற நரர்களென்னும் மக்கள் தோன்றி, மக்களினின்று மானிகளாய் ஏழாவது தோற்றமாம் இரவு பகலற்ற இடத்தினின்று தேவர்களாகத் தோன்றி சருவசீவர்களுக்கும் உபகாரிகளாக விளங்குவார்களென்று கூறினார்.

அவற்றை வினவிய மச்சன் சீவராசிகளே அதனதன் நற்கருமத்தால் உயர்ந்து மனுக்களாகத் தோன்றி, மனுக்களின் நற்கரும விவேகவிருத்தியால் இரவு பகலற்றவிடஞ் சென்று தேவர்களென்னும் பெயர்ப்பெறுவதாக உணர்ந்து உள்ளமுடையானை வணங்கி ஒப்பிலா எமதப்பனே தாம் கூறியுள்ள இரவு