பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சங்கறநிறையோனாகும் அவலோகிதர் மச்சவியாரத்தினின்று குணபாடம், இரணபாடங்களாம் சூசரகங்களை விளக்கி தேகவியாதியின் உபத்திரவங்களை நீக்கும் உபாயங்களை அருளியதினால் அவரை உலகவைதியோவென்றும், வைதியநாதனென்றுங் கொண்டாடி வந்தார்கள்.

அருங்கலைச்செப்பு - மச்சப்பத்து

மச்சநாடன்றன் மனவிருளகற்றி இச்சையீதென்றானிறை
இச்சையாலுண்டாமிடுக்கங்கள் யாவும், மூச்செய் வினையென்றறி
வினையின் செயலே வெளிவுறுதோன்றி, முநியும் மூர்க்கனென்று உணர்
சினமும் அமைதியும் செய்தொழில் யாவும், உனதுணரெண்ண மதாம்.
சுகமதை நாடி சுகிக்க விருத்தல், இகநிலை துக்கத்தொடர்.

13.விசாகா காதை

அக்கால் கோசலமென்னும் அயோத்தியாபுரியின் உள் நாடாகும் ஷ்ராவஸ்தியில் மிகாரா என்னும் ஓர் தனவந்தனிருந்தான்.

அவனுக்குப் புண்ணியவர்த்தனனென்னும் ஓர் புத்திரனுண்டு. அவன் பாலதானமாம் பதினாறு வயது கடந்து குமரதானம் உண்டாயதால் வதுவைக்கு ஏதுசெய்து தாயுந் தந்தையருங் கூடி மைந்தனை அழைத்து மகனே உனது கண்ணுக்கு ரம்மியமான பெண்ணை நியமித்துக்கொள்ளலாமென்றார்கள்.

அவற்றை வினவிய புண்ணியவர்த்தனன் தாய் தந்தையரை விளித்து அவ்வகை எண்ணத்தை யான் கொள்ளவில்லையே என்றான்.

தாய் தந்தையர் மைந்தனை விளித்து அப்பா காலங்கடக்குமாயின் சந்ததி அற்றுப்போம்; உன் வதுவைக்கு இதுவே காலமென்றார்கள்.

அவர்கள் வார்த்தையை வினவிய மைந்தன் வேண்டாமென்று மாறுத்திரங்கூறாது உங்கள் மனோபீஷ்டப்படி யாகட்டும். அப்பெண் பஞ்ச லட்சணம் அமைந்திருப்பாளாயின் அவளை மணஞ்செய்வதே மங்கல மென்றான்.

தந்தை தாயர் மைந்தனைநோக்கி மகனே! பஞ்சலட்சணமென்பதெவை என்றார்கள். மங்கை பருவ மான் துளிர் மேனியழகு, ஒடுங்கிய உடலழகு, மயிரழகு, பல்லழகு, சந்திரவதன ஒளியழகுமே என்றான்.

அவற்றை உணர்ந்த தாய் தந்தையர் நிமித்தகர்களை வரவழைத்து பஞ்சலட்சணம் அமைந்த பெண்கள் உலகத்திலுண்டோ என்றார்கள். பஞ்சலட்சணம் அமைந்த பெண்களுண்டு ஆனால் தேடிகண்டுபிடிக்க வேண்டுமென்றார்கள்.

தனபதி தக்கமதியூகிகளாகும் நிமித்தகர்களை வரவழைத்து வேண பரிசளித்து சிறந்த மோகனமாலை ஒன்றை அவர்களிடங்கொடுத்து பஞ்சலட்சணம் அமைந்த மங்கை தோற்றுவாளாயின் அவள் கழுத்தில் இம் மாலையை அணிந்துவாருங்கோள் என்று அனுப்பினான்.

நிமித்தகர்கள் தனபதியின் உத்திரவைப் பெற்று பலதேசங்களுக்குச் சென்றும் பஞ்சலட்சணப் பெண் தோற்றாமல் மிக்க துன்புற்று மெலிந்து வரும் வழியில் சகிதா என்னும் நகரத்தை அடைந்தார்கள்.

அந்நாள் அந்நகரவாசிகளுக்கு சகிதா என்னும் முல்லைபுட்பவிழா கொண்டாடும் மங்கையர் நாளாயிருந்தது.

அதனைக் கொண்டாடுமாறு மங்கைபருவப் பெண்கள் யாவரும் முல்லை புட்பங்களை தட்டுகளில் நிறப்பிவந்து முல்லை செண்டுகள் செய்தாடுவதும், முல்லைபாடல் பாடுவதுமாக ஆற்றங்கரையை அணுகி ஆனந்த நீராடி ஒருவர்மேல் ஒருவர் புட்பமிரைத்துக் கொண்டிருந்தார்கள்.

முல்லை கொண்டாட்டத்தைக் கண்ட நிமித்தர்கள் யாவரும் அங்குள்ள ஓர் சத்திரத்தில் உட்கார்ந்து முல்லைவிழாப் பெண்களுள் பஞ்ச லட்சணமமைந்தப் பெண் ஏதேனும் உண்டோ என்று கண்ணோக்க முற்றிருந்தார்கள்.

அக்கால் மழைப்பெய்ய ஆரம்பித்தது. பெண்கள் யாவரும் ஓடி வந்து சத்திரத்தில் சேர்ந்துவிட்டார்கள். விசாகா என்னும் மங்கை மட்டிலும் மெதுவில் நடந்து சத்திரம் வந்து சேர்ந்தாள்.