பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324 / அயோத்திதாசர் சிந்தனைகள்

என்று சகல சீவர்கள் கண்ணுக்குங் காட்சியாய் நின்று சத்தியதன்மத்தை விளக்கினார்.

தனபதியாகும் அன்பரே! நீர் திறைமறைவிலிருந்தும் உம்மெய் தெரிந்துகொண்டேன் நீரும் எம்மெய் எதிரில் பார்க்கின்றீர்.

நீரானது நுழையா விடமுண்டோ ? காற்றானது கலவாவிடமுண்டோ ? தீயானது தீண்டாவிடமுண்டோ ? அதுபோல் மனமானது மலைவாவிட முண்டோ இல்லை .

மனமானது விரிந்தவிடத்து சகல வரும்பொருளும் மறையும், மனமடங்கியவிடத்து சகல திறைகளும் நீங்கி மூவுலகமுந் தோன்றும்.

அவ்வகைத் தோற்றத்தை அறிந்துக்கொள்ளும்படி செல்லவேண்டிய மார்க்கமே புத்ததன்மமென்னப்படும். புத்ததன்மமாம் மெய்யறத்தில் நடப்பவர் களே உண்மெய் கண்டடைவார்கள். அவ்வுண்மெய்யைக் கண்டவர்களோ புறம்பாய்க் காணும் பொருட்கள் யாவும் பொய்யென்று அறிந்து அவைகள் யாவுங் கடிகைக்குக் கடிகைக் கெட்டுக்கொண்டே வருங் காட்சிகளை விளக்கி உண்மெய்க்கு மேலாம் பொருள் உலகத்தில் ஒன்றுமில்லை என்று துலக்கி சதாதுக்கத்தை விலக்கி சருவசாட்சியாய் சதானந்தத்தில் நிலைப்பார்கள்.

அவர்களுக்கு அருமறைவுமில்லை, உருமறைவுமில்லை, உரைமறைவு மில்லை, திறைமறைவுமில்லை, அணைமறைவுமில்லை, குணமறைவுமில்லை சருவமும் அவர்களுள் தோன்றும் சன்னிதானமாகும் சருவதானங்களும் உதிர்ந்து மகா நிதானமாம் சன்னிதானத்தில் நிலைத்தவன் தனக்கோர் பற்றின்றி சருவ சீவர்களுக்கும் உபகாரிகளாக விளங்குவான்.

பகிர்முகத் தோற்றத்தில் கடிகைக்குக் கடிகை அதாவது க்ஷணத்திற்கு க்ஷணங் கெட்டுக்கொண்டேவருந் தோற்றப்பொருட்கள் யாவையுந் தாவிதாவி பிடித்து சேர்க்குமளவும் பிறவி சமுத்திரமாம் துக்கக்கடலில் ஆழ்ந்து பாசக்கயிற்றில் கட்டுண்டு துன்ப வலைகளென்னுங் கசைகளால் அடியுண்டு இறப்பும் பிறப்புமாகிய துக்க சக்கர பற்களில் சிக்குண்டு சுழல்வான்.

தேவர், மக்கள், விலங்கு, பட்சி, தாபரம், ஊர்வனம், நீர்வாழ் வனங்களென்னும் எழுவகைத் தோற்றங்களும் அள்ளல், இரவுரவம், கும்பிபாகம், கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதியாம் எழுநாகமென்னுங் துக்கத்தில் ஆழ்ந்து மாறா பிறவியில் சுழலவைக்கும்.

ஆதலின் ஒவ்வொரு மக்களும் எழுபிறவியில் தோற்றும் எழுநரகவாதனைகளை அநுபவியாது க்ஷணத்திற்கு க்ஷணந் தோற்றிக் கெடுக்கும் அவாக்களை அறுத்து முன் பற்றுக்களை விடுத்து அன்பின் விருத்தியாலும் நீதியின் பற்றிலும் நிலைத்து இறப்பையும் பிறப்பையும் போக்கிக்கொள்ளுங்கோ ளென்று தனது சத்தியதன்மத்தைப் பதியச்செய்தார்.

மிகாரா தனபதிக்கும் உலோபதோஷம் விளங்கி கணநாதனை வணங்கி இந்த லோபியையுந் தங்கள் சங்கத்தில் ஒருவனாக சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று இரைஞ்சினான்.

இன்னும் சிலநாள் நீரில்லற தன்மத்தில் நிலைத்து சீலம் பதிந்து சித்த சுத்தமுண்டாகுங்கால் சங்கத்திற் சேர்ந்துக்கொள்ளலாமென்று சொல்லிப் போய்விட்டார்.

அன்று முதல் விசாகா தனது மாமன் கணவன் முதலியவர்களுக்கு மிக்க அன்புடையவளாய் நடந்துவருவதுடன் பகவனும் தென்புலத்தோராம் சமணமுநிவர்களும் வந்து தங்கியிருப்பதற்கு வியாரம் கட்டிவைத்ததுமன்றி. மற்றுமுள்ளவியாரங்களில் தங்கியுள்ள சமணமுநிவர்களுக்கு அன்னக்காவடி அனுப்புவதும், சீவரவுடை ஈவதும், பிட்சாபாத்திரம் அளிப்பதும், ஏழைகளை ஆதரிப்பதும் சங்கத்திற்சேர்ந்து சமணநிலைபெற்று தன்னைப்பார்க்கும் பார்ப்பார்களுக்கும் தன்னைப்பார்க்கும் பார்ப்பிணிகளுக்கும் வேண்டிய தானங்களைச் செய்துக்கொண்டே புத்திர பௌத்திரர்களுடன் ஆனந்த சுகவாழ்க்கையிலிருந்து 120-வது வயதில் மரணமடைந்தாள். அவளது நீதிமார்க்க நடையும் சத்திய தன்மச் செயலும் ஈகையின் பெருக்கமுமே அவளை நோயற்ற