பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கண்டு தெளியாமல், சத்துருக்களால் ஏற்படுத்தியிருக்கும் மதங்களைத் தழுவி கோவிலில்லாமலும் குருக்களில்லாமலும் திகைத்து நிற்கின்றார்கள்.

அன்னிய மதத்தார் ஏற்படுத்தியிருக்கும் விஷ்ணு கோவில் சிவன் கோவில் என்று சொல்லும்படியான இடங்களுக்கு பட்டை பட்டையாக நாமங்களை சாத்திக்கொண்டும் வட்டை வட்டையாக விபூதியை இழுத்துக் கொண்டு போனபோதிலும் பறையன் வந்தான் பறைச்சி வந்தாளென்று அடித்து துரத்துகிறதும் சிலர் போலிஸ் அதிகாரிகளுக்குச் சொல்லிமிரட்டுகிறதும் சிலர் இவர்களை கோவிலுக்கு அருகாமை வரவிடாமல் இவர் கொண்டுவந்த பொற்பூஷணம் வெள்ளி பூஷணம் பணமுதலியவைகளைப் பெற்றுக் கொண்டு மற்றமுள்ள தேங்காய் பழ முதலியவைகளை தங்கட் கைகளிற் தொடாமலும் உள்ளுக்குக் கொண்டுபோய் தீப அருச்சனை செய்யாமலும் கற்பூரத்தைக் கொளுத்தி தூரநின்று தட்டில் போட்டுவிடுகிறார்கள்.

அன்னியனுடைய தந்தையை தன்னுடைய தந்தையென்றும் அன்னியனுடைய தாயை தன்னுடையத் தாயென்றும் தாவிப்பிடிப்பது போல அன்னியமதத்தை தழுவுகின்றபடியால் அன்பும் ஆறுதலுமில்லாமல் அவமானத்திற்கு ஆளாக்கி விடுகின்றது.

இரவும் பகலும் உழைத்து கஷ்டத்துடன் சம்பாதிக்கும் பொருட்களை நமக்கு விரோதிகளாய் சகல விஷயங்களிலுந் தலையெடுக்க விடாமல் நசித்துக் கொண்டு வரும் சத்துருக்களிடத்தில் கொடுத்துவிட்டு அவமதிப்படைந்து வருவது என்ன பரிதாபம்.

அந்தோ, அன்னிய சாதியார் நமது குலத்தோர் மீதுள்ள பூர்வ விரோதத்தை வைத்துக் கொண்டு பலவகையாலும் இழிவு கூறி தாழ்த்தி வருவதை நாம் உணராமல் அவர்களுடைய பொறாமைச் செய்கைகளுக்குத் தாழ்ந்து கொண்டே போவதினால் நாளுக்கு நாள் சீர் குலைந்து மதசம்மத ஒற்றுமையில்லாமல் மகமதியருடன் சேர்ந்து அவர்கள் சுவாமிக்கு (பாத்தியா) செய்து வருவதும் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து அவர்கள் சுவாமிக்கு மெழுகுவர்த்தி மிளகு முதலியவைகள் இறைப்பதும் ஆகிய நிலையற்ற கருமங்களைச் செய்துக் கொண்டு நிர்ப்பாக்கியராகின்றோம்.

இனியேனும் நிலையற்ற செய்கைகளால் அன்னிய மதங்களைத் தாவி பிடித்து சத்துருக்களால் நசுங்குண்டு போகாமல் பூர்வ சுதந்திரங்களை அறிந்து நம்முடைய ஒற்றுமையினாலும் விடாமுயற்சியினாலும் புத்தமத அரசர்களுடைய உதவியைப் பெற்று நம்முடைய சுயமதத்தை நிலை நிறுத்தி மடாலயங்களைக் கட்டுவித்து குலகுருவாகிய சாக்கைய முநிவரை வணங்கி ஞான வழியின் நிலைகளை உணர்ந்து பஞ்ச சீலங்களிற் பழகி நிருவாண திசையை அடையும்படியானக் கிருத்தியங்களை நடத்துவதற்கு பகவனுடைய சம்பூரணக்கிருபை நங்குலத்தார்மீது உண்டாகும்படி பிராத்திக்கின்றோம்.

நமோதஸ்ஸ பகவதோ அர அதோ சம்போசம் புத்தஸ்ஸ

சாக்கையகுல நாயனார் குறள்

அறவாழி யந்தணன்றாள் சேர்ந்தார்க் கல்லாற்

பிறவாழி நீத்தலறிது.

சாக்கையகுல அவ்வையார் நீதிநூல்

அறஞ்செயல் விரும்பு

சித்தாந்தக் கொத்து

அருணெரியாற் பாரமிதை யாறைந்து முடன டக்கி
பொருண் முழுவதும் போதிநிழனன் குணர்ந்த முநிவரன்ற
னருண் மொழியா நல்வாய்மை யறிந்தவரே பிறப்பறுப்பார்

மருணெறியாற் பிறநூலு மயக்கறுக்கு மாறுளதோ.

வீரசோழியம்

தோடாரிலங்கு மலர் கோதிவண்டு வரிபாடு நீடு துணர்கேர்
வாடாதபோதி நெறி நீழன்மேய வரதன் பயந்த வறநூல்
கோடாத சீல விதமேவி வாய்மை குணனாக நாளுமுயல்வார்

வீடாதலின்ப நெறிசேர்வர் துன்பவினை சோக நாளுமிலரே