பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330 / அயோத்திதாசர் சிந்தனைகள்


சித்த சமாதி

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் சித்த விஷயத்தில் எவ்விதமாக ஜாக்கிரதையுடையவனாக இருப்பான்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரனுக்கு வெடுவெடுப்பான சித்தம் உதிக்குங்கால் இது வெடுவெடுப்பான சித்தமெனவும், வெடுவெடுப்பற்ற சித்தமெனவும், விரோதமான சித்தம் உதிக்குங்கால் இது விரோதமான சித்தமெனவும், விரோதமற்ற சித்தமெனவும், மெய் மறக்குஞ் சித்தம் உதிக்குங்கால் இது மெய்மறக்கச்செய்யும் சித்தமெனவும், இது மெய்மறதியற்ற சித்தமெனவும், உத்தேசிக்கும் (அதாவது நிதானம்) சித்தம் உதிக்குங்கால் இது உத்தேசிக்கும் சித்தமெனவும் அலைகிற சித்தம் உதிக்குங்கால் இது அலைகிற சித்தமெனவும், புகழும் சித்தம் உதிக்குங்கால் இது புகழும் சித்தமெனவும், இது புகழத்தகாத சித்தமெனவும் ஏகசிந்தனை சித்தம் உதிக்குங்கால் இது ஏகசிந்தனை சித்தமெனவும், ஏகசிந்தனையற்ற சித்தமெனவும், விமோசனசித்தம் உதிக்குங்கால் இதுவிமோசனமுற்ற சித்தமெனவும், விமோசனமற்ற சித்தமெனவும் தெளிந்து ஜாக்கிரதையுடனிருப்பான்.

ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக தன் சித்தவிஷயத்தில் ஜாக்கிரதை யுடையவனாய் இருப்பதோடு ஏனையோருடைய சித்தவிஷயத்திலும் ஜாக்கிரதையுடனிருப்பான். தன் சித்தம் போல் ஏனையோர் சித்தமும் தோன்றி கலைந்து மறையுமெனவும், சித்தம் தோன்றும்போது ஜாக்கிரதையுடனும், சித்தம் மறையும்போது ஜாக்கிரதையுடனும், சித்தம் தோன்றி மறையும்போது ஜாக்கிரதையுடனிருந்தும் இவ்விதமாக ஜாக்கிரதையான தியானத்தால் சித்தத்தைப் பரிசோதிப்பதுடன் தியானசக்தி உறுதிப்பெற உலகத்திலிருந்தும் உலக பற்றற்றவனாயிருப்பான்.

தம்ம சமாதி

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் தேகவிஷயத்திலும், உணர்ச்சி விஷயத்திலும் சித்த விஷயத்திலும் ஜாக்கிரதையாயிருந்தபின் நான்கு சத்தியத்தில் ஜாக்கிரதையுடையவனாய் இருப்பான். ஒரு சகோதிரனுக்கு துக்கம் ஈதெனவும், துக்கோற்பத்தி ஈதெனவும், துக்க நிவாரணம் ஈதெனவும், துக்க நிவாரணமார்க்கம் ஈதெனவும் தெளிந்துக்கொள்ளுவான்.

ஓ! சகோதிரர்களே! துக்க சத்தியமென்றால் யாது. பிறப்பு, துக்கம், மூப்பு துக்கம், பிணி துக்கம், இறப்பு துக்கம், கவலைப்படுதல், புலம்பல், துற்சம்பவம், சங்கடத்திற்குள்ளாதல், நிராசையாய்த் துயரப்படல் ஆகிய இவைகள் துக்கம், வேண்டிய பொருள் கிட்டாமெய் துக்கம், சுருக்கமாகச் சொல்லின் ஐம்புலப் பற்றுக்களே துக்கமென்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! பிறப்பென்பது யாது? உற்பேதம் பிறப்பு கற்போற்பத்தி பிறப்பு, பஞ்சஸ்கந்த உருவமாதல் பிறப்பு, சுருக்கத்தில் ஐந்து புலன்கள் சேர்ந்து உருவமைந்து தோற்றலே பிறப்பு.

ஓ! சகோதிரர்களே! மூப்பென்பது யாது? முதிர்ந்த வயதுற்ற தள்ளாடல், தந்தமற்றிருத்தல், ரோமம், நரைத்துவிடல், தேகம் சுருங்கி விடல், பலம் குறைந்து விடல், சித்தஸத்தி மடிதல் மூப்பு.

ஓ! சகோதிரர்களே! இறப்பென்பது யாது? பிறிவு இறப்பு, தேகம் நீற்று நீராதல் இறப்பு, இருளால் இறப்பு, பஞ்சஸ்கந்தங்களின் பிரிவே இறப்பாம்.

ஓ! சகோதிரர்களே! கவலைப்படுதல் யாது? பெருத்த நஷ்டம் நேரிட்டாலும், கைவிட்டு விலகியதானும், கவலையும், கவலைப்படுதலும் கவலையுள்ளவனாயிருத்தல் இருதயக்கவலை, இருதயத்தில் கவலையுள்ளவனா யிருத்தலே கவலைப்படுதலாம்.

ஓ! சகோதிரர்களே! புலம்பலென்பது யாது? பெருத்த விரையம் நேர்ந்து பிரிந்தபோது புலம்பல், ஓலமிட்டழல், சத்தமிட்டழல், சத்தமின்றி குமுங்கல் புலம்பலாம்.

ஓ! சகோதிரர்களே! துன்பமென்பது யாது? தேகத்தை ஒத்த துன்பம், தேக அசௌக்கியம், தேகம் உணர்வால் வருந்தி அதற்கீடுபடுவதால் நேரும் துன்பம் தேகம் அனுபவிக்கும் பீடை யாதும் துன்பமே.