பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அதாவது - நற்காட்சி, நற்சிந்தை நல்வசனம், நற்செய்கை, நல்வாழ்க்கை, நல் ஊக்கம், நற்கடைபிடி, நல் அமைதி என்னும் இவ்வெட்டுமாம்.

ஓ! சகோதிரர்களே! நற்காட்சி என்றால் யாது?

ஓ! சகோதிரர்களே! துக்கம் இதென்றும், துக்கோற்பத்தி இதென்றும், துக்கநிவாரணம் இதென்றும், துக்க நிவாரணமார்க்கம் இதென்றும் தெளிவற அறிவதே நற்காட்சி அல்லது நற்பார்வை என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! நற்சிந்தையெனில் யாது?

ஓ! சகோதிரர்களே! காம இச்சை அற்றும், கோபம் போறாமெய் அற்றும், ஜீவர்களை ஹிம்சிக்காதும் இருப்பதே நற்சிந்தனை என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! நல்வசனம் எனில் யாது? ஓ! சகோதிரர்களே! பொய்பேசாமெய், புறங்கூறாமெய், கொடுஞ்சொற் கூறாமெய், வீண்வார்த்தை யாடாமெய் ஆகிய இவைகளே நல்வசனம் என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! நற்செய்கை எனில் யாது?

ஓ! சகோதிரர்களே! கொலை, களவு, காமம் இவைகள் அற்றிருப்பதே நற்செய்கை என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! நல்வாழ்க்கை என்பது யாது?

ஓ! சகோதிரர்களே! ஒருவன் மதியை மயக்கி கெடுக்கத்தக்க வஸ்துக்களையும், பல உயிர்களைக் கொன்று விற்கத்தக்க மாமிஷங்களும், விஷங்களை ஏற்றிவிற்கத்தக்க ஆயுதங்களும், மனிதர்களை அடிமைபிடித்து விற்குந் தொழில்களும், சூது விளையாடுவோருக்கும், கள்ளர்களுக்கும் இடங்கொடுத்து அதினால் ஜீவிக்கும் தொழில்களும் இவ்வகை பழிபாவத்துக்குரிய தொழில்கள் யாவுமகற்றி வாழ்வதே நல்வாழ்க்கை என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! நல் ஊக்கம் எனில் யாது?

ஓ! சகோதிரர்களே! அபுண்ய குணங்களுண்டாகாமல் அவற்றைத் தடுக்க முயர்ச்சித்தல் உண்டாயிருக்கும் அபுண்ய குணங்களை விலக்குவதற்கு முயற்சித்தல், முன்னில்லாத புண்ய குணங்களை உண்டாக்க முயற்சித்தல், உண்டாயிருக்கும் புண்யகுணங்களை அதிகப்படுத்த முயற்சித்தல் ஆகிய இவைகளே நல்ஊக்கம் அல்லது நல்முயற்சி என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! நற்கடைபிடி எனில் யாது?

ஓ! சகோதிரர்களே! சகோதிரன் ஒருவன் தேகவிஷயத்தில் ஜாக்கிரதையும், ஊக்கமும், அறிவும், ஆராய்ச்சி உடையவனாகவும், காமமும், துயரமும் அற்றவனாயும்; பூதவிஷயங்களில் ஜாக்கிரதையும், ஊக்கமும், அறிவும், ஆராய்ச்சி உடையவனாகியும், காமமும், துயரமும் அற்றவனாகவும் இருந்து சிந்திப்பதே நற்கடைபிடி அல்லது நல் தியானம் என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! நல் அமைதி யெனில் யாது?

ஓ! சகோதிரர்களே! சகோதிரன் ஒருவன் காம இன்பத்தினின்று விலகியும், உசிதமற்ற நடைகளினின்று விலகியும், விசாரணையாலும், யூகையாலும், தியானிப்பனேல் அவ்விடத்தில் அவனுக்கு சந்தேகமும், ஆனந்தமுந் தோன்றும்.

விசாரிணையும் யூகையும் அற்று சந்தோஷமும் ஆனந்தத்துடனும் தியான சக்தியால் நல் அமைதியும் ஏகாக்கிர சித்தமுள்ள எண்ணத்துடனிருப்பான்.

அவ்வகை மௌனபாக்கியம் திரண்டவுடன் முன்பு அநித்தியத்தி னின்றவன் நித்யனாகின்றான். ஆத்மாவினின்றவன் அனாத்மனாகின்றான். ஜநநங்கடோரும் பொய்யனாக நின்றவன் உண்மெய்யனாகின்றான். அப்பொய் யற்ற மெய்யே நிருவாணமென்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! இதுதான் துக்கநிவாரண மார்க்கமென்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக நான்குவித சமாதிகளைப்பற்றி தெரிந்தோம்.

நிருவாண பதவிக்கு ஆளாக்குவது இந்நான்குவித சமாதிகளேயாம் என முடித்தவுடன் பிக்ஷகுழாங்கள் கைகுவித்துவணங்கி ஆனந்தமடைந்தார்கள். பகவன் பின்னர் சாவித்தி நகரத்திலுள்ள விஹாரத்திற்குச்சென்று அங்குள்ள