பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஓ! சகோதிரர்களே! துற்பார்வை ஒழித்து நற்பார்வையை உதிக்கச்செய்வதற்கு சம்யக்வீரியா அதாவது நல்முயற்சியைக் கடைபிடிக்கவேண்டும். நற்பார்வையுடனும் உறுதிமனத்துடனும் இருந்து துற்பார்வையை ஒழிக்க சம்யக் ஸ்மிருதி அதாவது நற்கடைபிடித்தல் வேண்டும். ஆக நற்பார்வையும், நன்முயற்சியும், நற்கடைப்பிடியும் தொடர்ந்து வருகின்றது.

ஓ! சகோதிரர்களே! சம்யக் திருஷ்டி அதாவது நற்காட்சி அல்லது நற்பார்வை முதலாக வருகின்றது. எவ்விதத்தில் இது ஆரம்பமாக வருகிறது? துற்சித்தம் துற்சித்தமென்றும், நற்சித்தம் நற்சித்தமென்றும் ஒருவனுக்குத் தோன்றுமாயின் அஃதே நற்பார்வை என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! துற்சித்தமென்றால் என்ன?

காம எண்ணங்கள், துயர் வருவிக்கத்தக்க எண்ணங்கள், கொடூரமான எண்ணங்கள் இவைகளே துற்சித்தமென்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! நற்சித்தமென்றால் என்ன?

நற்சித்தம் இருவகைப்படும்.

முதலாவது இல்லறத்திலேயே நற்சுகத்தையும், நற்பலனையும் கொடுக்கக் கூடிய நற்சித்தமாம்.

ஓ! சகோதிரர்களே! இல்லறத்திலேயே நற்சுகத்தையும், நற்பலனையும் கொடுக்கக்கூடிய நற்சித்தமெனில் யாது?

உலகத்தைத் துறக்கவேணுமென்கின்ற எண்ணம், குற்றம்பாராட்டாதிருக்கவேணுமென்கின்ற எண்ணம், கொடூரச்செய்கைகளைச் செய்யாதிருக்க வேணுமென்கின்ற எண்ணம் இஃதே இல்லறத்திலேயே நற்சுகத்தையும் நற்பலனையும் கொடுக்கக்கூடிய நற்சித்தமாம்.

ஓ! சகோதிரர்களே! இல்லறத்தினின்று துறந்து சத்தியமார்க்கத்தில் பழகுவதினால் உண்டாகும் நற்சித்தமெனில் யாது?

யோசிக்கும்போதும், அவதானிக்கும்போதும், முயற்சிக்கும்போதும் சித்தமானது பரிசுத்தத்துடனும் உலகப்பற்றைவிட்டு சத்தியமார்க்கத்தில் நாடி சத்தியமார்க்கப்பிரகாரம் ஒழுகிவரும்படியான இச்சித்தத்தின் செயலே இல்லறத்தினின்று துறந்து சத்தியமார்க்கத்தில் பழகுவதினாலுண்டாகும் பரிசுத்த நற்சித்தம் என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! துற்சித்தத்தை யொழித்து நற் சித்தத்தை உதிக்கச் செய்வதற்கு சம்யக் வீரியா அதாவது நன்முயற்சியைக் கடைபிடிக்கவேண்டும். நற்சித்தத்துடனும், சித்த ஜாக்ரதையுடனும் துற்சித்தத்தை ஒழிக்க சம்யக் ஸ்மிருதி அதாவது நற்கடைபிடித்தல் வேண்டும். ஆக நற்சித்தத்தை நற்பார்வையும், நன்முயற்சியும், நற்கடைபிடியும் தொடர்ந்து வருகின்றது.

ஓ! சகோதிரர்களே! சம்யக் திருஷ்டி நற்பார்வை ஆரம்பமாக விருக்கின்றது. ஆனால் சகோதிரர்களே! நற்பார்வை எவ்விதத்தில் ஆரம்பமாக வருகிறது. ஒருவனுக்கு மிச்சா வாஸா துன்வசனம் துன்வசனமென்றும் சம்யக்வசனா நல்வசனம் நல்வசனமென்றும் பகுத்தறிந்துக் கொள்வானாகில் அவன் நற்பார்வையில் இருக்கின்றான்.

ஓ! சகோதிரர்களே! மிச்சா வஸனா துன்வசனமெனில் யாது?

பொய் சொல்லல், புறங்கூறல், கடுஞ்சொல் கூறல், பயனற்ற சம்பாஷனை இவைகளே துன்வசனம் என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! நல்வசனமெனில் யாது?

ஓ! சகோதிரர்களே! நல்வசனம் இருவகைப்படும்.

முதலாவது இல்லறத்திலேயே நற் சுகத்தையும், நற்பலனையும் கொடுக்கக்கூடிய நல்வசனமாம்.

இரண்டாவது இல்லறத்தினின்று துறந்து சத்தியமார்க்கத்தில் பழகுவதினால் உண்டாகும் பரிசுத்தமான நல்வசனமாம்.

ஓ! சகோதிரர்களே! இல்லறத்திலேயே நற்சுகத்தையும், நற்பலனையுங் கொடுக்ககூடிய நல்வசனமெனில் யாது?

பொய் கூறாதிருத்தல், புறங்கூறாதிருத்தல், கடுஞ்சொற் கூறாதிருத்தல், பயனற்ற சம்பாஷனை செய்யாதிருத்தல் இஃதே.