பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 341

இல்லறத்திலேயே நற்சுகத்தையும், நற்பலனையும் கொடுக்ககூடிய நல்வசனமாம்.

ஓ! சகோதிரர்களே! இல்லறத்தினின்று துறந்து சத்தியமார்க்கத்தில் பழகுவதினால் உண்டாகும் நல்வசனமெனில் யாது?

மேற்கூறிய நான்குவகை துன்வசன பழக்கங்களை வெறுத்து நீக்கி விலகிக்கொண்டு பரிசுத்த மனத்துடனும், உலகப்பற்றைவிட்டு சத்திய மார்க்கத்தில் நாடி சத்தியமார்க்கப் பிரகாரம் ஒழுகிவரும்படியான இவ்வசனமே இல்லறத்தினின்று துறந்து சத்தியமார்க்கத்தில் பழகுவதினால் உண்டாகும் பரிசுத்த நல்வசனம் என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! துன்வசனத்தை ஒழித்து நல்வசனத்தை விருத்தி செய்வதற்கு சம்யக்வீரியா அதாவது நன்முயற்சியைக் கடைபிடிக்கவேண்டும். நற்சித்தத்துடனும், சித்தஜாக்கிரதையுடனும், துன் வசனத்தை ஒழிக்க சம்யக்ஸ்மிருதி அதாவது நற்கடைபிடித்தல்வேண்டும். ஆக நல்வசனத்தை தொடர்ந்து வருபவை மூன்றாம். அவை நற்பார்வை, நன்முயற்சி, நற்கடைபிடி என்பவைகளே.

ஓ! சகோதிரர்களே! சம்யக் திருஷ்டி அதாவது நற்பார்வை அல்லது நற்காட்சி முதலாக வருகின்றது. எவ்விதத்தில் இது ஆரம்பமாக வருகின்றது.

துற்செய்கை துற்செய்கை என்றும், சம்யக்கர்மந்தா அதாவது நற்செய்கை நற்செய்கை என்றும் பகுத்தறிந்துக் கொள்ளுவானகில் அவன் நற்பார்வையில் இருக்கின்றான்.

ஓ! சகோதிரர்களே! மிச்சாகர்மந்தா துற்செய்கை எனில் யாது?

கொலை செய்தல், கள்ளருந்தல், விபசாரஞ்செய்தல் இவைகளே துற்செய்கை என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! நற்செய்கை எனில் யாது?

ஓ! சகோதிரர்களே! நற்செய்கை இருவகைப்படும்.

முதலாவது - இல்லறத்திலேயே நற்சுகத்தையும் நற்பலனையும் கொடுக்கக் கூடிய நற்செய்கையாம்.

இரண்டாவது - இல்லறத்தினின்று துறந்து சத்தியமார்க்கத்தில் பழகுவதினால் உண்டாகும் பரிசுத்தமான நற்செய்கையாம்.

ஓ! சகோதிரர்களே! இல்லறத்திலேயே நற்சுகத்தையும், நற்பலனையும் கொடுக்க கூடிய நற்செய்கையெனில் யாது?

கொலைசெய்யாதிருத்தல், கள்ளருந்தாதிருத்தல், விபசாரஞ் செய்யாதிருத்தல் இஃதே. இல்லறத்திலேயே நற்சுகத்தையும், நற்பலனையும் கொடுக்ககூடிய நற்செய்கையாம்.

ஓ! சகோதிரர்களே! இல்லறத்தினின்று துறந்து சத்தியமார்க்கத்தில் பழகுவதினால் உண்டாகும் நற்செய்கை எனில் யாது?

மேற்கூறிய மூன்றுவகை துற்செய்கைகளான பழக்கங்களை வெறுத்து நீக்கி விலகிக்கொண்டு பரிசுத்த மனத்துடனும், உலக பற்றை விட்டு சத்தியமார்க்கத்தில் நாடி சத்தியமாக்கப்பிரகாரம் ஒழுகிவரும்படியான இச் செய்கையே இல்லறத்தினின்று துறந்து சத்தியமார்க்கத்தில் பழகுவதினால் உண்டாகும் பரிசுத்த நற்செய்கை என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! துற்செய்கையை ஒழித்து நற்செய்கையை விருத்திசெய்வதற்கு சம்யக்வீரியா அதாவது நன் முயற்சியைக் கடைபிடிக்க வேண்டும். நற்சித்தத்துடனும், சித்த ஜாக்ரதையுடனும், துற்செய்கையை ஒழித்து சம்யக்ஸ்மிருதி அதாவது நற்கடைபிடித்தல் வேண்டும். ஆக நற்செய்கையைத் தொடர்ந்துவருபவை மூன்றாம். அவை நற்பார்வை, நன் முயற்சி, நற்கடைபிடி என்பவைகளே.

ஓ! சகோதிரர்களே! சம்யக்திருஷ்டி அதாவது நற்பார்வை அல்லது நற்காட்சி முதலாக வருகின்றது. எவ்விதத்தில் இது ஆரம்பமாக வருகின்றது.