பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 345

விலகச்செய்யும் தர்மமும், அசங்கதங் அழியா தர்மமும், அப்பட்டி குலம் மதுரம் இமம் புகுணம் ஸுவிபத்தங் - குற்றமற்றதும், மதுரமானதும், தெளிவானதும், தருக்கநீதியானதுமான தம்மம் இமம் ஸரணத்த முபேமி - தர்மத்தை யாங்கள் துணைக்கொள்ளுகிறோம்.

சங்கம்

3. யத்தச்ச தின்ன மஹாப்பலம் ஆஹு
சது ஸுஸுஸுஸு புரிஸயு கேஸு
அத்தச்ச புக்கல தம்ம தஸாதி
சங்கம் இமம் ஸரணத்த முபேமி.

சங்கம்

யத்த ச்ச தின்ன மஹாப்பலம் ஆஸு - எட்டு மார்க்கங்களை உடையவர்களும், சது ஸுசு ஸீசு புரிஸயு கேசு - நான்குவித வாய் மெய் உடையோர்களும், அத்தச்ச புக்கல தம்ம தஸாதி - தர்க்கத்தில் தேர்ந்து அவன் பலனைக் கண்டடைந்த, சங்கம் இமம் சரணத்த முபேமி - சங்கத்தை யாங்கள் துணைக்கொள்ளுகிறோம்.

புத்தாங்க சரணம், தர்ம்மாங்க சரணம், சங்காங்க சரணமெனத் திரிரத்தினங்களை போற்றிச் சென்றார்கள்.

16.கோசல நாட்டரசன் காதை

பகவனும் வைஸாலிவிட்டு நீங்கி கோசலைநாடென்னும் அயோத்தியா புரியை அடைந்து அங்குள்ள ஒருவனத்தில் தங்கினார்.

ததாகதராம் தேவாதிதேவன் வந்து தனது தேசத்திலுள்ள ஒரு வனத்தில் தங்கியிருப்பதை வேவுகர்களால் அறிந்த பிரசானஜித்தென்னும் அரசன் தனதரச கோலத்துடன் சென்று அஞ்சலியஸ்தனாக வணங்கி தேவாதிதேவா, திரிவேத போதனா, தினகரப் பிரகாசா, திங்கள் முகவதனா, ஜெகத்திரட்சகா என்று துதித்து ததாகதருடையப் பாதப்படி எமதுதேசத்திற்படிய என்ன பாக்கியம் பெற்றேன், உமது திருமுகத்தைக் கண்ணாரக்கண்டேன், தீவினையை விண்டேன், ஆனந்தங்கொண்டேன். ஐயன் அடிமையின் புசிப்பேற்று அருள்மொழியாம் சத்தியதன்மத்தை ஊட்டி, காமாக்கினி, கோபாக்கினி, லோபாக்கினியால் எறிந்துகொண்டிருக்கும் உள்ளத்தைக் குளிரச்செய்ய வேண்டும்.

உலகத்தை ஆளும் முடிசார்ந்த மன்னர்களும், படிதாழ்ந்த ஏழைகளும் பிடிமண்ணாய்ப்போவதைக் காண்கின்றேன். ஆதலின் அடியான் மீது கண்ணோக்கம் வைக்கவேண்டுமென்றான்.

இன்ப அவாவாலும் பேராசையாலும் சுமக்கப்பட்டிருக்கும் அரசனுடைய உள்ளத்தை அறிந்த நமதையன் பின்வருமாறு போதிக்கலாயினர்.

துற்கருமத்தால் தாழ்ந்த அந்தஸ்துள்ளவர்களும் ஓர் புண்ணிய புருஷரைக் கண்டவளவில் அவரை அன்புடன் வணங்குகிறார்கள். சற்கருமத்தினால் இப்பயனைப்பெற்ற அரசன் புத்தரை சந்தித்தபோது அவர்பால் வைத்த அன்பின் மிகுதியால் ஐயன் அருளறம் போதிக்கலாயினர்.

அதாவது சத்தியதன்மத்தைக் கேட்க விரும்புவோர் அதே நோக்கமாகவும் ஆழ்ந்து உள்ளத்தில் ஆராயக் கூடியவர்களாவும் இருத்தல் வேண்டும்.

ஏனென்பீரேல் நம்முடைய நற்காரியங்கள் யாவும் நற்சாயலாய்த் தோன்றி நல்லுள்ளத்தில் பதிந்து நற்பலன் ஈய்ந்து சருவசீவர்களுக்குஞ் சுகத்தை அளிக்கும்.

நம்முடைய துற்காரியங்கள் துற்சாயலாய்த் தோன்றி துன்னுள்ளத்தில் பதிந்து துற்பலனை ஈய்ந்து சருவசீவர்களுக்குந் துக்கத்தை அளிக்கும்.

நற்கருமம் வாய்ந்த அன்பார்ந்த உள்ளமே யாவற்றிலும் சிறந்தது அவையே யாவரும் விரும்பத்தக்கது.

ஆதலின் எம்மால் உமக்குப் போதிக்கப்போவது சத்தியதன்மம். உம்மால் நடக்கவேண்டியது சத்தியமார்க்கமாகும்.

உம்முடையப் புத்திர பௌத்திரர்களைப் பாதுகாத்து ரட்சிப்பது போல் உமதுதேசக் குடிகளையும் பாதுகாத்து ரட்சித்தல் வேண்டும்.