பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 349

ஓ! சகோதிரர்களே! பிரீதிகொண்ட பொருட்களினால் விவாதமும், குதர்க்கமும், அழுகையும், துக்கமும் பொறாமெயுடன் சேர்ந்தும்; அகந்தையும், வீணெண்ணமும் புறங்கூறலுடன் சேர்ந்து, விவாதமும் குதர்க்கமும் பொறாமெயுடன் கலக்க குதர்க்கத்தினின்று புறங்கூறல் உதிக்கின்றது.

ஓ! சகோதிரர்களே! இவ்வுலகில் பிரீதிகொள்ளும் பொருட்களும், இவ்வுலகில் நிகழும் பொருளாசையும், அவாவும், திருப்தியும் இவ்வுலகில் இனி ஜீவர்கள் அடையும் நிலையும் எங்கிருந்து உதிக்கின்றன.

ஓ! சகோதிரர்களே! இவ்வுலகில் பிரீதிகொள்ளும் பொருட்கள் பற்றிலிருந்து உதிக்கின்றன. இவ்வுலகில் நிகழும் பொருளாசை, அவா, திருப்தி இவைகள் பற்றிலிருந்து உதிக்கின்றன. இவ்வுலகில் இனி ஜீவர்கள் அடையும் நிலையும் பற்றின் பலனுக்குத்தக்கவாறு நிகழ்கின்றன.

ஓ! சகோதிரர்களே! இவ்வுலகில் நிகழும் பற்று எதினின்று எழுகின்றது. அதன் பகுப்பு யாது? இவ்வுலகில் வழங்கும் இன்பம் துன்பம் என்பவைகளினின்று பற்று உதிக்கின்றது. தோற்றத்தையும் மடிவையும் கண்ட ஒருவன் பகுத்தறிந்துக் கொள்வான். இன்பமும் துன்பமும் நிகழ்வதற்கு மூலகாரணம் யாது? எதுகாரணத்தால் இவைகள் நிகழ்வதில்லை? மடிவும் தோற்றமும் எப்படி நிகழ்கின்றன.

ஓ! சகோதிரர்களே! இன்பமும் துன்பமும் பரிசத்தால் நிகழ்கின்றன. பரிசம் எழாதபோது இன்பமும் துன்பமும் நிகழ்வதில்லை. மடியவைப்பதும் தோற்றவைப்பதும் பரிசமே.

ஓ! சகோதிரர்களே! இவ்வுலகில் பரிசம் உதிப்பதற்கு மூலகாரணம் யாது? எது கிரகிப்பதற்கு மூலம். எது இருப்பின் நான் என்னும் மமதை நீங்கும். எதை தவிர்ப்பதினால் பரிசம் விலகும்.

ஓ! சகோதிரர்களே! நாமரூபமே பரிசத்துக்கு மூலகாரணம். பரிசத்தை கிரகிப்பது பற்றே. பற்றை நிவாரணஞ்செய்வதால் நான் என்னும் மமதை நீங்கும். ரூபத்தை நிவாரணஞ்செய்ய பரிசம் விலகும்.

ஓ! சகோதிரர்களே! இவ்வுலகில் சகோதிரர்களில் ஒருவன் சுபாவ அறிவுடனில்லாமலும், உன்மத்த அறிவுடனில்லாமலும், அறிவற்றில்லாமலும் இருப்பானாகில் ரூபம் ஒரு நிகரல்ல. ஏனெனில் மயக்கமே அறிவில் மூலமாக நின்று காரியாதிகளை பலவிதமாக நடப்பிக்கின்றது.

உலகில் சகோதிரர்களில் ஒருவன் சகலபாபங்களையும் விட்டொழித்து புனிதனாகவும், சாந்தமுள்ளவனாகவும், மனநிறைவுள்ளவனாகவும், பரிசுத்தனாகவும், சமுசார சாகரத்தினின்று விலகினவனாகவும் சுயம்பாயிருப்பானாகில் அவனையே பிராமணனென அழைக்கலாம்.

உலகில் சகோதிரர்களில் ஒருவன் ஆறுதலும், துற்கன்மங்களினின்று விலகினவனும், களங்கமற்றவனும், ஜனனத்தையும் மரணத்தையும் வெல்லும் சக்தியுடையவனாகியும் இருப்பானாகில் அவனையே சமணனென அழைக்கலாம்.

உலகில் சகோதிரர்கள் ஒருவன் அசுகத்தைச் சுடும் காமத்தினின்று விலகியும், சகல பற்றுக்களை ஒழித்தும் எப்பொருட்கள் பேரிலும் அவாவைக்காமலும் இருப்பானாகில் அவனையே நாதனென்று அழைக்கலாம்.

உலகில் சகோதிரர்களில் ஒருவன் காமத்தையும் அவாவையும் விட்டொழித்தவனும், மறுபடியும் தாயின் வயிற்றில் பெறப்படாதவனும், தியான நிலையில் பூர்த்திபெற்றவனாகியும் இருப்பானாகில் அவனையே அறஹத்தென அழைக்கலாம்.

உலகில் சகோதிரர்களில் ஒருவன் துக்கத்தை விருத்தி செய்யும் கன்மங்களினின்று விலகியும், நற்பார்வையுடன் வனங்களில் சென்றும், கபடம் ஆணவம், பொருளாசை, கோபம், நாமரூபம் இவைகளை அணுகவிடாது பரிபூரண நிலையை அடையசிரத்தை கொண்டிருப்பானாகில் அவனையே பரிபாஜா என அழைக்கலாம்.