பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சதா விழிப்புள்ளவரும், ஏனையோர்களைவிட தாம் மெத்த பூர்த்தியான ஞானி என்று புகழ்ந்துக்கொள்ளாதவரும், உலகில் இவர் பெரியார் இவர் சிறியார் என தாரதம்மியம் பாராது தன் உள்ளத்திலும் புறம்பிலும் எழும் அவாக்களை தினேதினே நசித்துவருபவருமாய் இருப்பவர் எவரோ அவரையே முனி என்றழைக்கலாம்.

பரிசுத்த சத்தியங்களாம் துக்க சத்யம், சமூதய சத்யம், நிரோதய சத்யம், மார்க்க சத்யம் (துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம்) இவைகளில் இடைவிடா சாதமுடையவராகியும்; நித்திறை, சோம்பல், மந்தம் இவைகளை ஜெயித்தவராகியும், அசதியுடன் வாழாமலும், மமதையில் சுகித்திராமலும் இருப்பவரெவரோ அவரையே முனி என்றழைக்கலாம்.

பொய்ப்பாதையில் செல்லாமலும், ரூபங்களின்மேல் அவாக் கொள்ளாமலும், மேலான பதவியை நாடியும், கொடுமெயற்றும், தான் பழகிய பொருட்களின் பேரில் ஆசைவையாதும், புதிய பொருட்களின்பேரில் மனம் நாடாமலும், பெரியோர்களால் விலக்கப்பட்டதும், அறிவற்றவர்களால் புகழத்தக்கதுமான பொருட்களின்மேல் அவாக்கொண்டு அலையாமலும் அவாக்களுக்கு சற்றேனும் இடந்தராது இருப்பவரெவரோ அவரையே முனி என்றழைக்கலாம்.

அந்த அவா யாதெனில்:- அதே ஓர் பெருக்க வெள்ளம். அதே ஒரு பெருத்த தூண்டுகோல், பேரவா, கிலேசம், மோகமென்னும் சதுப்புநிலம், நாமரூபத்தின்மேல் அவாவற்றவரும் சகலவிதமான கெட்ட திருஷ்டியினின்று விலகியவரும், எந்தெந்த காலங்களில் எவ்வெவ்விதமான கெட்ட எண்ணங்கள் தோன்றுகின்றதோ அவ்வவ்விதமான கெட்ட எண்ணங்களை போக்குவதற்கான நல் எண்ணங்களை விருத்தி செய்தும், எந்தெந்த காலங்களில் எவ்வெவ்விதமான அவாக்கள் எழுகின்றதோ அந்தந்த காலங்களில் எந்தெந்த அவாக்களை எவ்வெவ்விதமாக எந்தெந்த தியானங்களால் அறுக்கமுடியுமோ அந்த தியானத்தில் நின்று தியானித்தும், எந்தெந்த புண்ணிய ஞானங்கள் எந்தெந்த காலங்களில் தோன்றுகின்றதோ அந்தந்த காலங்களில் அந்தந்த ஞானங்களை விருத்தி செய்தும், எந்தெந்த காலங்களில் எவ்வெவ்விதமான ஜீவர்களுக்கு எவ்வெவ்விதமான போதனைகளை எவ்வெவ்விதமாக போதிக்கவேணுமோ அவ்வவ்விதமாக போதித்தும், சகல ஜீவர்களினின்று உதிக்கும் பலவிதமான அவாக்களென்னும் அம்பை பலவிதபுண்ணிய வழிகளாலும், நீதிமார்க்கத்தாலும் தினேதினே போதித்து தான் எவ்விதமாய் அவாக்களென்னும் அம்பைப் பிடுங்கிவிட்டபின் ஆனந்தமடைந்தனரோ அதே ஆனந்தத்தை ஜீவர்கள் அடையும் வரையில் ஜீவர்களுக்கு இடைவிடாது போதித்துவருபவர் எவரோ அவரையே முனி என்றழைக்கலாம்.

ஓ! சகோதிரர்களே! தகாதகாலங்களில் வெளியே செல்லாமலும் குறித்த நேரத்தில் பிச்சாபாத்திரத்தைக் கரத்திலேந்தி கிராமங்களுக்குச் சென்றும், பிச்சை வாங்குங்கால் இவர்கள் ஏழை இவர்கள் தனவான் என நினையாது சமமனதுடனும், பிச்சாபாத்திரத்தைக் கரத்தில் ஏந்தி செல்லுங்கால் இந்த இல்லத்தில் நமக்கு நல்வுணவு கிடைக்கும் இந்த இல்லத்தில் நல்வுணவு கிடைக்காதென்னும் அபிப்பிராயத்துடன் செல்லாமலும், சாவகர்களாம் குடும்பிகள் அன்புடன் அளித்த உணவை பிச்சாபாத்திரத்தில் வாங்கியபின் திரும்புங்கால் இன்னின்ன இல்லத்தில் இவ்விவ்வகைத்தான பதார்த்தங்கள் இவ்விவ்வதமான குடும்பிகளால் அளிக்கப்பட்டனவென நினையாது நடக்கும்போதே மூன்று அடி தூரத்தில் தலைகுனிந்து ஒரேபார்வையுடனும் ஒரேமனதுடனுஞ் சென்று சேர்ந்தபின் இவ்வுணவோ இரும்புத்தூளை ஒத்தது இத்தகைய உணவோ பசி என்னும் நோய்க்கு மருந்து என சிந்தித்துக்கொண்டும் புசித்தபின் ஒரு தனிமெயான இடத்தில் சென்று தான் வருங்கால் மனம் எந்தெந்த இடத்தில் தவறிசென்றதோ அவைகளை தியானத்தில் சிந்தித்து மறுபடியும் அவ்வகைத்தான பார்வையில் மனதை செலுத்தாதிருக்கும்படி திருத்தியபின் தன்னிற்றானே விழிப்புடன் தியானசமாதியிலிருப்பவரெவரோ அவரையே முனி என்றழைக்கலாம்.