பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 355

சக்கிரவர்த்திகள் யாவரேனும் இத்தேசத்தைப் பார்ப்பதற்காய் வருத்துப்போக்கில் இருக்கின்றார்களோ என்றார்.

அவ்வகையால் அவர்களின் வருத்துப்போக்கை யான்கண்டதுமில்லை கேட்டதுமில்லை என்றான்.

அத்தகைய சுத்தவீரர்களுக்கே இத்தேசத்தின்மீது கவலையில்லா திருக்கவும் உமக்கு மட்டிலும் அக்கவலையுண்டாய காரணமென்னை என்றார்.

ஐயனே! அவர்கள் வம்மிஷ வரிசையில் வாழையடிவாழை தோற்றுவது போல் அரசசந்ததியார் தோற்றிக்கொண்டே வந்தார்க்ள. என்னுடைய வம்மிஷ வரிசையிலோ தாமும் உலகத்தை வெறுத்து அவலோகிதரானீர். உமது மைந்தன் சிறுவனையும் அவலோகிதனாக்கிவிட்டீர். ஆதலின் இவ்வரசை யாரிடங் கொடுத்துவிடலாமென்று கோறினான்.

அவற்றை வினவிய அருகர் சக்கிரவர்த்தியை நோக்கி ஐயனே! வாழையடிவாழை என்னும் ஓர் தாட்டாந்தங் கூறினீரே அவ்வாழையினது தோட்டமே அழிந்துபோமாயின் மறு வாழைத்தோன்றுமோ என்றார்.

அம்மொழியைக்கேட்ட அரசன் திடுக்கிட்டு தோட்டமே அழிந்து போகுங்கால் வாழையின் தோட்டமும் அழிந்துபோவது இயல்பே என்றான். அதுபோலவே இந்த சக்கிரவர்த்திகளின் தோட்டமும் அழிந்து போயதென்று தாங்கள் எண்ணிக்கொள்ளலாகாதோ என்றார்.

ஐயனே! தாமுந்தமது மைந்தனும் இருக்குமளவுஞ் சக்கிரவர்த்திகளின் தோட்டம் அழிந்துபோயதாக யான் எண்ணுவதற்கு ஆதாரமில்லையே என்றான்.

ஐயனே! தோற்றும் பொருட்கள் யாவும் கெடுமென்பதை தெள்ளறத் தெளிந்துகொண்டீரா இல்லையா என்றார்.

தாதா தெரிந்துகொண்டேன் தெரிந்துகொண்டேன் என்று கூறினான்.

நீவிர் தெரிந்துகொண்டது திண்ணமாயின் உமது கோறிக்கையை மறந்துவிடுவதே மகிழ்ச்சியாகும் என்று கூறியவுடன் சுத்தோதயச் சக்கிரவர்த்தியின் பேச்சுமூச்சும் ஒடுங்கி பிரேதமானார்.

குடும்பத்தரசர்கள் யாவரும் வந்து கூச்சலிட்டழுது கண்கலங்கி பிரேதத்தை சுடலைக்கு எடுத்துச்சென்று தகனத்திற்கு ஆரம்பிக்கும்போது அசோதரையும், இராகுலரும் அம்மடத்தைச்சேர்ந்த சங்கத்தவர்களும், பந்துமித்திரர்களும் சூழ்ந்து நின்றார்கள்.

தகனக்காட்சியைக் கண்டுநின்ற ததாகதர் சுத்தோதய மறுமெய் பிறப்பறுமோ அறாவோவென்று உள்ளத்துணர்ந்து அறுமென்னுந் தோற்ற உணர்ச்சியால் ஆனந்தமுற்று மலைமகள் அசோதரையும் மற்றுமுள்ளோருங் காண தகனகுண்டத்தை சுற்றிச்சுற்றி தனது ஏக சடையுடை துலங்க இவ்வுரு ஆணோ பெண்ணோ என்று கலங்க சுடலையில் நடனமாடினார். நம்பெருமான் நடனங்கண்டயாவருந் தங்கள் தங்கள் துக்கங்கள் யாவையும் போக்கி ஆனந்த சுகிகளாய் அவரவர்கள் இல்லஞ்சேர்ந்தார்கள்.

கருணாகரக்கடவுள் கமலபாதமானது சுடலைப் புழுதியில் நடமாடவும், நடனமிடவுங்கண்ட நல்லுறவோரும், மற்ற அரசர்களும் அரசனது ஆனந்த நடனத்திற் சுகமகிழ்ந்து சிலர் நடராசா நடராசாவென்றும், சுத்தோதய அரசபுத்திரர் சுடலையாடி என்றும் கொண்டாடி அவரவர்கள் இல்லஞ் சேர்ந்தவர்கள் நீங்கலாக மற்றுமுள்ள சத்திய சங்கத்தோர் சங்க நிறையோனை இராஜகிரக வேணு வியாரத்திற்கு அழைத்துச் சென்று சகலரும் பூசித்து குருமணி பீடத்தில் வீற்றிருக்கச் செய்து வேண சங்கைகளை விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

வீரசோழியம்

பூண்ட பறையறைய பூதமருள, நீண்ட சடையானாடுமே,
நீண்டசடையானாடு மென்ப, மாண்டசாயன் மலைமகட் காணவே காணவே.
பாடகஞ்சேர் காலொருபாற் பைம்பொற் கழலொகுபாற் தேன்றுளி,
நீடு குழலொருபால் நீண்டசடை ஒருபால் நீடிய பாந்தளொருபான் - மேகலைசேர்ந்,
தாடு துகிலொருபா லவ்வுருவாண்பெண்னென்றறிவார்யாரே.