பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360 / அயோத்திதாசர் சிந்தனைகள்

2.மற்றொரு சினேகிதன் வார்த்தையில் மட்டிலும் நேயனைப் போல் காட்டி உமக்கு உதவியாயிருப்பேன், உதவியும் புரிவேனெனக்கூறி ஒன்றுக்கும் உதவா சூனியத்திலிருப்பான்.
3.வேறுமோர் சினேகிதன் மிக்க வன்புடையவன்போல் இனிய மொழிகளைக்கூறி கெடுவெண்ணத்தை உள்ளத்திருத்தி அக்கேட்டைச் செய்தற்கு சமயம் பார்த்திருப்பான்.
4.இன்னொருவன் பலவந்தமாகவே நெருங்கி நேயனென்றும், உறவினநென்றுங் கூறி உடனுக்குடன் கெடுக்க ஆரம்பிப்பான்.

இவர்கள் நால்வருள் முதலானவனாகும் பொருளை அபகரிக்குஞ் செயலில் நான்கு வகையாவர்.

1.ஒரு சினேகிதன் உமது பொருளை வாங்கிப்போகவேண்டும் என்று வருவான்.
2.ஒரு சினேகிதன் சிறிய பொருளைக் காட்டி பெரிய பொருளைக் கொண்டுபோக வருவான்.
3.ஒரு சினேகிதன் தனக்கு ஆபத்து நேரிடுங்கால் நெருங்கி சினேகித்து வேண்டிய பொருளை கிரகிக்க ஆரம்பிப்பான்.
4.ஒரு சினேகிதன் தன் சுகத்திற்கு வேண்டிய பொருள் கிடைக்கும் வரையில் நேசித்துத்திரிவான்.

இந்நால்வரும் வெருங்கையுடன் உமது பொருளை அபகரித்துச் செல்லும் பொருட்கள்ள நேயராவர்.

வார்த்தையால் வசப்படுத்தி வஞ்சிக்கும் நேயர்கள் நான்கு வகையாயிருப்பார்கள்.

1.சென்ற கால விஷயங்களைப் பேசி அவ்வார்த்தை நயத்தால் வசப்படுத்தி தங்கள் சுயப்பிரயோசனத்தைத் தேடிக்கொள்ளுவார்கள்.
2.வருங்கால விஷயங்களைப் பற்றிப் பேசி அவ்வார்த்தை நயத்தால் தங்கள் சுயப் பிரயோசனத்தைத் தேடிக்கொள்ளுவார்கள்.
3.யாதோர் பிரயோசனமற்ற வார்த்தைகளைப் பேசி அவ்வார்த்தை நயத்தால் தங்கள் சுயப்பிரயோசனத்தைத் தேடிக்கொள்ளுவார்கள்.
4.விவேகிகள் யாதேனுஞ் சத்விஷயங்களைப் புகட்டுவார்களாயின் அவ்வார்த்தைகளைக் கெடுக்கத்தக்க நயவார்த்தைகளைப் புகட்டி தங்கள் சுயப்பிரயோசனத்தைத் தேடிக்கொள்ளுவார்கள்.

உறவாடிக்கெடுக்கும் நேயர் நான்கு வகையாகத் தோன்றுவார்கள்.

1.ஏதேனுமோர் பாவச்செயலை நாடிக்கேட்டால் அதைசெய்யத்தக்க உற்சாகங்களை ஊட்டிக் கெடுதியை உண்டு செய்துவிடுவார்கள்.
2.நீதிமார்க்க விசாரிணைச் செய்வதற்காக ஓரிடஞ் செல்லுங்கால் அவ்விடம் ஏகவிடாத உபாயங்களையும், அவர்களை விரோதிக்கும் வார்த்தைகளையும் புகட்டிக் கெடுத்துவிடுவார்கள்.
3.எதிரிற் காணுங்கால் மிக்க புகழ்ச்சியாகவே பேசிக்கொண்டு உள்ளுக்குக் கெடுக்கத்தக்க உபாயங்களைத் தேடுவார்கள்.
4.காணாவிடங்களில் அவதூறு பேசிக்கொண்டு உன் கீர்த்திக்கும் பெயருக்கும் இழிவை உண்டுசெய்யத்தக்க எத்தனங்களைத் தேடுவார்கள்.

உனது திரவியத்தை நஷ்டப்படுத்தி சீரழியச்செய்யும் சிநேகிதர்கள் நான்குவகையாகத் தோன்றுவார்கள்.

1.உன்னையடுத்து மதுபானக் கடைக்கழைத்துச் செல்லும் உபாயத்தைத் தேடுவார்கள்.
2.நேரமில்லா நேரங்களாகும் அகாலகாலங்களில் வீதிகளில் அழைத்துச் சென்று வீண்கலகத்திற்கும், விரயத்திற்கும் வழிதேடுவார்கள்.
3.கூத்தாட்டம், பாட்டுக்கச்சேரி, அகஷியம், ஜாலம் இத்தகைய இடங்களுக்கு அழைத்துச் சென்று விரயத்திற்கு உள்ளாக்குவார்கள்.
4.சூதாட்டங்களுக்கும், களியாட்டுகளுக்கும் அழைத்துச்சென்று அதினாலும் விரயத்தை உண்டு செய்வார்கள்.