பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362 / அயோத்திதாசர் சிந்தனைகள்


3. நற்போதனைகளைப் போதிக்குங் கூட்டத்திற்குத் தானுஞ் செல்லுவதுடன் உன்னையும் பலவந்தமாக அழைத்துச் செல்லுவான்.

4. நற்கதி அடையவேண்டிய வழிக்குத் தானு முயற்சிப்பதன்றி உன்னையும் அதில் முயற்சிசெய்யத் தூண்டுவான்.

இத்தகைய நான்குவகை நேயர்களே உள்ள நிதியை விருத்தி செய்வோர்களாவார்.

குடும்பியே நல்லுள்ளத்தோர் நன்குவகையான அன்பினைப் பாராட்டுவார்கள்.

1. நீ பாக்கியவந்தனாயிருக்குங்கால் உன்னுள் அன்புகூர்ந்து ஆனந்தம் அடைவார்கள்.

2. உனது தனவிருத்தியையும் தானியவிருத்தியையுங் கண்டு ஆனந்தம் அடைவார்கள்.

3. வஞ்ச நெஞ்சினர்களை உன்னிடம் சேராவண்ணம் பாதுகாப்பார்கள்.

4. நல்லெண்ணமும், அன்புமிகுத்தோர்களை உன்னிடம் வரவழைத்து உனக்குள்ள அன்புடன் மிக்க அன்புடையவனாகச் செய்வார்கள்.

இத்தகைய அன்பினைப் பாராட்டுவோர் நான்குவகையோர் என்பது இவர்களேயாகும்.

குடும்பிகளுக்குள் மிக்க அன்புமிகுந்த சிகாளா மற்றுங் கேட்டறிவாயாக.

குடும்பிகளுக்குள் தாய்தந்தையர் தங்கள் மக்களை நடத்தவேண்டிய ஒழுக்கங்களே மிக்க மேலானதாகும். குடும்பத்தின் செயலே குலத்தின் குணமெனத் தோன்றுதலால் பெற்றோர் பிள்ளைகளை நடத்துஞ் செயல்களே பேரறிவுக்கு ஆதாரமாகும்.

1. ஆதலின் பெற்றோர்கள் தங்கள் மக்களுக்குப் பெருந்திண்டியூட்டி பேராபரணம்பூட்டி அழகுபாராது மிக்க ஒழுக்க நடையிலும், ஒழுக்க மொழியிலும், ஒழுக்கச் செயலிலும் அழகுபார்த்தல் வேண்டும்.

2. துஷ்டச்செயலும், தூறு வார்த்தையும், நஷ்ட களியாட்டு மிகுத்த பிள்ளைகளுடன் சாவகாசஞ் செய்யவிடாமல் ஒழுக்க மிகுத்தப் பிள்ளைகளிடம் உலாவச்செய்யல்வேண்டும்.

3. பிள்ளைகளின் பார்வையையும், மனதையும் கல்வியின் பேரிலும் கைத்தொழில்களின் பேரிலும் நாட்டமுறச் செய்யல்வேண்டும்.

4. மக்களுக்குப் பருவமறிந்து நோய்பழியற்ற கால்வழியிற் பெண்களைச் சேர்த்துக் குடும்பவிருத்திசெய்து சிறந்த குடும்பத்தானென்ன சீர்படுத்தல் வேண்டும்.

5. தான் சம்பாதிக்கும் சொத்துக்களின் மிகுதியை ஆண்மகவிற்கும் பெண்மகவிற்கும் சரிபாகம் அளித்தல் வேண்டும்.

இத்தகைய ஒழுக்கங்களைந்தும் தாய்தந்தையர் மக்களை சீர்பெறச் செய்யுந் திருத்தங்களாகும்.

குடும்பியே இவற்றுள் ஈன்ற மக்கள் தாய்தந்தையரை என்றும் ஆதரிக்கும்படியான ஒழுக்கங்கள் யாதெனில் –

1. மக்கள் தங்கள் தாய்தந்தைகளை வணங்குதலும், வேண்டிய உபசரிப்புச் செய்தலும், அவர்களை மிக்க சுகத்தில் வைக்கவேண்டியவைகளையுந் தேடல் வேண்டும்.

2. தாய் தந்தையர்களுக்குச் செய்ய வேண்டிய அன்னாபிஷேக நெய் தயிர் போஷணைக் குறைவரவுங் குணக்கோணலின்றியுஞ் செய்துவரல் வேண்டும்.

3. தாய் தந்தையர் பெயர்கள் என்றுங் கெடாது மக்கட்செயல்களைக் கொண்டே மாதாபிதாக்கள் சிறப்படைதல்வேண்டும்.

4. மாதாபிதாக்களின் சொத்துக்குரிய மக்களென்று சகலருங்கூற சத்கருமத்தில் நடத்தல் வேண்டும்.

5. தாய்தந்தையர் உலகத்தில் மறைந்ததினின்று அவர்கள் மீதிருந்த அன்பும் அவர்கள் பெயரும் மாறாமல் அத்திதி கண்டு ஏழைகளுக்கு அன்னதானம் வஸ்திரதானஞ் செய்துவரல்வேண்டும்.