பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இவைகளே கணவனால் மனைவியை நடத்தவேண்டிய ஐந்து வகை ஒழுக்கங்கள் என்னப்படும்.

குடும்பியே, மனைவி தன்மணாளனுடன் நடந்துக் கொள்ளவேண்டிய ஒழுக்கங்கள் ஐந்துவகைப்படும்.

1. மனைவியானவள் தன்கணவன் மனோபீஷ்டப்படி அன்னமுதலியவை வட்டித்து திருப்த்தியுடன் புசிக்கச்செய்து போஷிக்கவேண்டும்.

2. கணவனுக்குரிய பந்துமித்திரர்கள் வருவார்களாயின் அவர்களையே தனது பந்துமித்திரர்களெனக் கருதி உபசரிப்புச் செய்து ஆதரித்தல் வேண்டும்.

3. தன் கணவனையே தனக்கு தாதாவாகவும், தன்கணவனையே தனக்குக் காவலாளியாகவும், தன்கணவனே தன்னைக் காக்குங்கர்த்தனாகவும் எண்ணி மறவாவன்பில் நிலைத்தல் வேண்டும்.

4. கணவன் சேகரிக்கும் பொருளை வீண்விரயஞ்செய்யாது பாதுகாத்து விருத்திசெய்து தன் கணவன் பொருள் சேகரிக்குங் காலந்தவரியபோது முன் சேகரித்துள்ளப் பொருளைக் கொண்டு கணவனை கவலையின்றி போஷித்துவரல் வேண்டும்.

5. மனைவியானவன் தன் தேகத்தை சோம்பலுக்கும், அதி நித்திறைக்கும் இடங்கொடாது குடும்பத்தின் தொழிலின் பேரிலும், பொருட்களை சுத்திசெய்து வீட்டை அலங்கரிப்பதின் பேரிலும், கணவனுடைய இதயத்திற்கு ஆனந்தத்தை உண்டு செய்து அன்பை பெருக்குதலின் பேரிலும் சுருசுருப்பா யிருத்தல் வேண்டும்.

இவ்வைந்துவகை ஒழுக்கங்களே மனைவி தன் கணவனைப் போஷிக்கவேண்டியவைகள் என்னப்படும்.

உத்தம குடும்பத்தோன் தனது குடும்பத்தோரை உபசரிக்கும் ஒழுக்கங்கள் ஐந்து வகைப்படும்.

1. குடும்பத்தோர் சுகதுக்கங்களுக்கு வேண வுதவிபுரிந்து ஆதரித்தல் வேண்டும்.

2. குடும்பத்தோர் வருத்துப்போக்கில் அவர்களுக்கு யாதோர் மனவருத்தமுமின்றி அன்புபாராட்டிவரல்வேண்டும்.

3. தன்னைப்போல் தனது குடும்பத்தோரும் சுகசீவிகளாக வாழ்கவேண்டிய பொருளதவிச் செய்து போஷித்தல்வேண்டும்.

4. தனது குடும்பத்தின் ஆண்மக்கள் போஷிப்பற்றிருப்பார்களாயின் அவர்களுக்கு வேண்டிய வித்தியா புத்தியை விருத்தி செய்து சிறப்படையச் செய்யல் வேண்டும்.

இவ்வைந்து ஒழுக்கங்களே உத்தம குடும்பத்தோன் செய்ய வேண்டியவைகளாம்.

உத்தமகுடும்பத்தோனுக்கு உத்தமக் குடும்பிகள் செய்ய வேண்டிய ஒழுக்கங்கள் ஐந்து வகைப்படும்.

1. உதவி செய்துவந்த குடும்பத்தோனுக்கு ஏதேனுமோர் குறைவு நேரிடுமாயின் அக்குறைவு தங்களுக்கு நேரிட்டனபோற் கருதி நிறைவு செய்யல்வேண்டும்.

2. உதவி செய்துவந்த குடும்பத்தோன் சொத்துக்கள் விரயமாகுங்கால் அவைகளை விரயமாகவிடாது பாதுகாத்தல்வேண்டும்.

3. உதவி செய்துவருங் குடும்பத்தோன் சொத்துக்கள் மென்மேலும் விருத்தியடையவேண்டிய முயற்சியின்று பாதுகாத்தல் வேண்டும்.

4. உதவி செய்துவந்த குடும்பத்தோன் சொத்துக்கள் யாவுமழிந்து ஆதுலநிலை அடைவானாயின் குடும்பத்தோர் அவனுக்கு வேண்டிய பொருளுதவிச்செய்து முன்போற் சுகசீவ வாழ்க்கை பெறச் செய்யல்வேண்டும்.

5. உதவி செய்துவந்த குடும்பத்தோன் மரணமடைந்துவிட்டாலும் தேசாந்திரியாயினும் குடும்பத்தோர் ஒன்றுகூடி அவன் பெண்சாதி பிள்ளைகளுக்கு யாதொரு குறைவும் நேரிடாமற் பாதுகாத்து சீர்பெறச் செய்யல்வேண்டும்.

குடும்பியே குடும்பத்தின் வாழ்க்கையுஞ் சுகமும் குணவீகையிலிருக் கின்றது.