பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 365


நீரொருவருக்கு உபகாரஞ்செய்வீராயின் மற்றவர்கள் உமக்கு உபகாரஞ் செய்வார்கள்.

நீரொருவனுக்கு உபகாரஞ்செய்யாமல் மற்றவர்கள் உபகாரத்தையே கருதுவீராயின் அவன் யீவுள்ளோனோயினும் உமக்கு லோபியாகவே விளங்குவான்.

மயக்கத்துக்கேதுவையும், மனத்திற்றுருவையும் உண்டு செய்யும் வஸ்துவை மற்றவனுக்கருளுவீராயின் மற்றவனுமுமக்கு அம்மயக்கவஸ்துவை அளித்து மதிமோசம் பெறச் செய்வானன்றி உன் மக்களை ஆதரிக்க மாட்டான்.

நீவிர் சருவசீவர்களின் மீதும் அன்பு பாராட்டுவீராயின் சருவசீவன்களும் உமது மீது அன்பு பாராட்டும்.

சருவசீவர்களின் மீது சினந்தேனும் புசிக்கவேண்டிய அவாவின் மிகுதியிலேனுந் துன்பம் செய்துவருவீராயின் சருவசீவர்களே துன்ப உருகொண்டெதிர் தோன்றும்.

அன்னிய மக்களுக்கு வேண்டிய பொருளளித்து ஆதரிப்பீராயின் அன்னியமக்கள் வேண பொருளளித்து உம்மை ஆதரிப்பார்கள்.

அன்னியர் பொருளை நீவிர் அபகரிக்கும் அவாவிலிருப்பீராயின் உனது பொருளை மற்றவர்கள் அபகரிக்கும் வழியைத் தேடுவார்கள்.

நீவிர் மற்றவர்களை வஞ்சிக்கத்தக்கப் பொய்யைச் சொல்லி பொருள் பரிப்பீராயின் மற்றவர்களும் உமக்குப் பொய்யைச் சொல்லி வஞ்சித்து விடுவார்கள்.

நீவிர் அன்னியர் தாரங்களை . தாய் தங்கையற்போற் கருதி ஆதரித்து வருவீராயின் உமது தாரத்தை மற்றவர்களுந் தாய்தங்கையற்போற் கருதி ஆதரிப்பார்கள்.

அன்னியர் தாரங்களை இச்சித்து அவர்கள் குடிக்குத் தீங்கு விளைப்பீராயின் உம்முடைய தாரத்தை மற்றவர்கள் இச்சித்து உன் குடிக்கு தீங்கு விளைவிப்பார்கள்.

குடும்பியானவன் குடும்பவாழ்க்கையில் மிக்க ஜாக்கிரதையிலும், சீலத்திலும், ஒழுகுவானாயின் சகலசுகமும் பெற்று வாழ்க்கையில் சுகமடைவான்.

அஜாக்கிரதையிலும், அசீலத்திலும் ஒழுகுவானாயின் இல்லற சுகமுமற்று துறவற பாக்கியமுமற்று இரண்டுங்கெட்ட நிலையினின்று உன்மத்தனைப் போலேங்கி உண்ண புசிப்புக்கும், உடுக்கக் கந்தைக்குமின்றி பலராலும் இகழப்படுவான்.

குடும்பியே எஜமானன் தன் வேலைக்காரர்களை நடத்தவேண்டிய ஒழுக்கங்கள் ஐந்துவகைப்படும்.

1. எஜமானன் வேலைக்காரர்களுக்குரிய திடத்தையும் வல்லபத்தையுங் கண்டு அவனவனுக்குத் தக்க ஊழியங் கொடுத்து வேலைவாங்க வேண்டும்.

2. ஏவலாளன் வயதுக்குத் தக்கவாறு வேலை வாங்குவதுடன் பசியறிந்து உணவளிக்கவேண்டியவர்களுக்கு உணவும், வேலைக்குத் தக்கக் கூலியளிக்க வேண்டியவர்களுக்குக் கூலியுமளித்து ஆதரித்தல் வேண்டும்.

3. ஏவலாளருக்கு ஏதேனும் வியாதி தோன்றுமாயின் அவ்வியாதியை நீக்கத்தக்க அவுடதப்பிரயோகங்களைச் செய்வதுடன் பத்தியப் பரிகாரங்களையும் அதற்குத்தக்க உணவுகளையும் அளித்துப் பாதுகாத்தல் வேண்டும்.

4. ஏவலாளருக்குத் தங்கள் தொழில்களிலேனும், வெளியிலேனும் யாதாமோர் ஆபத்து நேரிடுமாயின் ஏஜமானனே முன்னின்று அவ்வாபத்தை நீக்கல்வேண்டும்.

5. ஏவலாளனை வேலைவாங்குங்காலங்கள் நீங்கலாக அவர்கள் ஓய்ந்திருக்கவேண்டிய காலங்களையும் நியமித்தல் வேண்டும்.

ஆக இவ்வைந்தும் எஜமானிகள் ஏவலாளன் ஏவலாளியை வேலை வாங்க வேண்டிய ஒழுங்குகளாகும்.

குடும்பியே! ஏவலாளர்கள் எஜமானனுக்கு நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள் ஐந்து வகைப்படும்.