பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28 / அயோத்திதாசர் சிந்தனைகள்

செலுத்தி காலங்கழித்து வந்தார்கள். இதை நாளுக்கு நாள் அறிந்து வந்த மந்திரி குடிகள் நமக்கொன்றும் கொடுக்காமல் மதோன்மத்தமராய் காலங்கழிக்கின்றார்கள். இவர்களை அடக்க வேண்டுமென்னும் கெட்ட எண்ணங் கொண்டான். அரசனை அணுகி, அரசே நமது தேசத்து மக்கள் உம்மெ அவமதித்து வருகின்றார்கள் என்றான். அதைக் கேட்ட அரசன் ஏனென்னும் விசாரிணை இல்லாமல் அதற்கு யாது செய்யலாம் என்றான். மந்திரி மன்னனை நோக்கி அரசே, ஒவ்வோர் வீட்டிற்குத் தலைமெயானவனும் காலையில் அரண்மனைக்கு வந்து தம்மை சேவித்துப் போக வேண்டியது. அப்படி வராமற் போவார்களாயின் ஒவ்வொருவரும் பத்துபணம் ஆயம் செலுத்த வேண்டுமென தாங்கள் உத்திரவு பிறப்பிக்க வேண்டுமென்றான். அதைக் கேட்ட கூட்டைக் கலைப்பான் அரசனுக்குக் குதூகலம் பிறந்து தேசத்தோர்க்குப் பறையறைவித்து ஒவ்வொரு வீட்டிற்குத் தலைமெயானவனும் அதிகாலையில் அரண்மனைக்கு வந்து என்னைத் தொழுது போக வேண்டியது. அப்படி வராதவர்கள் பத்து பணம் ஆயம் செலுத்த வேண்டுமென்று ஆக்கியாபித்தான்.

- 1:2; சூன் 26, 1907 –

அதுபோல் ஒவ்வோர் மனிதனும் தத்தமது சுகவிருத்திக்காம் ஏதுக்களை நாடி வித்தைவிருப்பென்னுங் காரண குருக்களின் போதங்களைக் கைக்கொள்ளாமல் காரியகுருக்கள் மதக்கடைகளைப் பரப்பி தத்தம் மதமே மதம் தத்தம் சமயமே சமயமென்னுங் கட்டுக்கதைகளை வரைந்து ஒட்டுச்சுவற்றிற்கு முட்டுக்கொடுப்பது போல் பொய்யிற்கு பொய் உபச்சரணப்பொய் என்னும் புராணமூட்டைகளைக் கட்டிவைத்துக்கொண்டு, பத்திரம் நமது சாமியை மறக்க வேண்டாம். வழக்கம்போல் எனக்குக் கொடுக்குந் துட்டில் குறைக்கவேண்டாம் இதுதான் நான் உங்களுக் கூட்டுந்துட்டுமதி என வஞ்சித்துப் பொருள் பறிக்கும் போதகராகும் பாதகர்களை நம்பி கல்வி விருத்தி கைத்தொழில் விருத்தியில் நின்று சுகஜீவனஞ்செய்து போஷிக்கும் வழிகளை மறந்து ஒவ்வொருவரும் அடிமெய்த் தொழில்புரிந்து அவர் கொடுப்பதை இரந்து தின்னுங் காரணம் யாதெனில், கடவுளென்னும் பொருளறியாக்கழற்றி நிலையேயாம். கடவுள் என்னும் பொருளறிந்தோன் நீதியினாலும் நெறியினாலும் வாய்மெயினாலும் அதனை விளக்குவான். கடவுளென்னும் பொருளறியாதோன் கடவுள் எங்கும் நிறைந்திருக்கின்றான். அவனுக்கு எல்லாம் தெரியுமெனத் தம்பட்டமடிப்பான். ஆனால் அன்னியனுடையப் பொருளை அபகரிக்குங்காலத்தும், அன்னியன் மனைவியை இச்சிக்கும் காலத்தும், அன்னியனை வஞ்சிக்குங் காலத்தும் எங்கும் நிறைந்த கடவுள் எல்லாமறியுங் கடவுள் பார்ப்பானென்னுஞ் சிந்தனாச் செயலுண்டோ , இல்லை . அதாவது, உண்மெயிற் சொல்லாததினாலேயாம்.

எங்ஙனமெனில், நமது தேயத்தில் வண்டி பாட்டைகள் செவ்வனில்லாகாலத்து வண்டிகள் மேடுபள்ளம் உராய்ந்து ஓடுங்கால், சக்கரத்துள் சொருகியிருக்கும் இரும்பு கம்பி அதாவது இரிசி உராய்ந்து ஓர்வகைக் கிரிச்சனக் கூச்சலிடுவது வழக்கம். அக்கூச்சல் இரவில் வண்டிகள் செல்லும்போது கூச்சலிடுமானால் நித்திரை பிடிக்காமல் அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு பயமுறுத்துமாறு பிள்ளைகளுக்கு அந்த சப்தத்தைக் கேட்கவைத்து இரிசி வந்து பிடித்துக் கொள்ளும். இரிசாத்தாள் வருவாள் என்று போதிப்பது வழக்கம். இவ்வகை சிறுபிள்ளைகளுக்கு பயமுறுத்தியப் பொய் இரிசியாத்தாளென்னும் மெய்யுருகொண்டு கறுப்புக்கோழி பலியும் கறுப்பு பிடவைதானமும் பெறுவதைக் காணலாம். காடுகளிலுள்ள ஏரிகளின் அருகே தண்ணீர் மோதுவது ஓர் விகார சப்தங் கொடுக்கும். வவ்வால் முதலிய பட்சிகள் சிலமரங்களிற் தொங்குங்கால் கிளைகள் முறிந்துவிழுவதும் காற்றினாற் சிலகிளைகள் முறிந்துவிழுவதும் வழக்கம். காடுகளில் வெட்டிவிட்ட மரங்களும் பட்டுப் போன மரங்களும் இரவில் கருப்பாக ஆள்நிற்பதுபோல் காண்பது வழக்கம்.இவைகளை அறிந்த