பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அவன் மறுபிறப்பில் நற்குடும்பத்திற் பிறவாது யாவராலும் இகழப்பட்டு அஞ்ஞான மார்க்கத்தை அவன் மனம் நாடி நிற்கும்.

இவ்வுலகில் ஒருவன் துறவிகளைக்காணில் அவர்களுக்கு அன்னமளித்தும் எழியோர்களுக்கிரங்கி தானம்செய்தும் திக்கற்றவர்களை ஆதரித்தும் ஜீவர்கள் மேல் அன்புவைத்தும் ஒரு பிறப்பில் வருவனேல் அவன் மறுபிறப்பில் சிறந்தகுடும்பத்தில் பிறந்து யாவராலும் போற்றி வாழ்த்துதல் பெறுவதுடன் ஞானமார்க்கத்தை அவன் மனம் நாடி நிற்கும்.

இவ்வுலகில் ஒருவன் பலபிறப்புகளில் தசபாரமிதைகளாம் தானம், சீலம், நிக்கஹமர், பிரஞ்ஞா, வீரியா, ஷாந்தி, சத்யா, அதிஷ்டானா, மைத்ரீ, உபேக்ஷா இவைகளை அநுஷ்டானத்திற்குக்கொண்டுவருவானாகில் ஒரு பிறப்பில் பெருங் குடும்பத்திற் பிறந்து அறஹத்து நிலையை அடைவான்.

1. தானாபாரமிதா 2. சீலாபாரமிதா 3. நிக்கஹமாபாரமிதா 4. பிரஞ்ஞாபாரமிதா 5. வீரியாபாரமிதா 6. ஷாந்திபாரமிதா 7. சத்யாபாரமிதா 8. அதிஷ்டானாபாரமிதா 9. மைத்ரீபாரமிதா 10. உபேக்ஷாபாரமிதா

தானமாவது : அளவுகடந்தது. அதாவது, தன் உயிரைக் கேட்பினும் கொடுத்துவிடக்கூடிய தானம் செய்தல்.

சீலமாவது : மனோவாக்கு காயத்தை சுத்திகரிக்கும் சீலம். அதாவது, நீதியில் நிற்றல்

நிக்கஹமா: லோப, தோஸா, மோஹம் இவைகளற்றும் பரிசுத்த நிலை அடையும் வரையில் பிறர் சுகத்தையே கருதியிருத்தல்.

பிரஞ்ஞா: பரிசுத்த ஞானத்தை விருத்தி செய்தல்

வீரியா: பரிசுத்த நிலையை அடைய விடாமுயற்சியுடனும், தைரியத்துடனும் சிந்தித்துத் தெளிதல்.

ஷாந்தி: தன் புத்திரனைப்போல் சகல உயிர்கள் பேரிலும் அன்பு பாராட்டலும், ஜீவர்கள் செய்யும் குற்றங்களைப் பொருத்து அவர்கள் பேரில் கோபங் கொள்ளாதிருத்தல்.

சத்யா: சத்தியத்தைபேசி சத்தியமாகவே நடந்து சத்தியத்தையே கைப்பற்றல்

அதிஷ்டானா: நன்மார்க்கத்தினின்று சற்றும் மலைபோல் பிறழாதும் முன் தணிந்த அவாக்களை எழவிடாமலுமிருத்தல்.

மைத்ரீ: தாயானவன் தன் ஏகபுத்திரனைக் காப்பாற்றுதல்போல் சகல உயிர்கள் பேரிலும் ஜீவகாருண்யத்தைக் காட்டல்.

உபேக்ஷா: இப்பூமியைக் கொத்தி எவ்வளவு துன்பம் செய்தபோதினும் அது நற்பலனையே தரும் அதுபோல் மித்திரன் அல்லது விராதி இவர்கள் செய்யும் துன்பங்களைக் கவனியாது நன்மெய்களை செய்துவரல் அதாவது, மித்திரனையும் விரோதியையும் சமமாக பாவித்தல் என்று உபதேசித்தார். அதுகேட்ட யாவரும் ஆனந்தமுற்றார்கள்.

23. புக்கஸாதி துறவு பூண்ட காதை

ஒரு குமரபருவமுள்ள புக்கஸாதி என்னும் பெயருடையவன் பகவனைக் காணவேணுமென்றும், பலருடைய நன்மெயின் பொருட்டே துறவடைந்து பலருக்கும் போதித்துவரும் தன்மத்தைக் கேட்கவேண்டுமென்றும், கேட்டபின் உலகைத் துறந்து காம்பீரமான பிக்க்ஷூ சங்கத்தில் சேர்ந்து மேலான பதவியை அடையவேண்டுமென்னும் அவாக்கொண்டு பலவிடங்களில் பகவனைத் தேடி அலைந்து கடைசியாக இராஜமா கிரஹத்துக்கு வந்து சேர்ந்து (பக்கவா) என்னும் குடும்பியின் வீட்டினருகில் சென்று அன்றிரவு தங்க இடந்தர வேண்டுமென இரங்கிகேட்க அக்குடும்பியும் அவனை அழைத்து உணவளித்து தன்வீட்டில் அன்றிரவு தங்கவும் இடம் அளித்தான். அன்று இரவு நடுஜாமத்தில் பகவன் ஓர் அடர்ந்த காட்டில் தங்கி (கருணாபாவனா ) கருணை சமாதியிலிருக்குங்கால் ஓர் குமரன் இராஜகிரஹத்தில் வந்து ஒரு குடும்பியின் இல்லத்தில் தங்கி துறவியாக வேணுமென்கிற ஒரேவைராக்கியம் பூண்டிருக்கின்றானெனத் தெரிந்து உடனே சமாதியினின்று எழுந்து புக்கசாதி தங்கியிருக்கும் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர். சற்று தாமதித்து புக்கசாதியை