பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 385

சத்துருவிற்கு கோபத்தை மூட்டி விம்பாசாரனை கொலை செய்யும்படி ஏகினான்.

அவ்வார்த்தையை ஏற்றுக்கொண்ட அஜாதசத்துரு நள்ளிரவிற் சென்று தனது தந்தையைக் கொல்லும்படி ஓர் ஆளை ஏவிவிட்டு பிருமனிடஞ் சென்றான்.

பிருமனும் அஜாதசத்துருவைக்கண்டு முடிந்ததா என்றான். அதற்காகவே ஆளை நியமித்து வந்திருக்கின்றேன் கூடிய சீக்கிரம் சங்கதிவருமென்று கூறினான்.

அதனை வினவிய பிருமன் அஜாதசத்துருவைக் கோபித்து அரண்மனை யருகில் ஆட்கள் போகமாட்டார்கள் வேவுகர்களும் விடமாட்டார்கள் நீரே அவ்விடஞ்சென்று விம்பாசாரனைக் கொலைபுரிய வேண்டுமென்று விரட்டினான்.

பிருமன் மொழிக்கு மறுமொழி கூறாது அஜாதசத்துருவானவன் அரண்மனைச்சேர்ந்து இரவில் தந்தை யுலாவுமிடத்தை நோக்கினான். அங்கு தான் முன்பு அநுப்பிய ஆளானவன் அரசவுடையணிந்து வேவுகரறியாது அரண்சேர்ந்து விம்பாசாரன் வெளிவரின் கொலைபுரிய உலாவிக் கொண்டிருந்தான்.

அவனது உடையின் மாறுதலை அறியா வஜாதசத்துரு தந்தையே உலாவிக்கொண்டிருக்கின்றாரென்று பதுங்கி வாளைவீசி அவனை இரண்டு துண்டமாக்கிவிட்டு ஓடி பிருமனை அணுகி முடித்துவிட்டேனென்றான்.

அதனை வினவிய பிருமன் ஆனந்தங்கொண்டு இனி நாமிங்கு இருக்கப் படாது புத்தரிருக்குமிடத்தைக்கண்டு அவரையும் முடித்துவிடவேண்டுமென்று அம்பும், வில்லும், யானையும், ரதமுங்கொண்டு வெளியேறி வந்து பகவனை பல இம்சைகள் புரிந்தும் பலியாது அவர் பாதத்தைப் பற்றிக்கொண்டு கெஞ்சுங்கால் யானையுரத்தோன் இருவரையும் நோக்கி சிறுவர்களே! விம்பாசாரனை முடித்துவிட்டீர்களோ என்றார்.

இருவர் செவியிலும் அம்மொழி கேட்டவுடன் இடியுண்ட சர்ப்பம்போல் திகைத்து பயமும் அழுகையுந்தோன்றி ஐயனே! விம்பாசாரனை மடித்து விட்டோமென்றார்கள்.

சிறுவர்களே! கொதித்த உள்ளஞ் சுட்டழியுமேயன்றி குளிர்ந்த உள்ளம் ஒருக்காலும் அழியாது. நீங்கள் கொதிப்பேற்றி அனுப்பிய ஆளை நீங்களே கொலை புரிந்து இன்னுங் கொதிப்பேறி இவ்விடம் வந்துவிட்டீர்கள். ஆயினும் உங்களுள்ளக்கொதிப்புகள் யாவும் பனிபருவதத்தில் மோதி பாழடைந்து விட்டதினால் அதனுணர்வைக்கொண்டேனுந் தீவினைகளை அகற்றி நல்வினையைப் பெருக்குங்கோளென்றார்.

அவ்வருள்மொழியை வினவிய இருவரும் ஐயனைவணங்கி எங்கள் குற்றங்களை மன்னிக்கவேண்டுமென்றார்கள்.

பகவன் இருவரையும் நோக்கி சிறுவர்களே! நீங்கள் இருவரும் விம்பசாரனிடஞ்சென்று நீங்கள் செய்துவந்த தீவினைகள் யாவையும் விளக்கி இனி யாங்கள் செய்யவேண்டிய நல்வினைகள் யாதென்று உசாவுவீர்களாயின் அவரவற்றை விளக்குவார். நீங்கள் அவரையே குருவாக வழிபட்டொழுகுவீர்களாயின் துக்கத்தைப் போக்கிக்கொள்ளுவீர்களென்றோதி இராஜகிருகம் அனுப்பிவிட்டு குன்றைவிட்டிழிந்து காடாகும் முல்லை நிலத்தில் சேர்ந்தார்.

முல்லைநில மாக்கள் யாவரும் மாதவனைக்கண்டு வணங்கி பாலைக் கொண்டு வந்து கொடுத்து அருந்தும்படி வேண்டிக்கொண்டார்கள்.

அப்பாலில் நெய்யுந் தயிறுங் கலந்திருப்பதைக்கண்டு அதைப் பிரிக்கும் வகைத் தெரியாதவர்களாயிருக்கின்றார்கள் என்று அறிந்து அவர்களிடமுள்ளப் பால்கள் யாவையுங் கொண்டுவரச்செய்து ஒரேசாடியிலிட்டு மத்தினால் கடையும்படிச்செய்து அதன்மேல் மிதந்த வெண்ணெய்யை எடுத்து ஓர் பாத்திரத்தில் வைத்தபோது அஃதின்னவஸ்துவென்றும், இவ்வகை உபயோகத்திற்கு உதவுமென்றும் அறியாமல் திகைத்து நின்றார்கள்.

அசோதரை நெஞ்சுவிடு தூது - மகா ராஜாதுறவு

முல்லை புகுந்து முதலெழுமு மாய்ச்சியர்தம்