பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 393

இடைவிடாது சாதியுங்கள். இவ்விதமான பரிசுத்த ஞானவிசாரிணையால் நீங்கள் பிறவி என்னும் சக்கரத்தில் சிக்காது தப்பித்துக்கொள்ளுவதுமன்றி துக்கத்தினின்று விடுபெற்று நீங்கள் கண்டகாட்சியை ஏனைய சகோதிரர்களுக்கும் வழிகாட்டிகளாகிய ஒளிப்போன்றிருப்பீர்கள். துக்கமற்று சுகம்பெறுவீர்கள். நிப்பாணமென்னும் கரைசேருங்களென பகவன் போதனையை நிறுத்தினார். பிக்க்ஷு குழாங்கள் பகவனை முறைப்படி வந்தனை வழிபாடு செய்தனர்.

27. சுகவர்க்க காதை

பகவன் உலகெங்கும் சுற்றி சத்தியதன்மத்தைப் போதித்து மக்களுக்கு சுகவழிகளையூட்டி அஹிம்சா தன்மத்தை நாட்டிவருங்கால் இராஜகிருகத் துக்கடுத்த ஓர் குக்கிராமத்திற்குச்சென்று அங்குள்ள ஓர் மரத்தடியில் உட்கார்ந்து உள்விழிபார்வையாம் மௌனத்தில் லயித்து ஏழுநாள்வரையில் கண்திரவாமலும், மூச்சோடாமலும் இருக்கக்கண்ட அக்கிராமவாசிகள் திடுக்கிட்டு ஓ! ஓ! இச்சிறமணர் இறந்துவிட்டாரென்று கருதி இவரது தகப்பன் மண்முகவாகுவை இவரெப்படி கட்டைகளை அடுக்கி தகனஞ்செய்துவிட்டாரோ அதுபோல் இவரையும் நாம் தகனஞ்செய்துவிடலாம் என்று எண்ணிக் கட்டைகளை அடுக்கி இவரை வளர்த்தி தீயினை மூட்டிவிட்டார்கள். கட்டைகள் எறிந்து தணிந்தும் இவரது தேகத்திற்கு யாதொரு தீங்குமின்றி மறுபடியும் அம்மரத்தடியில் போய் உழ்க்கார்ந்துகொண்டார். அதனைக்கண்ட அக்கிராம வாசிகள் யாவரும் பயந்து மும்முறை வணங்கி ஐயனே! தங்களை ஏதோ மகத்துவம் பெற்றப் பெரியோரென்று அறியாது தணலை மூட்டிவிட்டோம். யாங்களறியாமல் செய்தச் செயல்களை மன்னித்து ரட்சிக்க வேண்டுமென் றிரைஞ்சினார்கள்.

அவற்றை வினவிய மாதவன் கிராமவாசிகளை நோக்கி திருவாய்மலர்ந்து அன்பர்களே! நிருவாணம் பெற்ற ததாகதர் கோபமுள்ளோர் மத்தியில் கோபமில்லாமலும், காமமுள்ளோர் மத்தியில் காமமில்லாமலும், துக்கமுள்ளோர் மத்தியில் துக்கமில்லாமலும், பற்றுள்ளோர் மத்தியில் பற்றில்லாமலும், மரணமுற்றோர் மத்தியில் மரணமில்லாமலும், நித்திய நிலையில் இருப்பவராதலின் நெருப்பின் சுடுகையும், நீரின் குளிர்ச்சியும், வாயுவின் மோதலுமோர் தீங்குஞ்செய்யாதென்று கூறிய அமுதவாக்கைக் கேட்டுணர்ந்த கிராமவாசிகளில் சில விவேகிகள் முயன்று சத்தியசங்கத்தை நாட்டி ததாகதரின் தன்மோபதேசம் பெற்று சமணநிலையுற்று சத்துவசாதனத்தில் நிலைத்து விட்டார்கள்.

மணிமேகலை

எண்ணருஞ் சக்கரவாள மெங்கணும் / அண்ண லறக்கதிர் விரிக்குங்காலை

சூளாமணி

சாதுயர் நீக்கிய தலைவன் றவமுனி / சங்க தருமன் றாமெக் கருளிய

திரிமந்திரம்

அற்றார் பிறவி யவரிரு கண்களை / வைத்தார் புருவத்திடையே பார்க்க
வொத்தே யிருக்க வுலகெலாந்தோன்றும் / எத்தாலுஞ் சாவில்லை யிறைவனாமே.

இடைக்காட்டு சித்தர்

சாவாதிருந்திடப் பால்கற / தன்னிலிருந்திடும் பால்கற

ஔவை குறள்

சாகாதிருந்த தலமே மவுனமது / ஏகாந்தமாக விரு
மறவா நினைவா மவுனத்திருக்கில் /பிறவா ரிறவார் பினை
இதுமுத்தி சாதன மென்றேட்டில் வரைந்து / பதித்து வைத்தனன் குருபார்

தாயுமானவர்

சுந்ததமும் வேதமொழியா தொன்றைப் பற்றினது / தான்வந்து முற்று மெனலால்
சுகமீதிருந்தாலு மரணமுண்டென்பது சதா / நிஷ்டர் நினைவதில்லை.

மச்சமுனியார்

இறந்து போனவர்க் கென்ன மெஞ்ஞானங் காண்,
யேச்சி யேச்சி யிகத்துள்ளோர் தூஷிப்பார்.