பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 397

புன்னகைக்கொண்டு ஆனந்தா! நீரிதுகாரும்கேட்டு வந்த அறவுரையின் பலன் இதுதானோ. தோற்றும் பொருட்கள் யாவும் கெடுமென்பதை கேட்டிலையோ, கண்ணாறக் கண்டறிந்திலையோ பயிரங்கமாக தோற்றவுருவம் பாசபந்த பற்றுக்குள்ளாகி வாணமென்னும் ஆசைக்கயிற்றால் கட்டுண்டிருக்கும் அளவும் பிறவி என்னும் சமுத்திரத்தைக் கடவாது இராகத்துவேஷமோக வலைகளால் பிடிபட்டு பிணி மூப்புச் சாக்காடென்னும் அவத்தையுண்டு இறப்பதும் பிறப்பதுமாகிய துக்கத்தையே அநுபவித்துவருவான்.

தோற்றாதுலவும் அந்தரங்கமாம் உள்ளமானது பாசபந்தக் களிம்புகளற்று ஆசைக்கயிறுகளை அறுத்து நிருவாணம் பெற்றபோது காமவெகுளி மயக்கங்களடங்கி அலையற்ற கடலாம் சுகவாரியில் நிலைப்பன். அந்நிலையை வாய்த்தவன் பிறவிப் பிணி மூப்பு சாக்காடென்னும் அவத்தையை ஜெயித்துக் கொண்டவனாதலின் இறப்புப் பிறப்பற்ற சுகநிலையும் இரவுபகலற்ற வொளிநிலையில் நின்று சகலவுலகங்களையும், சகல சீவர்களின் எண்ணங் களையுந் தனது களங்கமற்ற உள்ளக்கண்ணாடியால் உணர்ந்து உலக மக்களுக்கு நீதியின் சுகங்களையும் அநீதியின் கேடுகளையும் விளக்கி தான் பெற்ற சுகநிலையைத் தனது அன்பின் பெருக்கத்தால் ஏனைய மக்களும் பெறும்படிச் செய்வான். இதுவே நிருவாணம் பெற்றோன் அடையாளமென்று கூறிவருங்கால் மறுபடியும் ஆனந்தன் மாதவனின் பாதத்தைப் பற்றிக்கொண்டு ஐயனே! நீவிர் பரிநிருவாணமுற்றபின்பும் தமது தரிசனம் கிட்டுமோ கிட்டாதோ அதனை விளக்கி ஆட்கொள்ளவேண்டுமென்று இரைஞ்சினான்.

ஆனந்தா, நரர்களின் கூட்டுரவும், செயலும், தோற்றமும் நரர்களுக்கே விளங்காது மக்களுக்கு விளங்கும். மக்களின் கூட்டுரவும் செயலும் தோற்றமும் மக்களுக்கே விளங்காது தேவர்களுக்கு விளங்கும்.

அதாவது விவேகமற்றோர் செயலை அற்ப விவேகிகள் அறிவர். அற்ப விவேகிகளின் செயலை மிகுவிவேகிகளறிவர். ஆதலின் விவேக மிகுத்தோர் செயலையும் தோற்றத்தையும் விவேகமிகுத்தோர்களே அறிவர். அவ்விவேக மிகுத்தோர் தங்கள் விவேக மிகுதியால் வாணமென்னும் பாசபந்தக் கயிறுகளற்று நிருவாணமாம் பற்றற்றபோது களங்கமற்ற இதயமுடையவர்களாய் சுயம்பிரகாச உருவாய் கருணை ஒளி என்றும், சாந்த ஒளி என்றும், அந்தர் அங்கமென்றும், உண்மெய் என்றும் அழியா உரு என்றும், தன்மகாயமென்றும், சத்திய உருவமென்றும், நித்தியரூபமென்றும், கொண்டாடப்பெற்றோர் தேவரென்றும், பிரமரென்றும் கொண்டாடும் ஏழாவது தோற்றமாவர்.

எக்காலுமுள்ள பூமியினின்று தோற்றும் புற்பூண்டுகள் முதற்றோற்ற மாகும். புற்பூண்டுகளினின்று தோற்றும் புழுக்கீடாதிகள் இரண்டாவது தோற்றமாகும். புழுக்கீடாதிகளினின்று தோற்றும் மட்சம் பட்சிகள் மூன்றாவது தோற்றமாகும். மட்சம் பட்சிகளினின்று தோற்றும் ஊர்வன தவழ்வனங்கள் நான்காவது தோற்றமாகும். ஊர்வன தவழ்வனங்களினின்று தோற்றும் மிருகர் நரர்கள் ஐந்தாவது தோற்றமாகும். மிருகர் நரர்களின்று தோற்றும் மக்கள் மனுக்கள் ஆறாவது தோற்றமாகும். மக்கள் மனுக்களினின்று தோற்றும் தேவர், பிரமர் ஏழாவது தோற்றமாகும்.

இவ்வெழுவகைத் தோற்றமாம் எழுபிறப்புந் தீதெனக் கண்டோர் தாய் வயிற்றிநின்று பிறந்த பிறப்பொன்றும், தேகத்தினின்று சுயபிரகாச ரூபமாய்ப் பிறக்கும் பிறப்பொன்றும், ஆகிய இருபிறப்பால் மாற்றிப்பிறப்பதே பரிநிருவாண மென்னப்படும். ததாகதர் தான் கண்ட காட்சியை உலகத்தில் தோன்றியுள்ள சகல மக்களுக்கும் விளக்கிப் பூர்த்தி செய்து சத்திய சங்கங்களை நிலைக்க நாட்டிவிட்டபடியால் பூர்த்தியுற்று மாற்றிப் பிறக்கும் பரிநிருவாண காலத்தை சகலருக்குந் தெரிவித்து தெய்வநிலை பெற்றோர் தெரிசித்து ஆனந்த பூர்த்தியினிலைக்கவும், மக்கள் நிலை வாய்த்தோர் முன்னோக்கி ஈடேறும் வழி தேடவும் உள்ள சுகவழிகளை விளக்கப் போகின்றார். அவ்வழி நடந்து பிறவியின் சமுத்திரத்தைக் கடக்க முயலாது இராகத்துவேஷ மோகமென்னும் அலைகளால் மொத்துண்டு இறப்புப் பிறப்பென்னும் துக்கத்தில் வதைந்து