பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

398 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இருளடைந்திருப்போருக்கு ததாகதர் தெரிசனங் கிடைப்பது அரிதாகும். ஆதலின் ஆனந்த பூர்த்தி அடையவேண்டுமாயின் உம்மெய் நீர் தெரிசித்து உள்ளக்களங்கைப் போக்கிக்கொள்ளுவீராக.

உமதுள்ளக் களங்கமாம் மனமாசு கழுவியவிடத்து களங்கமற்றக் கண்ணாடியாம் சுத்த இதயத்துள் மக்களுக்குத் தோற்றும் பொருட்களும் தோற்றா பொருட்களும், ரூபகாயங்களும், தன்மகாயங்களும், புறமெய்களும், உண்மெய்களும், பயிர் அங்கங்களும், அந்தர் அங்கங்களும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கும்.

ஆனந்தா, ஒவ்வொரு சீவராசிகளும் அதனதன் நல்வினைச்செயலால் நாளுக்குநாள் உயர்ந்துகொண்டேவந்து மக்களாம் மனுக்களென்னும் பேர்பெறுவது மிக்க மேலாயதாகும். அம்மனுக்களில் ஒருவராய நீவிர் தேவரென்னும் உயர்நிலைப் பெறுவழியைநாடாது ததாகதரை நாடுவதால் யாது பயன். ததாகதரோ வழிகாட்டியாவர். அவ்வழி நடந்தோர் முத்திரைக் கரையாம் நிருவாணம் பெற்றோராவர். அவர்களே மனுக்களில் உணர்ந்து தெய்வநிலைப் பெற்றவர்களாகும் இவர்களையே ஏழாவது தோற்றமென்றுங் கூறப்படும்.

ஒவ்வோர் சீவராசிகளின் தோற்றங்களை அழிக்காமலும், அதன் உயர்வு நிலைகளைக் கெடுக்காமலும், அதன் சாந்தநிலைகளைக் கொறூரப் படுத்தாமலும் முன்னேறச்செய்வதே முநிவோர்களின் கடனாகும். முன்னேற முநியு மக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளுவதினும் தங்களை அடுத்த சீவர்களின் உயர்வைக் கெடாது கார்த்தலே காருண்யமாகும்.

அக்காருண்ய திரட்சியோரே உள்ளொளி உருவாய் மாற்றிப் பிறந்து நட்சேத்திரம் பெற்று அகண்டத்துலாவி என்றுமழியா நித்தியநிலையில் நிற்பர்.

அந்த நித்திநிலையோரை அநித்தியநிலையோர்க் காண்பது அரிது அரிதேயாம். நித்தியவழியில் சென்று நித்தியநிலையில் நிற்போர்களே நித்தியர்களை நித்தந் தெரிசிப்போர்களாவர்.

காருண்யத்தால் மக்கள் ஈடேற்றத்தைக் கருதி ஒளிவுருவாய்த்தோற்றினுந் தோற்றுவர். அத்தோற்றங்கண்டுந் தங்களுள்ளொளியைத் துலக்காமலும் காணாமலும் கலங்கிநிற்போர் மாறா பிறவியில் பிறந்து பிணிமூப்பால் வாதைப்பட்டு தீராத் துன்பத்திற் சுழன்றுதிரிவர்.

பிணி மூப்பாம் தீராத் துன்பமடைந்து மாறாப்பிறவியில் உழலாமல் இருக்கவேண்டுமென்னும் சுப இச்சையை உள்ளவர்கள் பாபச்செயலை அகற்றி இதயத்தை சுத்திசெய்து மனமடங்கி மாற்றிப் பிறக்கும் வழியறிதல் வேண்டும். அவ்வழியாம் பரிநிருவாணத்தையே தற்போது ததாகதர் விளக்குவார் விழித்திருங்கள்.

ஆனந்தா! உலகப்பொருட்களொன்றுங் கெடாது மாறுதலடைந்துக் கொண்டிருப்பது உளளசுவாபமாகும். அவற்றுள் புற்பூண்டுகளிலிருந்து மாறுதலடைந்து புழுக்கீடாதிகளாகத் தோற்றியவைகளில் மக்களென்னும் வாலநிலை வாய்த்தோர் முன்னேறி மிருக சேர்க்கைக் கடந்து மானமின்னது நிருமான மின்னதென்று உணர்ந்து மானிடர் மநுக்களென்னும் பெயர் வாய்த்தார்கள்.

மக்களெனத் தோன்றி மானமுண்டாய் மானிடரென மாறுதலுற்றோர் என்றென்றும் மானமாம் மானிடநிலை நில்லாது மானமற்றுக் கள்ளை அறுந்துவாராயின் மேனோக்கும் வழியற்று மக்கள் நிலைக்கே தாழ்வர்.

மற்றுஞ்சிலர் மானமற்று விபச்சாரநிலையில் உழல்வராயின் மேனோக்கும் வழியற்று மக்கள் நிலக்கே தாழ்வர்.

மற்றுஞ் சிலர் மானமற்று அன்னியர்பொருளை அபகரித்துழல்வராயின் மேனோக்கும் வழியற்று மக்கள் நிலைக்கே தாழ்வர்.

மற்றுஞ் சிலர் சீவகாருண்யமற்று கொலைபுரிந்துழல்வராயின் மேனோக்கும் வழியற்று மக்கள் நிலைக்கே தாழ்வர்.

மற்றுஞ் சிலர் மெய்யற்று பொய்யைச்சொல்லி வஞ்சித்துழல்வராயின் மேனோக்கும் வழியற்று மக்கள் நிலைக்கே தாழ்வர்.