பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 401


அவரை யடுத்தது முதல் அவரது முகத்தில் சினக்குறிப்பேனும், விழிப்பில் சினப்பார்வையேனும் கண்டறியோம். சதா சாந்தமும் சதா அன்பும் சதா கருணையுங் கண்டு வருகின்றோம்.

ஈதன்றி உலகத்தில் தோன்றியுள்ள நமக்கு நாளுக்குநாள் தேகந்தளர்ந்து நரைதிறை மூப்புவந்தமைந்து விழிபஞ்சடைந்து கூன்வளைந்து தளர்ந்து தடியூன்ற வேண்டியதைக் காண்கின்றோம். பகவனோவென்னில் நாளுக்குநாள் மங்காமலும், முகதேஜசு மாறாமலும் பொன்மேனி குன்றாமலும், அமுதவாக்கழியாமலும் இருப்பதுகொண்டு இவரே பிறப்பை வென்ற பெரியோன், இவரே பிணியை வென்ற பெருமாள், இவரே மூப்பை வென்ற முநிவன், இவரே மரணத்தை வென்ற மாதவனெனக் கொண்டாடி அவரது திருவடிகளை இருகப்பற்றி தேவரீர் திருத்தொண்டு சதா நிலைத்து உலக சீவர்கள் உயர்ந்துய்யுமாறு பிறப்பிலுண்டாகுந் துக்கங்களையும் பிறவாமலிருக்கும் சுகங்களையும் பிணிகளால் உண்டாகுந் துக்கங்களையும் பிணிகளணுகாதிருக்கும் வழிகளையும் மூப்பால் உண்டாகுந் துக்கங்களையும் மூப்பணுகாதிருக்கும் சாதனங்களையும் மரணவஸ்தையின் துக்கங்களையும் மரணத்தை ஜெயிக்கும் பாதைகளையும் இவ்வடியார்களுக்கு மேலும் மேலும் விளக்கி அஞ்ஞான இளந்தையை நீக்கி மெஞ்ஞான முத்தர்களாகச் செய்யவேண்டுமென்று இரைஞ்சிநின்றார்கள்.

ஓ! சகோதிரர்களே! அஞ்ஞானமாம் இளந்தைப்பருவங் கடந்து மெஞ்ஞாயமாம் முத்தனாவதே முத்திப்பேறாகும்.

அம்முத்தி நிலையையே சகல துக்கங்களும் அற்றவிடமென்றும், சுகவாரியென்னும் தேஜோவுண்மயமென்றுங் கூறத்தகும்.

பிறவியால் உண்டாகுந் துன்பங்களைக்கண்டவன் பிறவிக்கஞ்சுவான். பிணிகளால் உண்டாகுந் துன்பங்களைக் கண்டவன் பிணிகளுக்கு அஞ்சுவான். மூப்பினால் உண்டாகுந் துன்பங்களைக் கண்டவன் மூப்பிற்கு பயப்படுவான். மரணத்தால் உண்டாகுந் துன்பங்களைக் கண்டவன் மரணத்திற்கு பயப்படுவான்.

இவைகள் யாவும் மானிகளாம் விவேக மிகுத்தவர்களுக்கே விளங்கும். ஆதலின் ஆனந்தா உலகத்தில் தோற்றுவனயாவும் பிறப்பென்றும், மறைவன யாவும் இறப்பென்றுங் கூறப்படும்.

இவற்றுள் தோற்றும் பொருட்கள் யாவும் கெடுமென்று உணர்ந்து அதாவது கடிகைக்குக்கடிகை அழிந்துபோமென்றறிந்து மண்ணின்மீதுள்ளப் பற்று பொன்னின் மீதுள்ளப்பற்று பெண்ணின் மீதுள்ளப்பற்றாகிய அவாவை ஒழிப்பதே பிறவியை அறுக்கும் வழியாகும். அவாவை ஒழித்து பாசபந்த பற்றுக்களாம் மனக்களங்கமற்றவிடமே பிறவியற்ற நிலையாகும். அப்பிறவியற்ற நிலையே பிணியை ஜெயித்த சுகமாகும். பிணியை ஜெயித்த சுகமே மூப்பை ஜெயித்த முதலாகும். மூப்பை ஜெயித்த முதலே மரணத்தை ஜெயித்து என்றும் அழியா நித்திய நிலையாம் நிருவாணத்தைப் பெறுவன்.

அந்நிருவாண சுகமாம் பேரானந்தத்தை நோக்காதவன் அவாமிகுதியாம் பற்றினால் மாறாபிறவி துன்பமும், தீரா பிணிவாதையும், தள்ளாடி விழும் மூப்பின் கேடும் பஞ்சாவஸ்தையாம் பிராணவாதை கொண்டிறந்து பற்றிய பற்றால் உருவம் தோன்றி தோன்றி வினைபோக உருவாய் துக்கத்தில் மாறி மாறி சுழன்றுதிரிவான்.

துக்கத்திற்குப் பீடமாம் பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு வாய்மெயே தோற்றிய தேகத்தாற் காணும் அநுபவக் காட்சியாகும். இவ்வநுபவக் காட்சியால் துக்கம், துக்கோற்பவம், துக்கோற்பவக் காரணம், துக்க நிவாரணமாம் அஷ்டாங்க மார்க்கத்திற் சென்று உண்மெயில் அன்பை வளர்த்துங்கள். அவ்வுள்ளன்பின் மிகுதியால் இராகத்துவேஷ மோகங்கள் மூன்றுந் தன்னிற்றானே நசிந்து தன்மகாயமாம் சாந்த தண்மெயுண்டாய் ததாகதம் பெறுவீர்கள். அத்ததாகத நிலையில் என்றுமழியா ததாகதரைக் காண்பீர்கள். என்றுமழியா சாந்தவுருவாம் தன்மகாயத்தை தன்மகாயத்தோரே காண்பர். பாச பந்தத்தால் அழிந்து கொண்டேவரும் ரூபகாயத்தால் ததாகதரைக் காண்பது அரிது அரிதேயாம்.